அரசியல் கட்சிகளில் உள்ள பல்வேறு அணிகளைப் போல் பாஜகவின் அணிகளாக வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறை ஆகிய விசாரணை அமைப்புகள் செயல்படுவதாக தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக இளைஞரணி சார்பில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க கோரி, தமிழ்நாடு முழுவதும் 50 லட்சம் கையெழுத்து பெறும் இயக்கம் நடைபெற்று வருகிறது. இதையொட்டி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இன்று முதல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களையும் நேரில் சந்தித்து கையெழுத்துப் பெறும் பணியைத் தொடங்கி இருக்கிறார். அதன்படி சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று காங்கிரஸ் கட்சி தலைவர்களை அவர் நேரில் சந்தித்தார்.
அப்போது மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் நீட் தேர்வு விலக்கு கோரும் கையெழுத்து இயக்கத்தில் கையெழுத்திட்டனர்.
இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ”நீட் தேர்வு விவகாரம் திமுகவின் பிரச்சினை மட்டுமல்ல... அது தமிழக மாணவர்களின் பிரச்சினை. நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அனைத்து கட்சியினரையும் நேரில் சந்தித்து கையெழுத்து பெற இருக்கிறோம்.
தமிழக ஆளுநரை மாற்ற வேண்டாம் என ஏற்கெனவே முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியின் பிரச்சாரத்தை, ஆளுநர் ஏற்கெனவே துவங்கி விட்டார்” என்று சொன்னார்.
அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை சோதனைகள் நடைபெற்று வருவது குறித்தான கேள்விக்கு பதிலளித்த உதயநிதி, “அரசியல் கட்சிகளில் வழக்கறிஞர் அணி, மருத்துவர் அணி போன்ற பல்வேறு அணிகள் இருப்பது போல், பாஜகவின் அணிகளாக வருமானவரித் துறையும் அமலாக்கத் துறையும் செயல்படுகிறது” என்றார்.