`மீண்டும் சிவசேனா பவனில் அமர்வேன்'- முதல்வர் பதவியை ராஜினாமா செய்த உத்தவ் தாக்கரே சபதம்

`மீண்டும் சிவசேனா பவனில் அமர்வேன்'- முதல்வர் பதவியை ராஜினாமா செய்த உத்தவ் தாக்கரே சபதம்

மீண்டும் சிவசேனா பவனில் அமர்வேன் என்றும் என் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டுவேன் என்றும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த உத்தவ் தாக்கரே சபதம் எடுத்தார்.

மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தது சிவசேனா கட்சி. இந்நிலையில், முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அவரது எம்எல்ஏக்கள் 30க்கும் மேற்பட்டோர் திடீரென போர்க்கொடி தூக்கினர். இதனால், முதல்வர் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டது. இந்நிலையில், உத்தவ் தாக்கரேவுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அவரது கட்சி எம்எல்ஏக்கள் அறிவித்ததுதான் உச்சக்கட்ட பரபரப்புக்கு காரணம்.

இதனிடையே, மகாராஷ்டிராவில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டுள்ள நிலையில் ஆளுநர் உத்தரவுக்கு எதிராக சிவசேனா கொறடா சுனில் பிரபு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கில் நேற்றிரவு தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், உத்தவ் தாக்கரே அரசு நாளை (இன்று) பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டதோடு, இறுதி உத்தரவுக்கு உட்பட்டது என்றும் கூறியிருந்தது.

இந்நிலையில், முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார். தனது கடிதத்தை ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியிடம் வழங்கினார். இதனை ஏற்றுக் கொண்ட ஆளுநர், மாற்று ஏற்பாடு செய்யப்படும் வரை முதல்வராக தொடருமாறு உத்தவ் தாக்கரேவை கேட்டுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்ட உத்தவ் தாக்கரே, "நான் எதிர்பாராத விதத்தில் பதவிக்கு வந்தேன். அதே பாணியில் வெளியே செல்கிறேன். நான் நிரந்தரமாகப் போகப் போவதில்லை. இங்கேயே இருப்பேன். மீண்டும் சிவசேனா பவனில் அமர்வேன். நான் என் மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டுவேன்" என சபதமெடுத்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in