‘வாக்குகளுக்காக சொந்த பெற்றோரின் படத்தை பயன்படுத்துங்கள்’ - ஷிண்டேவிடம் பாயும் உத்தவ் தாக்கரே!

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

ஏக்நாத் ஷிண்டே எனக்கு துரோகம் செய்துவிட்டார். அவர் தனது தந்தையின் படங்களைப் பயன்படுத்தி ஓட்டு கேட்க வேண்டும். சிவசேனாவின் தந்தையின் படங்களைப் பயன்படுத்தி ஓட்டுப் பிச்சை எடுப்பதை நிறுத்த வேண்டும் என்று சிவசேனாவின் தலைவர் உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சித்துள்ளார்

சிவசேனாவின் கட்சி பத்திரிகையான சாமனாவுக்கு உத்தவ் தாக்கரே அளித்துள்ள பேட்டியில், “ எனது ஆட்சி போய்விட்டது, முதல்வர் பதவி போய்விட்டது, எனக்கு எந்த வருத்தமும் இல்லை. ஆனால் எனது சொந்த மக்களே துரோகிகளாக மாறிவிட்டனர். நான் பக்ஷ பிரமுக், கட்சியின் தலைவர். பெரிய கழுத்து அறுவை சிகிச்சைக்குப் பிறகு என்னால் நகர முடியாத நேரத்தில் துரோகிகள் எனக்கு எதிராக தீவிரமாக சதி செய்து கொண்டிருந்தனர். இந்த வேதனையான யதார்த்தத்துடன் நான் எப்போதும் வாழ்வேன். நான் ஒருவரை நம்பி கட்சியை ஒப்படைத்தேன். அவருக்கு நம்பர் டூ அந்தஸ்து கொடுத்தேன். கட்சியை கவனித்துக் கொள்வீர்கள் என்று நான் உங்களை நம்பினேன், அந்த நம்பிக்கையை நீங்கள் உடைத்தீர்கள்," என்று ஏக்நாத் ஷிண்டே குறித்து நேரடியாக பேசியுள்ளார்

தொடர்ந்து பேசிய அவர், “பால்தாக்கரேவின் மரணத்திற்குப் பிறகும் சிவசேனாவைத் தக்க வைத்துக் கொண்டதை பலராலும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. காந்திகளிடமிருந்து காங்கிரஸைப் பிரிக்க விரும்புவதைப் போல அவர்கள் சிவசேனாவை தாக்கரேக்களிடமிருந்து பிரிக்க விரும்புகிறார்கள். சர்தார் படேலை காங்கிரஸிலிருந்து ஒதுக்கிவைக்க அவர்கள் எப்படி முயற்சி செய்தார்களோ, அதேபோல என் தந்தையையும் சிவசேனாவில் இருந்து ஒதுக்கிவைக்க முயற்சி செய்கிறார்கள். மற்ற கட்சிகளில் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க பாஜக முயற்சிக்கிறது.

ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே
ஏக்நாத் ஷிண்டே, உத்தவ் தாக்கரே

தாக்கரேவையும் சிவசேனாவையும் பிரிக்க முடியாது. என் தந்தையின் புகைப்படத்தை வாக்குகளுக்காகப் பயன்படுத்தாதீர்கள். ஒவ்வொருவரும் தங்கள் சொந்த பெற்றோரின் புகைப்படங்களை வாக்குகளுக்காகப் பயன்படுத்த வேண்டும். துரதிர்ஷ்டவசமாக எனது பெற்றோர் உயிருடன் இல்லை, ஆனால் அதிருப்தியாளர்கள் தங்கள் பெற்றோரின் ஆசியைப் பெற்று வாக்குகளை தேடுங்கள். ஏன் என் தந்தையை திருட வேண்டும்? உங்களுக்கு அர்ப்பணிப்பு இல்லை, கடமை உணர்வு இல்லை, தைரியம் இல்லை. நீங்கள் ஒரு துரோகி. சில சிவசேனா தலைவர்கள் மீது நான் அதிக நம்பிக்கை வைத்தேன். நீண்ட காலமாக அவர்களை நம்பியது எனது தவறு" என உத்தவ் தாக்கரே ஏக்நாத் ஷிண்டேவை கடுமையாக சாடினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in