ஏக்நாத் ஷிண்டேவை கட்சியிலிருந்து நீக்கினார் உத்தவ் தாக்கரே... சிவசேனா யாருக்கு?

ஏக்நாத் ஷிண்டேவை கட்சியிலிருந்து நீக்கினார் உத்தவ் தாக்கரே... சிவசேனா யாருக்கு?

கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறி புதிதாக மகாராஷ்டிர முதல்வராக பதவியேற்றுள்ள ஏக்நாத் ஷிண்டேவை சிவசேனா கட்சியின் தலைவர் பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே நீக்கியுள்ளார்.

சிவசேனா கட்சி யாருக்கு என்ற உரிமைப்போர் தீவிரமடைந்துள்ள சூழலில் ஏக்நாத் ஷிண்டேவை கட்சி அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து உத்தவ் தாக்கரே நீக்கினார். இது தொடர்பாக சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே வெளியிட்டுள்ள கடிதத்தில், ஏக்நாத் ஷிண்டே கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும், தானாகவே முன்வந்து அவர் தனது உறுப்பினர் பதவியை துறந்ததாகவும் கூறியுள்ளார். மேலும், "சிவசேனா பக்ஷ பிரமுகாவாக( கட்சித் தலைவர்) எனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, கட்சி அமைப்பின் சிவசேனா தலைவர் பதவியில் இருந்து உங்களை நீக்குகிறேன். சிவசேனாவில் இல்லாத ஒருவர் தன்னை சிவசேனா முதல்வர் என கூறிக்கொள்ள கூடாது" என்று உத்தவ் தாக்கரே கையெழுத்திட்ட கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

உத்தவ் தாக்கரேவின் மற்றொரு அறிக்கையில், "2019ல் சிவசேனா-பாஜக கூட்டணி வெற்றிபெற்ற பிறகு இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவியை சிவசேனாவுக்கு விட்டுக்கொடுக்காத பாஜக இப்போது எப்படி ஏக்நாத் ஷிண்டேவை முதல்வராக்கியுள்ளது. பாஜக மும்பைக்கு செய்த துரோகத்தை ஷிண்டேவுக்கும் செய்யாமல் இருக்கட்டும்" என தெரிவித்துள்ளார்

சிவசேனா கட்சியின் மூன்றில் இரண்டு பங்கு சட்டமன்ற உறுப்பினர்களை தன்வசம் வைத்துள்ள ஏக்நாத் ஷிண்டே தன்னை சிவசேனாவின் தலைவர் என்று கூறிக்கொண்டாலும், அவர் தன்னை ஒருபோதும் பக்ஷா பிரமுக் (கட்சித் தலைவர்) என்று சொல்லிக்கொள்ளவில்லை. எனவே உத்தவ் தாக்கரேதான் சட்ட ரீதியாக இன்னும் கட்சியின் தலைவராக இருக்கிறார்.

ஏக்நாத் ஷிண்டே சிவசேனா நிறுவனர் பால் தாக்கரேவின் அரசியல் வாரிசாக தன்னை கட்டிக்கொள்வதற்காக ஒரு நுட்பமான குறிப்பினை நேற்று வெளியிட்டார். அதாவது அவர் தனது ட்விட்டர் முகப்பு சுயவிவரப் பக்கத்தில் பால் தாக்கரேவுடன் தான் இருக்கும் படத்தை மாற்றினார். மேலும் தாங்கள்தான் உண்மையான சிவசேனா என்று உச்ச நீதிமன்றத்தில் ஷிண்டே தரப்பு அறிவித்துள்ளது. சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி மற்றும் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து பால் தாக்கரேவின் இந்துத்துவா சித்தாந்தத்தை உத்தவ் தாக்கரே நீர்த்துப் போகச் செய்துவிட்டார் என்றும் ஏக்நாத் ஷிண்டே வாதிட்டு வருகிறார்.

தற்போதைய நிலையில் சிவசேனா கட்சியின் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்கள் ஏக்நாத் ஷிண்டேவின் பக்கம் இருக்கிறார்கள். ஆனால் கட்சி நிர்வாகிகள் பெரும்பான்மையானோர் உத்தவ் தாக்கரேவின் பக்கமே உள்ளனர். எனவே சிவசேனா கட்சி யாராவது ஒருவரின் பக்கம் வருமா அல்லது இருவருக்கும் இல்லாமல் முடக்கப்படுமா என்பது போகப்போகத்தான் தெரியும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in