திரௌபதி முர்முவுக்கு ஆதரவளித்தார் உத்தவ் தாக்கரே: எம்.பிக்களின் அழுத்தம் காரணமா?

திரௌபதி முர்முவுக்கு ஆதரவளித்தார் உத்தவ் தாக்கரே: எம்.பிக்களின் அழுத்தம் காரணமா?

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். பழங்குடியினப் பெண் குடியரசுத் தலைவராக வருவதில் மகிழ்ச்சி அடைகிறோம் என அவர் கூறியுள்ளார்.

திரௌபதி முர்முவை ஆதரிக்கும் உத்தவ் தாக்கரேவின் முடிவு, ஜூலை 18 அன்று நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் யஷ்வந்த் சின்ஹாவை நிறுத்திய எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் உள்ள சிவசேனாவின் 18 மக்களவை எம்.பி.க்களில் 13 பேர் செவ்வாய்கிழமை நடந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களில் பெரும்பான்மையானவர்கள் திரௌபதி முர்முவை ஆதரிக்க கோரிக்கை வைத்தனர். இருப்பினும், ராஜ்யசபா எம்பி சஞ்சய் ராவத் யஷ்வந்த் சின்ஹாவை கடுமையாக ஆதரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிவசேனாவின் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த சில எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தலைவர்கள் திரௌபதி முர்முவை ஆதரிக்குமாறு சிவசேனாவின் தலைமையிடம் கேட்டுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து உத்தவ் தாக்கரே தனது முடிவை அறிவித்துள்ளார்.

முன்னதாக சில சிவசேனா எம்.பிக்கள் வெளிப்படையாகவே திரௌபதி முர்முவை உத்தவ் தாக்கரே ஆதரிக்க வேண்டும் என ஊடகங்களின் முன்னிலையில் கோரிக்கை வைத்தனர். ஏற்கனவே ஏக்நாத் ஷிண்டேவால் சலசலத்து போயுள்ள கட்சியில் மீண்டும் ஒரு மோதல் வெடிக்க வேண்டாம் என்று உத்தவ் தாக்கரே இந்த முடிவை எடுத்துள்ளார். ஆனால் இது குறித்த கேள்விக்கு பதிலளித்த உத்தவ் தாக்கரே, "சிவசேனா எம்.பி.க்கள் என் மீது எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை, ஆனால் அவர்கள் கேட்டுக் கொண்டனர். அவர்களின் ஆலோசனையை கேட்டு திரௌபதி முர்முவை ஜனாதிபதி தேர்தலில் நாங்கள் ஆதரிக்கப் போகிறோம்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in