களத்தில் இறங்கினார் உத்தவ் தாக்கரே... கவுகாத்தியை விட்டு வருவாரா ஏக்நாத் ஷிண்டே?: பரபரக்கும் மகாராஷ்ட்டிர அரசியல் களம்

களத்தில் இறங்கினார் உத்தவ் தாக்கரே... கவுகாத்தியை விட்டு வருவாரா ஏக்நாத் ஷிண்டே?: பரபரக்கும் மகாராஷ்ட்டிர அரசியல் களம்

மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, சிவசேனா கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்திற்காக மும்பையில் உள்ள சேனா பவனுக்கு இன்று மதியம் வந்தார். கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் தற்போது நேரடியாக களத்திற்கு வந்துள்ளதால் அரசியல் ஆட்டம் சூடுபிடித்துள்ளது.

தற்போது நடந்து முடிந்த சிவசேனா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில், "கட்சி மற்றும் அதன் பிரச்சினைகள் குறித்து முடிவெடுக்க உத்தவ் தாக்கரேவுக்கு முழு உரிமை உள்ளது. சிவசேனா என்ற கட்சியின் பெயரையும் அதன் நிறுவனர் பாலாசாகேப் தாக்கரேவைவின் பெயரையும் யாரும் பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள். கிளர்ச்சி எம்எல்ஏக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் பிரிவுக்கு ‘சிவசேனா பாலாசாகேப்’ என்று பெயரிடப்பட உள்ளதாக அந்த அணியில் சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்த அதிரடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சிவசேனா அரசின் அடுத்தகட்ட அதிரடியாக கவுகாத்தியில் முகாமிட்டுள்ள ஏக்நாத் ஷிண்டே முகாமை சேர்ந்த 16 சிவசேனா எம்எல்ஏக்களுக்கு மகாராஷ்டிர சட்டசபை துணை சபாநாயகர் தகுதி நீக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளார். எழுத்துப்பூர்வ பதில்களை தாக்கல் செய்ய ஜூன் 27-ம் தேதி வரை அவர்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்திற்கு பிறகு பேசிய சிவசேனா தலைவர் ஆதித்யா தாக்கரே, "கூட்டத்தில் என்ன பேசப்பட்டது என்பது உங்களுக்கு தெரியும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், எங்களுக்கு எதிராக எம்எல்ஏக்கள் செய்த துரோகத்தை மறக்க மாட்டோம். நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம்" என தெரிவித்தார்.

தனி அணியாக செயல்படுவோம்: அதிருப்தி எம்எல்ஏக்கள்

இந்த சூழலில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணியை சேர்ந்த எம்எல்ஏ தீபக் கேசர்கர், "மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருப்பதால் நாங்கள் சிவசேனாவிலிருந்து வெளியேற வேண்டிய தேவை இல்லை. நாங்கள் யாருடனும் இணையப் போவதில்லை, கட்சியின் தனி பிரிவாக இருப்போம். சிவசேனா பாஜகவுடன் இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் முதல்வரிடம் கூறியுள்ளேன். பாஜக பிரதமருக்கும், மாநில முதல்வருக்கும் இடையிலான ஒற்றுமைதான் மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கியமானது. முதல்வர் தனது அரசியலமைப்பு பொறுப்பை நிறைவேற்றி, எங்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். குற்றவாளிகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், நாங்கள் திரும்ப மகாராஷ்ட்டிரா செல்வது பாதுகாப்பாக இல்லை" என தெரிவித்துள்ளார்

ஏக்நாத் ஷிண்டே முன்வைத்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை மகாராஷ்டிர சட்டசபை துணை சபாநாயகர் இன்று நிராகரித்துள்ளார். 33 அதிருப்தி எம்எல்ஏக்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கையெழுத்திட்டிருந்தாலும், எம்எல்ஏக்கள் யாரும் அதை துணை சபாநாயகர் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்காத காரணத்தால் இந்த தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.

தாக்கப்படும் அதிருப்தி எம்எல்ஏ அலுவலகங்கள்: திரும்ப வருவாரா ஏக்நாத் ஷிண்டே?

புனேவில் உள்ள சிவசேனா தொண்டர்கள் கவுகாத்தியில் முகாமிட்டுள்ள கிளர்ச்சி எம்எல்ஏக்களில் ஒருவரான சட்டமன்ற உறுப்பினர் தானாஜி சாவந்தின் அலுவலகத்தை இன்று சூறையாடினர். ஏக்நாத் ஷிண்டேவின் மகனின் அலுவலகம் உட்பட பல எம்எல்ஏக்களின் அலுவலகங்களும் தாக்கப்பட்டுள்ளதால் மகாராஷ்ட்டிரா முழுவதும் பதற்றம் நிலவுகிறது. இத்தகைய சூழலில் அதிருப்தி எம்எல்ஏக்களின் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதாக ஏக்நாத் ஷிண்டே கூறிய குற்றச்சாட்டை மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் திலீப் வால்ஸ் பாட்டீல் மறுத்தார்.

மும்பை, தானே உள்ளிட்ட பல பகுதிகளில் 144 தடை உத்தரவு போடப்பட்டிருந்தாலும், மாநிலம் முழுவதும் அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சிவசேனா தொண்டர்கள் போராட்டம் நடத்தி வருவதால், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான குழு எப்போது மகாராஷ்ட்டிராவுக்கு திரும்ப வரும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in