அம்பேத்கரின் பேரனுடன் கூட்டணி அமைத்தார் உத்தவ் தாக்கரே: மகாராஷ்டிர அரசியலில் திருப்பம்!

அம்பேத்கரின் பேரனுடன் கூட்டணி அமைத்தார் உத்தவ் தாக்கரே: மகாராஷ்டிர அரசியலில் திருப்பம்!

உத்தவ் தாக்கரே பிரிவின் சிவசேனா கட்சி, பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாதியுடன் வரவிருக்கும் பிரஹன் மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தலுக்கு முன்னதாக கூட்டணி அமைத்துள்ளது.

மும்பை மாநகராட்சி 25 ஆண்டுகளாக சிவசேனாவின் வசம் உள்ளது. இந்த சூழலில், வரவிருக்கும் மும்பை மாநகராட்சித் தேர்தல் தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்றாலும், உத்தவ் தாக்கரே பிரிவின் சிவசேனா தனது தேர்தல் ஆயத்தப் பணிகளைத் தொடங்கியுள்ளது. இதன் ஒருபகுதியாக உத்தவ் தாக்கரே சிவசேனா மற்றும் வஞ்சித் பகுஜன் அகாதி ஆகிய இரு கட்சிகளும் திங்கள்கிழமை செய்தியாளர் சந்திப்பை நடத்தி கூட்டணியை அறிவித்தன.

செய்தியாளர்களிடம் உரையாற்றிய உத்தவ் தாக்கரே, "டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் மற்றும் பாலாசாகேப் தாக்கரே இருவருக்கும் சமூகத்தின் தீமைகளைத் தாக்கும் பாரம்பரியம் உள்ளது. பாஜகவின் தேவையற்ற குழப்பங்கள் மற்றும் பிரச்சினைகளால் சாதாரண மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர், இது எதேச்சதிகாரத்தை நோக்கிய பாதையை அமைக்கிறது. தீய கட்டத்திற்கு எதிராக நிற்க நாங்கள் ஒரு நடவடிக்கை எடுத்துள்ளோம்”என்று கூறினார்.

பாலாசாகேப் தாக்கரேவின் பிறந்தநாளில் உருவாகியுள்ள சிவசேனா (யுபிடி) மற்றும் விபிஏ கூட்டணி மகாராஷ்டிரா அரசியலில் புதிய மாற்றத்தைக் கொண்டுவரும் என்று வஞ்சித் பகுஜன் அகாடி தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் கூறினார். அவர், “இந்த கூட்டணி நாட்டில் புதிய அரசியலின் தொடக்கத்தை குறிக்கிறது. சமூக பிரச்சினைகளை முன்னிறுத்தி போராட்டங்களை நடத்தி வருகிறோம். சமூக பிரச்சினைகளில் வெற்றி பெறுவது வாக்காளர்கள் கையில் தான் உள்ளது, ஆனால் அப்படிப்பட்டவர்களுக்கு போட்டியிட சீட் கொடுப்பது அரசியல் கட்சிகளின் கையில் உள்ளது ” என்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருடனான தனது கருத்து வேறுபாடுகள் குறித்து பேசிய அவர், “அவருடனான எனது கருத்து வேறுபாடுகள் திசை மற்றும் தலைமையின் அடிப்படையிலானவை. தற்போதைக்கு, நாங்கள் இருவர் மட்டுமே. காங்கிரஸ் இன்னும் கூட்டணியை ஏற்கவில்லை. சரத் பவாரும் கூட்டணியில் சேருவார் என்று நம்புகிறேன்” என்று கூறினார். மும்பை மாநகராட்சித் தேர்தலில் ஆளும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சேனா மற்றும் பாஜக கூட்டணியை இந்த கூட்டணி எதிர்கொள்ளும்.

பிரகாஷ் அம்பேத்கர் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் என்சிபியுடன் கூட்டணி அமைக்க முயன்றார். ஆனால் தொகுதிப் பங்கீடு தொடர்பான கருத்து வேறுபாடுகளால் அவர்களது பேச்சுவார்த்தை தோல்வியடைந்தன. அந்த தேர்தலில் ஓவைசியுடன் கூட்டணி அமைத்து அம்பேத்கர் கட்சி போட்டியிட்டது. இந்தக் கூட்டணி எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை, ஆனால் 7.65 சதவீத வாக்குகளைப் பெற்றது. சுமார் 7 தொகுதிகளில் காங்கிரஸின் தோல்விக்கு இக்கூட்டணி காரணமானது. அதனைத் தொடர்ந்து அந்த ஆண்டின் பிற்பகுதியில் நடந்த மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலிலும், அம்பேத்கரின் கூட்டணி கணிசமான வாக்குகளைப் பெற்றது. இந்த கூட்டணியால் குறைந்தபட்சம் 25 இடங்களையாவது இழந்ததாக காங்கிரஸ் கூறியது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in