`இன்னும் சில நாட்களில் அமைச்சர் பொறுப்பை ஏற்பார் உதயநிதி'

அடித்துச் சொல்லும் அமைச்சர் பி.மூர்த்தி
`இன்னும் சில நாட்களில் அமைச்சர் பொறுப்பை ஏற்பார் உதயநிதி'
முத்தரையர் சிலையை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைக்கிறார். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை ஆனையூரில் மன்னர் பெரும்பிடுகு முத்தரையர் சிலை திறப்பு விழா இன்று மாலையில் தமிழக வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் நடந்தது. கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், சிலை வைப்பதற்காக தன்னுடைய சொந்த இடத்தை வழங்கிய மாநகராட்சி கவுன்சிலர் ஜி.செல்வகணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ கலந்துகொண்டு சிலையைத் திறந்துவைத்தார்.

விழாவில் அமைச்சர் பி.மூர்த்தி பேசுகையில், "5 ஆண்டு காலம் சட்டப் போராட்டம் நடத்தி பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் சிலை நிறுவப்பட்டுள்ளது. அதிமுகவினர் இந்தச் சிலையை நிறுவவிடாமல் தடுத்து நிறுத்தினர். திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி, எங்களையும் வழிநடத்திக் கொண்டிருக்கிறார். முதல்வர் எங்களுக்கு அமைச்சர் பதவியை தந்தாலும் எங்களை உருவாக்கியவர் உதயநிதிதான். அவர் மதுரையில்தான் அரசியலுக்கு வந்ததும், மதுரையில் நடத்திய மாநாட்டில்தான் முதன்முதலில் பேசினார். அதேபோல் இந்த சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்டபின் இளைஞர்களையும், வருங்கால தமிழகத்தையும் வழிநடத்தப்போகிறார். இன்னும் சில வாரங்களில், சில நாட்களில் கூட தமிழ்நாட்டின் முதல்வருக்கு உற்ற துணையாக அமைச்சர் பொறுப்பையும் ஏற்பார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதிமுகவை நம்பி வாக்களித்த முத்தரையர் சமுதாயத்தினரை அதிமுகவினர் சிலை அமைக்கவிடாமல் ஏமாற்றியதை அறிவார்கள். சிலை அமைக்க உறுதுணையாக இருந்த திமுகவுக்கு முத்தரையர் சமூகத்தினர் எப்போதும் உறுதுணையாக இருப்பார்கள். விரைவில் அமைச்சர் பொறுப்பேற்று அனைத்து சமூக இளைஞர்களையும் வழிநடத்தக்கூடிய உதயநிதிக்கு முத்தரையர் சமுதாய மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசும்போது, ``தோல்வியே காணாமல் தொடர்ந்து 13 முறை தேர்தலில் வென்றவர் திமுக தலைவர் கலைஞர். அதேபோல், 12 முறை களம் கண்டு, அத்தனை போரிலும் வெற்றிபெற்றவர் பெரும்பிடுகு முத்தரையர். 13 முறை வென்ற கருணாநிதியின் பேரன், 12 முறை போரில் வென்றவரின் சிலையை திறந்து வைக்கிறார். இங்கு ஒட்டுமொத்த சமூகமும் சங்கமித்திருக்கிறது. அனைத்து சமூக இளைஞர்கள் ஏற்றுக்கொள்ளும் தலைவராக உள்ளவர்தான் சிலையைத் திறந்து வைத்திருக்கிறார். வருங்கால தமிழகத்தை வழி நடத்த இருக்கின்ற இளம் தலைவர், அனைத்து இன மக்களின் பாதுகாவலராக வரவேண்டும். அவர் வருவார்'' என்றார்.

விழாவில் அமைச்சர் மெய்யநாதன் பேசுகையில், "முத்தரையர் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் எனக்கு அமைச்சர் வாய்ப்பை பெற்றுத்தந்தவர் உதயநிதி. அவர் அரசியலுக்கு வந்தது முதல் திமுகவுக்கு தொடர் வெற்றிதான். எதிர்காலத்திலும் திமுக தொடர் வெற்றி பெறுவதற்கு இந்த சமுதாயம் பின்னால் நன்றியோடு இருக்கும்" என்றார்.

Related Stories

No stories found.