‘தைரியம் இருந்தா சட்டமன்றத்தை முடக்கிப் பாருங்க...’

எடப்பாடி பழனிசாமிக்கு உதயநிதி ஸ்டாலின் சவால்
‘தைரியம் இருந்தா சட்டமன்றத்தை முடக்கிப் பாருங்க...’
உதயநிதி ஸ்டாலின் பரப்புரை

மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்குக்கேட்டு, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று மதுரை வந்தார். பேச்சியம்மன் படித்துறை, ஓபுளா படித்துறை, ஆனையூர் ஆகிய இடங்களில் பேசிய அவர், சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்ததற்கான முதலில் நன்றி தெரிவித்துக்கொண்டார். பின்னர் பேசிய அவர்,

“நான் இங்கே வாக்குக் கேட்டு வந்திருக்க வேண்டியதே இல்லை. ஏனென்றால், சட்டமன்றத் தேர்தலில் அவ்வளவு பெரிய வெற்றியைத் தந்திருக்கிறீர்கள். இங்கே கூடியிருக்கிற கூட்டம் மாநாடு போல இருக்கிறது. பொதுவாக எல்லாப் பிரச்சாரத்திலும் தாய்மார்கள் ரொம்பக் குறைவாக இருப்பார்கள். ஆனால், இங்கே ஆண்களைவிட அதிகமாக வந்திருக்கீங்க. காரணம், வேட்பாளர்களில் 50 சதவீதம் பெண்கள்தான். நேற்று முதல்வர் அவர்கள், மதுரை பிரச்சார கூட்டத்தில் இணையம் வழியே பேசியபோது தாய்மார்களுக்கான உரிமைத்தொகை கண்டிப்பாக 1000 ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.

உங்களுக்கு சில விஷயங்களை ஞாபகப்படுத்தத்தான் நான் வந்திருக்கிறேன். கடுமையான நிதி நெருக்கடியிலும், கரோனா பரவல் உச்சத்திலும் இருந்த நேரத்தில்தான் தலைவர் அவர்கள் முதல்வர் பொறுப்பில் அமர்ந்தார். மருத்துவமனையில் இடம் இல்லை, இடம் கிடைத்தாலும் பெட் இல்லை, பெட் கிடைத்தாலும் மருந்து இல்லை, ஆக்ஸிஜன் இல்லை என்ற நேரத்தில் திமுக ஆட்சிக்கு வந்தது. போர்க்கால அடிப்படையில் அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் உத்தவிட்டு எல்லா வசதிகளையும் ஏற்படுத்தியதுடன், நோயையும் கட்டுப்படுத்தினார்கள். எடப்பாடி பழனிசாமி காலத்தில் தமிழ்நாட்டில் வெறும் 1 கோடி பேருக்குத்தான் தடுப்பூசி போட்டிருந்தார்கள். நிறைய தடுப்பூசியை வீணாக்கினார்கள். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்த 9 மாதத்தில் 10 கோடி பேருக்கு ஊசி போட்டிருக்கிறோம். அதனால்தான் இன்று நாம் கரோனா 3-வது அலையை எளிதாகக் கடந்து வந்துள்ளோம். இந்தியாவிலேயே ஒரே ஒரு முதல்வர் தான் கரோனா வார்டுக்கே சென்று சிகிச்சை முறை குறித்து ஆய்வு செய்தார் என்றால், அது நம்முடைய தலைவர்தான்.

நாம் ஆட்சிக்கு வந்த முதல் 3 மாதங்கள் கரோனாவுடன் போராடுவதிலேயே போய்விட்டது. இருந்தாலும் சொல்வதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம் என்கிற அடிப்படையில், கரோனா நிவாரணமாக ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் 4 ஆயிரம் ரூபாய் கொடுத்தார். மகளிருக்கு இலவச பேருந்து வசதி செய்துகொடுத்தார். பெட்ரோல் விலையை லிட்டருக்கு 5 ரூபாயும், ஆவின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாயும் குறைத்தார். விரைவில் மகளிருக்கான மாதந்திர உரிமைத்தொகையும் வழங்கப்படும். தலைவர் ஒரு விஷயத்தைச் சொன்னார் என்றால் செய்யாமல் விட மாட்டார். (இதைத் தொடர்ந்து திமுக அரசு நிறைவேற்றிய திட்டங்களையும், மதுரைக்கு அறிவித்த திட்டங்களையும் பட்டியலிட்டார் உதயநிதி)

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2 நாட்களாக ஒரு விஷயத்தைத் திரும்பத் திரும்பச் சொல்கிறார். தமிழ்நாடு சட்டமன்றத்தை முடக்கப் போறாராம். நான் அவரை விட வயதில் ரொம்ப இளையவன், சின்னவன்தான். இருந்தாலும் நான் அவருக்கு சவால் விடுகிறேன். உங்களால் முடிந்தால் தமிழ்நாடு சட்டமன்றத்தை முடக்கித்தான் பாருங்களேன். அப்படி முடக்கினால் என்னாகும், திரும்பத் தேர்தல் வரும். இப்பவாச்சும் நாங்க 159 இடங்களில்தான் வெற்றிபெற்றிருக்கிறோம். மறு தேர்தல் வந்தால் 200 இடங்களிலும் திமுகதான் வெல்லும். இதை எல்லாம் அவர் எந்த நம்பிக்கையில் சொல்கிறார், எல்லாத்தையும் மேல இருக்கிறவர் பார்த்துப்பாருன்னு தானே? மோடி எங்கள் டாடின்னு சொன்ன கூட்டம்தானே இவங்க. 6 நாட்களுக்கு முன்பு இந்தியப் பாராளுமன்றத்தில் ராகுல்காந்தி பாஜகவுக்கு ஒரு சவால் விடுத்தார். தமிழ்நாட்டில் திமுக இருக்கிற வரைக்கும் உங்களால அங்கே கால் ஊன்றக்கூடி முடியாது என்று. அந்த அளவுக்கு பாசிஸ பாஜகவுக்கும், அடிமை அதிமுகவுக்கும் சிம்ம சொப்பனமாகத் திகழ்கிறார் நம் தலைவர் ஸ்டாலின்.

பழனிசாமி அதோடு நிற்கல. போகிற எடத்தில் எல்லாம் என்னையத் தேடுகிறார் என்று கேள்விப்பட்டேன். என் வீட்ல கூட என்னைய இப்படித் தேட மாட்டங்க. அவ்வளவு பாசம் அவருக்கு. பொய்யான வாக்குறுதியைக் கொடுத்துவிட்டு உதயநிதி தலைமறைவாகிவிட்டார் என்று பேசுகிறார். நான் கடந்த ஒரு வாரமாக தமிழ்நாடு முழுக்க சுற்றுகிறேன். அவ்வளவு ஏன் சட்டமன்றக் கூட்டத்தில் கூட அவரது எதிரில்தான் இருந்தேன். டேபிளுக்கு மேலே பார்த்தாதிருந்தால் நான் தெரிந்திருப்பேன். டேபிளுக்கு கீழேயே பார்த்தால் நான் எப்படித் தெரிவேன்? நாங்க என்ன உங்களை மாதிரி கூவாத்தூர்ல, டேபிளுக்கு அடியில புகுந்து தவழ்ந்து போய், சசிகலா காலைப் பிடித்து முதல்வரானோமா? மக்கள் வாக்களித்து ஆட்சிக்கு வந்தவர்கள். அந்தப் பொறுப்போடுதான் மக்களைத் தேடி வந்திருக்கிறேன். உங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றுவோம். அதே நேரத்தில் உள்ளாட்சியிலும் நமது ஆட்சி ஏற்பட நீங்கள் வாக்களிக்க வேண்டும். திமுக தலைவரின் மகனாக, கலைஞரின் பேரானாக உரிமையோடு கேட்கிறேன். உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களியுங்கள்” என்றார்.

கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் பொன்.முத்துராமலிங்கம், கோ.தளபதி உட்பட நிர்வாகிகளும், வேட்பாளர்களும் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.