அதிருப்திகளை மறைக்கவா... அமைச்சரவையில் சேர்க்கவா?

எதிர்கால திமுக தலைவரின் இந்தி எதிர்ப்புக் கவசம்!
அதிருப்திகளை மறைக்கவா... அமைச்சரவையில் சேர்க்கவா?

"திமுகவின் எதிர்காலத் தலைவரே" என்று முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனால் இந்தி திணிப்புக்கு எதிரான ஆர்ப்பாட்ட மேடையில் விளிக்கப்பட்டார் திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். அவர்தான் திமுகவின் அடுத்த தலைவர் என்பதை அக்கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் வரைக்கும் மனதளவில் ஏற்றுக்கொண்டு விட்டாலும் இந்தி எதிர்ப்பு மேடையில் வைத்து எதிர்கால தலைவர் என்ற  மகுடம்  சூட்டப்பட்டிருப்பது இன்னும் விசேஷம்தான்.

இந்தி எதிர்ப்பில் தான் திமுக தன்னை வளர்த்துக் கொண்டது. அதன் பிரதான தலைவர்கள் பலரும் அப்படித்தான் வளர்ந்தார்கள். இப்போது நடந்த திணிப்பு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் உதயநிதியும் அதைச்சுட்டிக்காட்டி பேசினார். “மூன்று மொழிப்போர்களை சந்தித்தது திமுக. அதில் இரண்டை நடத்தியது திமுகவின் மாணவர் அணிதான். தற்போது மாணவர் அணியுடன் இளைஞர் அணியும் சேர்ந்து போராட்டத்தில் களமிறங்கியிருக்கிறோம். திமுகவின் முக்கியமான கொள்கை இந்தி எதிர்ப்பு. இந்தி திணிப்பை எப்போதும் எதிர்ப்போம். அதிலிருந்து நாங்கள் சற்றும் விலகமாட்டோம்; விட்டுக்கொடுக்க மாட்டோம். அது எங்கள் மாநில உரிமை” என்று உரக்கச் சொல்லி இருக்கிறார் உதயநிதி. 

2021 சட்டப் பேரவை தேர்தல் வெற்றியின் போதே, இளைஞரணி செயலாளரான உதயநிதியையும் அமைச்சராக்க வேண்டும் என்ற குரல் வீட்டுக்குள் எழுந்ததோடு மட்டுமல்லாது வெளியில் இருந்தும் எழுப்ப வைக்கப்பட்டன. ஆனால், ‘குடும்ப அரசியல்’ விமர்சனத்தைத் தவிர்க்கும் விதமாக அப்போது அவருக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்திகள் வெளியானபோதும் உதயநிதியின் பெயரும் அதில் பலமாகவே அடிபட்டது. அப்போதும் எதிர்பார்த்த மாற்றம் ஏதும் நிகழவில்லை. 

இரண்டு தேர்தல்களில் கடுமையாக உழைத்தவருக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் என்ன தப்பு என்ற நியாயக் கருத்தை மக்கள் மத்தியில் உண்டாக்கும் விதமாகவே இன்னமும் உதயநிதியை அமைச்சராக்காமல் வைத்திருக்கிறது திமுக தலைமை. இருந்தாலும் அவருக்கான முக்கியத்துவம் கூடிக்கொண்டே வருகிறது. கட்சிக்காரர்களும், ‘தளபதி’க்கு பதிலாக ’சின்னவரே’ என போஸ்டர் அடிக்கப் பழகிவிட்டார்கள். செஸ் ஒலிம்பியாட் உள்ளிட்ட அரசு நிகழ்ச்சிகளில் உதயநிதிக்கு அதிமுக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. திமுக உட்கட்சித் தேர்தலிலும் உதயநிதியின் சிபாரிசுகள் உயரத்தில் உட்காரவைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆக, கட்சி கிட்டத்தட்ட உதயநிதியின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாகவே சொல்லலாம். 

இந்த நிலையில்தான் பொதுவெளியிலும் மக்கள் மத்தியிலும் உதயநிதியை வலுவான தலைவனாக உருவாக்கவும் திமுக முனைந்திருக்கிறது. அதற்காவே இந்தி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கிறது.  மத்திய அரசுடன் பல்வேறு விஷயங்களில் திமுக இணக்கம் காட்டுகிறது என்று சொல்லப்படும் நிலையில், திமுக இளைஞரணிச் செயலாளர் கடும் எதிர்ப்பைக் காட்டத் தொடங்கியிருக்கிறார்.

”ஒன்றிய பிரதமர் மோடி அவர்களே... ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களே... நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பதுபோல, இங்கு நடந்துகொண்டிருப்பது அதிமுக ஆட்சி இல்லை. இப்போது வெறும் ஆர்ப்பாட்டம்தான் நடத்தியிருக்கிறோம். இதை போராட்டமாக மாற்றுவதா வேண்டாமா என்பது உங்கள் கையில்தான் உள்ளது. நீங்கள் இந்தி திணிப்பை கையிலெடுத்தால், அடுத்தக்கட்ட போராட்டத்தை தலைவரின் ஆணையைப் பெற்று டெல்லிக்கே வந்து நடத்துவோம்” என்று சீற்றம் காட்டி இருக்கிறார் சின்னவர் உதயநிதி.

திமுகவுக்கு எப்போதெல்லாம் நெருக்கடிகள் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் அது இந்தி எதிர்ப்புக் கேடயத்தைக் கையில் தூக்கும் என்று பாஜக பரிகாசம் செய்கிறது. இதிலும் உண்மை இல்லாமல் இல்லை. திறம்பட ஆட்சிசெய்ய வேண்டும் என ஸ்டாலின் நினைத்தாலும் நிதிநிலைமை அவரை கீழே பிடித்துப் பிடித்து இழுக்கிறது. அதனால், பேர் சொல்லும்படியான எந்தத் திட்டத்தையும் அவரால் செயல்படுத்த முடியவில்லை. மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக்கூட முழுமையாக நிறைவேற்ற முடியாமல் திணறுகிறது திமுக சர்க்கார். போதாத குறைக்கு, பொது இடங்களில் மூத்த அமைச்சர்களும் கழக முன்னணியினரும் நிகழ்த்திவிடும் விரும்பத் தகாத நிகழ்வு களாலும் தூக்கத்தைத் தொலைத்துக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின்.

இந்த ட்ரெண்டை மாற்றவே ‘இந்தி எதிர்ப்பு’ என்ற தனது பழைய போர்வையை எடுத்துப் போர்த்த ஆரம்பித்திருக்கிறது திமுக. ஆட்சிக் கட்டிலில் இருக்கும் முதல்வரை இதில் நேரடியாக ஈடுபடுத்தாமல் அடுத்த வாரிசான சின்னவரை இறக்கிவிட்டு சீறவைத்திருக்கிறார்கள். அவரும் பின்விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் போட்டுத் தாக்கி இருக்கிறார்.

ஆக, தந்தை சட்டப் பேரவைக்குள் சாத்வீகமாகவும் மகன் பொதுவெளியில் போர்க்குணத்துடனும் பாஜக அரசுக்கு எதிராக போர்முரசம் கொட்டுகிறார்கள். பின் விளைவுகள் என்னவென்று பிஜேபிக்குத்தானே தெரியும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in