தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் மூத்தத் தலைவர் குமரி அனந்தனுக்கு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு வழங்கி ஆணையை வழங்கினார். இதை பச்சை தமிழகம் கட்சியின் தலைவரும், அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தை சேர்ந்தவருமான சுப.உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து சுப.உதயகுமார் தன் முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது: காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், தமிழ்நாடு பனைத் தொழிலாளர் நல வாரியத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இவர் தான் வாழ்வதற்கு வசதியாக, தமிழ்நாடு அரசின் சார்பில் வீடு வழங்கிட வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார்.
இந்த கோரிக்கையை ஏற்று அண்ணா நகர் கோட்டத்தில் அமைந்துள்ள, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் உயர் வருவாய்க் குடியிருப்பில், வீடு வழங்கி, அதற்கான ஆணையினை முதலமைச்சர் ஸ்டாலின், இன்று சென்னை தலைமை செயலகத்தில் குமரி அனந்தனிடம் வழங்கினார்.
இவருக்கு ஓய்வூதியம் எதுவும் வரவில்லையா? வயதான காலத்தில் ஊரைப் பார்த்து வர வேண்டியதுதானே? என்ன மக்கள் சேவை செய்வதற்கு வீடு தேவைப்படுகிறது சென்னையில்?
1977 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக ஆதரவோடு நாகர்கோவில் நாடாளுமன்றத் தொகுதியில் ஜனதா கட்சி வேட்பாளராக நின்று இவர் வெற்றி பெற்றார். திமுக ஆதரவைப் பெற்றிருக்கிறீர்களே என்று ஊடகர்கள் கேட்டபோது, குமரி அனந்தன் சொன்னார்."ஜனநாயகக் கூரை தீப்பிடித்து எரியும்போது, நல்ல நீரையும், கழிவுநீரையும் ஊற்றி அணைக்கிறோம்." இன்று கழிவுநீரிடமே கையேந்தி வீடு வாங்குகிறார். இவ்வாறு அவர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.