`இந்த வீடியோவைப் பார்க்க வேண்டாம், பரப்ப வேண்டாம்'- ராஜஸ்தான் டெய்லர் கொலையில் பரபரப்பு தகவல்கள்

`இந்த வீடியோவைப் பார்க்க வேண்டாம், பரப்ப வேண்டாம்'- ராஜஸ்தான் டெய்லர் கொலையில் பரபரப்பு தகவல்கள்

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள பூட்மஹால் பகுதியில் பாஜக முன்னாள் நிர்வாகி நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக பேசிவந்த டெய்லர் ஒருவர், நேற்று இரண்டு நபர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் இந்த கொலை சம்பவத்தை வீடியோவிலும் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பியது நாட்டையே உலுக்கியுள்ளது. இது தொடர்பாக இப்போது பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொலையாளிகள் கோஸ் முகமது மற்றும் ரியாஸ் ஆகிய இருவரும் உதய்பூரின் நெரிசலான சந்தையில் உள்ள கன்னையா லாலின் தையல் கடைக்குள் நுழைந்து, கத்தியால் அவரது கழுத்தை அறுக்கும் சம்பவத்தை படம் பிடித்தனர். இந்த பயங்கர கொலை சம்பவம் காரணமாக ராஜஸ்தானில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் ராஜஸ்தான் முழுவதும் 24 மணி நேரம் பெரிய கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் இணைய சேவையும் முடக்கப்பட்டுள்ளது.

உதய்பூரில் கன்னையா லாலின் கடைக்குள் நுழைந்த இருவர், கத்தியால் அவரது கழுத்தை அறுத்தனர். அவர்கள் அவரின் தலையை துண்டிக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை என்று போலீஸார் தெரிவித்தனர். கழுத்தை அறுத்து கொலை செய்வதற்கு முன்பு கன்னையா லால், குற்றவாளிகளை அளவெடுக்கும் காட்சிகளும் வீடியோவில் உள்ளது. மேலும், அவர்களால் படம்பிடிக்கப்பட்ட அந்த வீடியோவில் கொலையாளிகள் பிரதமர் நரேந்திர மோடிக்கும் மிரட்டல் விடுத்தனர்.

இந்த கொடூர சம்பவத்தின் காரணமாக உதய்பூர் நகரின் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ள காவல்துறையினர், கொலை வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவேற்றிவிட்டு தப்பியோடிய கோஸ் முகமது மற்றும் ரியாஸ் ஆகியோரை கைது செய்தனர். மாநிலத்தில் பல பகுதிகளில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதால் அனைத்து காவலர்களின் விடுமுறையும் ரத்து செய்யப்பட்டு காவல்துறை உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த கொலை ஒரு பயங்கரவாத சம்பவமாக கருதப்படுவதால், தேசிய புலனாய்வு முகமை குழு உதய்பூருக்கு சென்று விசாரணையில் இறங்கும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கோஸ் முகமது
கோஸ் முகமது

முகமது நபி குறித்த அவதூறு கருத்தினை பதிவிட்டு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பாஜகவின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் கன்னையா லால் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்துள்ளார். இந்த சமூக ஊடகப் பதிவுகளுக்காக அவர் கைது செய்யப்பட்ட பின்னரும்கூட சில குழுக்கள் அவரை மிரட்டி வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக காவல்துறை தரப்பில் வெளியான தகவல்களின்படி , "நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து பதிவிட்டதாக ஜூன் 10 அன்று அவர் மீது புகார் வந்தது. அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஜூன் 15 அன்று அவர் காவல்துறையினரிடம் தனக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாக கூறினார். அதன்பின்னர் போலீஸார் அனைத்து கட்சியினர் மற்றும் சமூக தலைவர்களை காவல் நிலையத்துக்கு வரவழைத்து சமாதானம் செய்தனர். இந்த விவகாரத்தில் சமாதானத்தை ஏற்படுத்த முயன்ற சமூக தலைவர்களின் பங்கு குறித்தும் தற்போது போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரியாஸ்
ரியாஸ்

இது தொடர்பாக பேசிய ராஜஸ்தான் மாநில சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் இயக்குனர் ஹவா சிங் குமாரியா, "இந்த சம்பவத்தில் தொடர்புடைய யாரையும் விட்டுவிடக்கூடாது என்ற உத்தரவு எங்களுக்கு வந்துள்ளது. இந்த கொலை வீடியோவை பார்ப்பதற்கு மிகவும் கொடூரமாக உள்ளது. எனவே இந்த வீடியோவைப் பார்க்க வேண்டாம், பரப்ப வேண்டாம் என்பது எனது அறிவுரை" என்றார்.

இந்த கொலையை கடுமையாக கண்டித்துள்ள ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், " இந்த சம்பவம் வேதனைக்குரியது மற்றும் வெட்கக்கேடானது. இதனால் நாட்டில் பகைமை சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அமைதியைக் காக்குமாறும், இந்தச் சம்பவத்தின் வீடியோவைப் பகிர்வதன் மூலம் சூழலைக் கெடுக்க வேண்டாம் என்று அனைவருக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். வீடியோவைப் பகிர்வதன் மூலம், சமூகத்தில் வெறுப்பை பரப்பும் குற்றவாளியின் நோக்கம் வெற்றியடையும்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in