சட்ட வரையறையை உயர் நீதிமன்றம் மீறலாமா? : மாதர் சங்கம் கேள்வி

உ.வாசுகி
உ.வாசுகி

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு, நீதிக்காக போராடிக் கொண்டிருக்கிற பெற்றோரை அச்சுறுத்தும் வகையில் உள்ளது என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத் தலைவர் உ.வாசுகி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பிணை வழங்கி பிறப்பித்த உத்தரவில் தெரிவித்துள்ள கருத்துக்கள், குறிப்பாக, 'நடந்தது கொலையோ வல்லுறவோ அல்ல' என்பவை, துரதிர்ஷ்டவசமானவை. பிணை வழங்கும் போது ஒட்டுமொத்த வழக்கின் தகுதிக்குள் போகக்கூடாது என்கிற உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலுக்கு இத்தீர்ப்பு பொருந்துவதாகத் தெரியவில்லை. பிணைக்கான தீர்ப்பு என்ற பெயரில் வழக்கையே காலி செய்தது போலத் தோன்றுகிறது.

இவர்கள் குற்றவாளிகளே இல்லை என்கிற முடிவுக்கு நீதி மன்றம் வந்தால் எதற்காக நிபந்தனை ஜாமீன் அளிக்க வேண்டும், எதற்காக சிபிசிஐடி விசாரணை தொடர வேண்டும் என்கிற கேள்விகள் இயல்பாகவே எழுகின்றன.

பிணைக்கான உத்தரவு என்பது, குற்றம் சாட்டப்பட்டவர் வெளியே விடப்பட்டால் சாட்சிகளை கலைத்து விடுவாரா, தடயங்களை அழித்து விடுவாரா, தப்பி ஓடி விடுவாரா, காவலில் இருந்து தான் ஆக வேண்டுமா, குற்றத்தின் தன்மை என்ன போன்ற அம்சங்களைத்தான் பொதுவாக கணக்கில் எடுக்கும்.

ஆனால் பிணை நீதிமன்றத்தின் வரம்பையும், மனு போட்டவர்கள் கேட்ட நிவாரணத்தையும் தாண்டியதாக இந்த உத்தரவு உள்ளது. விசாரணை முகமை மற்றும் வழக்கு நடத்தும் கீழமை நீதிமன்றத்தின் அதிகார வரம்புக்குள் தலையிடுவதாக உள்ளது. இதன் மூலம் சிபிசிஐடி விசாரணையையும், வழக்கு நடத்தும் கீழமை நீதிமன்ற நீதிபதியின் கருத்தையும் இது பெருமளவு பாதிக்கும்; வழக்கின் போக்கை குற்றவாளிகளுக்கு சாதகமாக திசை திருப்பக் கூடும் என்கிற அச்சமும் எழுகிறது என்று கூறியுள்ளார்.

மேலும், இந்த உத்தரவின் சில அம்சங்களைப் பார்த்தால், பல்வேறு முடிவுகளுக்கு வருவதற்கு நீதிமன்றம், உடற்கூராய்வு அறிக்கைகளை அதிகம் சார்ந்திருப்பதாகத் தெரிகிறது. உடற்கூராய்வு அறிக்கை ஓர் ஆவணம்; அது உடலின் நிலை குறித்த அம்சங்களை, காயங்கள், அறிகுறிகள் போன்ற விபரங்களை மட்டுமே முன்வைக்கும். ரசாயன பரிசோதனைக்கு பின்னரே இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும். வழக்கு நடக்கும் போதுதான் காயங்கள், ரசாயன மாற்றங்கள் எப்படி எதனால் ஏற்பட்டிருக்கக் கூடும் உள்ளிட்டவை முன்னுக்கு வரும். விசாரணை மற்றும் குறுக்கு விசாரணையில் கூடுதல் விவரங்கள் தெரியவரும்.

உடற் கூராய்வு அறிக்கை, வல்லுறவு நடந்ததா இல்லையா என்று கூறாது. உடல் குறித்த விவரங்களை மட்டுமே குறிப்பிடும் என்பதோடு, குறிப்பிட்ட உடல் உறுப்பில் காயங்கள் இல்லை என்பதை வைத்து மட்டும் பாலியல் வல்லுறவு நடக்கவில்லை என்கிற முடிவுக்கு வர முடியாது. இந்தப் பார்வை ‘அரதப் பழசு’.

பாலியல் வல்லுறவு மற்றும் அதனால் பாதிக்கப்பட்ட பெண்களின் எதிர்வினை குறித்து சமூகத்தில் ஆணாதிக்கப் பார்வையோடு கூடிய கற்பிதம் நிலவுகிறது. பெண், குற்றம் நடந்து எத்தனை நாள் ஆனாலும் அழுது அரற்றி கொண்டிருக்க வேண்டும், மூலையில் முடங்கி உட்கார வேண்டும், இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் அப்படித்தான் உடை உடுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன.

இவை சில சமயம் தீர்ப்புகளிலும் பிரதிபலிக்கின்றன. உதாரணமாக, கோழிக்கோடு மாவட்ட நீதிமன்றம், பாலியல் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கு பிணை அளித்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெண் பாலியல் உணர்வைத் தூண்டக்கூடிய உடை உடுத்தியிருந்தார் என்பதாக குற்றவாளிக்கு சாதகமான ஒரு காரணமாக முன்வைக்கப்பட்டது. 2020-ல் கர்நாடக உயர் நீதிமன்றம் பாலியல் வல்லுறவு குற்றவாளி ஒருவருக்கு பிணை கொடுக்கும் போது, வல்லுறவுக்குப் பிறகு சோர்வாலும், களைப்பாலும் தூங்கி விட்டதாக பாதிக்கப்பட்ட பெண் சொன்னதை ஆட்சேபித்து, ஒரு இந்தியப் பெண் இப்படி நடந்து கொள்வாரா என்ற கேள்வியை எழுப்பியது.

மதுரா என்ற பெண்ணின் வழக்கில் ஏற்பட்ட வெகுஜன நிர்ப்பந்தத்தின் காரணமாக 1983-ல் குற்றவியல் நடைமுறைச் சட்ட திருத்தங்கள் மூலம் பாலியல் வல்லுறவு தொடர்பான பல சட்ட மாற்றங்கள் உருவாக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து தேசிய சட்ட ஆணையம் பல்வேறு பரிந்துரைகளை அளித்து அவையும் அவ்வப்போது திருத்தங்களாக இணைக்கப்பட்டன. இப்படி கிடைத்தவைதான் பாதுகாவலில் நடக்கும் குற்றங்களில் (custodial crimes) குற்றம் செய்யவில்லை என்று குற்றவாளிகள் தான் நிரூபிக்க வேண்டும்.

வல்லுறவுக்கு உடலில் காயங்கள் இருந்துதான் ஆக வேண்டும் என்கிற அவசியம் இல்லை; தான் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட பெண் சொன்னால் அதை அனுமானமாக வைத்துக் கொள்ள வேண்டும்; வல்லுறவால் பாதிக்கப்பட்ட பெண்ணினுடைய அடையாளத்தை வெளியிடக்கூடாது; 18 வயதுக்கு கீழான சிறுமி என்றால் அவளது சம்மதம் கிடைத்ததா இல்லையா என்பதே தேவையில்லை; பாதிக்கப்பட்ட பெண்ணின் கடந்த கால பாலியல் தொடர்புகள் குறித்த கேள்விகள் கேட்கப்படக்கூடாது போன்றவையாகும்.

கள்ளக்குறிச்சியில் மரணம் அடைந்த பெண் 18 வயதுக்கு கீழானவர் என்கிற அடிப்படையில் போக்சோ சட்டப்பிரிவுகள் அனைத்தும் பொருந்தும். இவை எல்லாமே விசாரணை, ஆதாரங்கள், தடயங்கள் இவற்றைப் பொறுத்து நிரூபிக்கப்படும். விசாரணையில் கிடைக்கும் விவரங்களை வைத்து குற்றப்பத்திரிக்கை மேலும் புதிய பிரிவுகளோடு தயாரிக்கப்படும். மற்றோர் உதாரணம், மார்பகப் பகுதியில் ஏற்பட்ட காயங்கள் குறித்ததாகும்.

காயங்கள் உள்ளன என்பதை மட்டுமே கூராய்வு அறிக்கை சொல்ல முடியும். அவை, பாலியல் தாக்குதலினால் ஏற்பட்டவையா அல்லது மாடியில் இருந்து கீழே விழுந்ததாகக் கூறப்படும் போது அங்கிருந்த கல்துகள்களால் ஏற்பட்டவையா என்பது வழக்கு விசாரணையின்போது முன் வைக்கப்படும் ஆதாரங்கள், வாதங்களைப் பொறுத்துதான் தெளிவாகும்.

அதேபோல் ரத்தக் கறையல்ல சிவப்பு பெயிண்ட் என்பதும், மாணவியின் தற்கொலை கடிதம் என சொல்லப்படுவதில் உள்ள கையெழுத்து அவருடையதுதான் என்பதும் நிபுணர்கள் கூண்டில் ஏறி சாட்சி சொல்லி, குறுக்கு விசாரணையை சந்தித்து இறுதியில் நீதிமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். எந்த நிபுணர் சொன்னார் என்று தெரியவில்லை; அப்படியே இருந்தாலும், நிபுணர் சொன்னார் என்பது மட்டுமே முடிந்த முடிவாகி விடாது.

இவ்வழக்கு சம்பந்தமான சென்னை உயர்நீதிமன்றத்தின் மற்றோர் உத்தரவில், ‘விசாரணை முடிவடையும்போது புகார் கொடுத்தவரே குற்றவாளியாகும் சூழலை சில சமயம் பார்த்திருக்கிறோம்’ என்று குறிப்பிட்டிருப்பது, பாதிக்கப்பட்டு நீதிக்காக போராடிக் கொண்டிருக்கிற பெற்றோரை அச்சுறுத்துவதாக உள்ளது. ஏற்கெனவே ஏராளமான அழுத்தங்களையும், நிர்ப்பந்தங்களையும் பெற்றோர் சந்தித்துக் கொண்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் சிபிசிஐடியின் எச்சரிக்கை போன்றவற்றைப் பார்க்கும்போது இவ்வழக்கு குறித்து யாரும் எதுவும் வாய் திறந்தே பேசக் கூடாது என்கிற தொனிதான் தெரிகிறது. தமிழக அரசு, பிணைக்கு எதிராகவும், சென்னை உயர்நீதிமன்றம் ஒட்டுமொத்த வழக்கின் தகுதி குறித்த ஆய்வுக்குள் சென்றிருப்பதற்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீட்டுக்கு செல்ல வேண்டும். ஜனநாயக அமைப்புகள், சமூக செயற்பாட்டாளர்கள் இதன் ஆபத்தான விளைவுகள் குறித்து உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எழுதுவது பொருத்தமாக இருக்கும் என்று உ. வாசுகி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in