இரண்டு முனைகளில் இரு பெரும் தலைவர்கள்!

இரண்டு முனைகளில் இரு பெரும் தலைவர்கள்!
பிரதமர் மோடியுடன் உள் துறை அமைச்சர் அமித் ஷா

காஷ்மீர் மாநிலத்திற்கு அளிக்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அது இரண்டு யூனியன் பிரதேசங்களாக உருவாக்கப்பட்ட பிறகு முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோடி இன்று அங்கு செல்கிறார்.

அங்குள்ள சாம்பா மாவட்டம் பள்ளி கிராமத்தில் தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தை ஒட்டி நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். 70,000 கோடி ரூபாய் மதிப்பிலான தொழில் துறை முதலீடுகள் மற்றும் இரண்டு மின் திட்டங்களைத் தொடங்கி வைப்பதுடன், வளர்ச்சித் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

அதேபோல மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று புதுச்சேரி வருகை தந்திருக்கிறார். இதற்காக நேற்று டெல்லியிலிருந்து புறப்படுவதற்கு முன்பே புதுச்சேரிக்கு செல்வது குறித்து ட்வீட் செய்த அவர், அரவிந்தர் ஆசிரமத்திற்குச் செல்வதையும், பாரதியார் நினைவு இல்லத்திற்குச் செல்வதையும் ஆவலுடன் எதிர்நோக்கி இருப்பதாகப் பெருமையுடன் குறிப்பிட்டிருந்தார். இந்தியாவின் இரு முனைகளுக்கு பாஜகவின் இரு பெரும் தலைவர்கள் வந்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

நேற்று இரவு சென்னை வந்த அவரை பாஜக தலைவர் மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல். முருகன் உள்ளிட்ட பாஜகவினர் திரண்டுவந்து வரவேற்றனர். அங்கிருந்து இரவு தங்குவதற்காக ஆவடி நோக்கிப் புறப்பட்ட அமித் ஷாவுக்கு சாலையின் இருபுறமும் பாஜக தொண்டர்கள் திரளாக திரண்டு நின்று வரவேற்பளித்தனர். அவர்களின் உற்சாகம் காரைவிட்டு அமித் ஷாவை இறங்க வைத்தது. காரைவிட்டு இறங்கி தொண்டர்களைப் பார்த்து கையசைத்தவாறே சாலையில் சிறிது தூரம் நடந்து சென்றார்.

அங்கிருந்து இன்று காலை புறப்பட்டு புதுச்சேரிக்கு வருகைதரும் அமித் ஷா புதுச்சேரி அரசின் சார்பில் நடைபெறும் கிழக்குக் கடற்கரைச் சாலை பகுதியில் அமைய உள்ள புதிய பேருந்து நிலையத்திற்கு அடிக்கல் நாட்டுதல், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட காவலர்களுக்கு பணி ஆணை வழங்குதல் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.

அதற்குப் பிறகு துணைநிலை ஆளுநர் மாளிகையில் பாஜக மாநில நிர்வாகிகள் அவர் சந்திக்கிறார். அது புதுச்சேரி அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எப்படியும் புதுச்சேரியில் பாஜக ஆட்சியைக் கொண்டு வந்துவிட வேண்டும் என்று தீவிர முயற்சிகளை எடுத்தார்கள்.

அதற்காகத் துணைநிலை ஆளுநர் மாற்றம், ஆளுங்கட்சியான காங்கிரஸிலிருந்து முக்கியத் தலைவர்களை பாஜகவுக்குக் கொண்டு வந்தது உட்பட பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டன.

அப்படியும் பாஜக ஆட்சிக்கு வரமுடியவில்லை. ரங்கசாமியின் அமைச்சரவையில் பங்கு பெறும் நிலை மட்டுமே ஏற்பட்டது. இதனால் ஏமாற்றமடைந்த பாஜக, ரங்கசாமி முதல்வராக இருந்தாலும் ஆட்சி நிர்வாகத்தில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை வைத்து ஆட்சி நடத்திக்கொண்டிருப்பதாக விமர்சிக்கப்படுகிறது. தற்போது அதிலும் திருப்தி அடையாமல் நேரடியான ஆட்சிப் பொறுப்பை பாஜகவின் கையில் கொண்டு வர வேண்டும் என்று அமித் ஷா விரும்புகிறார். அதற்கான செயல் திட்டங்களோடுதான் அவர் புதுச்சேரிக்கு வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

பாஜக மாநில நிர்வாகிகளுடன் இதுகுறித்து அவர் ஆலோசனை நடத்துகிறார். துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் ஆலோசனைகளும் இதில் பரிசீலிக்கப்படுகின்றன. பாஜக ஆட்சிக்கான திட்டம் இன்று இறுதி செய்யப்படும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

Related Stories

No stories found.