திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள்: எடப்பாடி பழனிசாமி அதிர்ச்சி

முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏக்கள் உள்ளிட்டவர்கள்
முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்த அதிமுக எம்எல்ஏக்கள் உள்ளிட்டவர்கள்

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் இருவர் உள்ளிட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள்  அதிமுகவிலிருந்து விலகி முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்திருப்பது ஈபிஎஸ் தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம்,  பூம்புகார் சட்டமன்ற  தொகுதியின்  முன்னாள் எம்எல்ஏவாக இருந்தவர் விஜயபாலன். அதேபோல சீர்காழி சட்டமன்ற தொகுதியில் முன்னாள் எம்எல்ஏவாக இருந்தவர் து.மூர்த்தி. இவர்கள் இருவரும் அதிமுகவில்  தொண்டர்களிடம் நல்ல அபிமானம் பெற்றவர்கள். கட்சியிலும் பொறுப்பில் இருந்து வருகிறார்கள். ஆனால் தற்போதைய மாவட்ட செயலாளரான பூம்புகார் தொகுதி முன்னாள் எம்எல்ஏ பவுன்ராஜ் கட்சியின் மூத்தவர்களான இவர்களை  அவ்வளவாக மதிப்பதில்லையாம். எனவே இவர்கள் அதிருப்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்ட திமுக  செயலாளரும், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் இவர்களை அணுகி  திமுகவுக்கு வருமாறு அழைத்துள்ளார். இதையடுத்து அவர்கள் இருவர் மற்றும் மாவட்டத்தில் உள்ள முக்கிய அதிமுக நிர்வாகிகளான நாகை மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளரும், பரசலூர் ஊராட்சி மன்றத் தலைவருமான செம்பை த.சண்முகம்,  அம்மா பேரவை ஒன்றிய தலைவர் எம். ரமேஷ்,  செம்பனார்கோவில் சா. செல்வராஜ், சுரேஷ்குமார், சரவணன் ஆகியோர்  அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை  சந்தித்து தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டுள்ளனர்.

கட்சியில் எந்த பிளவும் இல்லை,  ஒட்டுமொத்த அதிமுகவும் தங்கள் பக்கம் தான் இருக்கிறது,  யாருக்கும் எந்த அதிருப்தியும் இல்லை என்று ஈபிஎஸ் கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அதிமுகவிலிருந்து இரண்டு முன்னாள் எம்எல்ஏக்கள் விலகி திமுகவில் இணைந்திருப்பது ஈபிஎஸ்ஸுக்கு பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. 

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in