பழுதான லிஃப்ட்டில் சிக்கிய அமைச்சர்: இரண்டு பொறியாளர்கள் சஸ்பெண்ட்

பழுதான லிஃப்ட்டில் சிக்கிய அமைச்சர்: இரண்டு பொறியாளர்கள் சஸ்பெண்ட்
NGMPC22 - 147

அமைச்சர் மா.சுப்பிரமணியன் பயணித்த லிஃப்ட் பழுதான விவகாரம் தொடர்பாக இரண்டு பொதுப்பணித்துறை பொறியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் புதிய திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காகத் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த 29-ம் தேதி மருத்துவமனைக்குச் சென்றிருந்தார். மூன்றாவது தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு தரை தளத்திற்கு லிஃப்ட்டில் வந்து கொண்டிருந்த போது லிஃப்ட்டில் ஏற்பட்ட பழுது காரணமாகப் பாதியிலேயே நின்று விட்டது.

இதனால் அந்த மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு வழியாக லிஃப்ட்டில் சிக்கிய அமைச்சர் மற்றும் அதிகாரிகள் லிஃப்ட் ஆப்ரேட்டர் உதவியுடன், ஆபத்துக்கால கதவின் வழியாக மீட்கப்பட்டனர். இது தொடர்பாக இன்று இரண்டு பொறியாளர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமைச்சர் மா.சுப்பிரமணியன் மின்தூக்கியில் செல்லும் போது மின் துக்கியைப் பராமரிக்க வேண்டிய பொறியாளர்களின் கவனக்குறைவாலும், சரிவர பராமரிக்காததாலும் பாதி வழியில் பழுதடைந்து நின்றுவிட்டது. இது தொடர்பாக அமைச்சர் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளிடம் விசாரித்த போது, இது போன்று அடிக்கடி நடைபெறுவதாகத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இதற்குப் பொறுப்பான பொதுப்பணித்துறை உதவிச் செயற்பொறியாளர் டி.சசிந்தரன் மற்றும் உதவிப் பொறியாளர் கலைவாணி ஆகிய இருவரும் உடனடியாக தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் ” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in