மேகாலயா அரசியலில் திடீர் திருப்பம்: கான்ராட் சங்மாவுக்கு சிக்கல் - புதிய கூட்டணிக்கு முயற்சி

கான்ராட் சங்மா
கான்ராட் சங்மாமேகாலயா அரசியலில் திடீர் திருப்பம்: கான்ராட் சங்மாவுக்கு சிக்கல் - புதிய கூட்டணிக்கு முயற்சி

மேகாலயாவில் அடுத்த அரசாங்கத்தை அமைப்பதில் தேசிய மக்கள் கட்சிக்கு (என்பிபி) புதிய சிக்கல் எழுந்துள்ளது. கான்ராட் சங்மா ஆட்சியமைக்க நேற்று காலையில் ஆதரவு தெரிவித்த இரண்டு எம்எல்ஏக்கள், நேற்று மாலையில் தங்கள் ஆதரவைத் திரும்பப் பெற்றனர்.

தேசிய மக்கள் கட்சியின் தலைவர் கான்ராட் சங்மா, மேகாலயாவின் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து ஆளுநர் பகு சௌஹானிடம் நேற்று புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு உரிமை கோரினார். ஆளுநரிடம், கான்ராட் சங்மா பெரும்பான்மைக்குத் தேவையான 32 சட்டமன்ற உறுப்பினர்களின் கையொப்பமிடப்பட்ட ஆதரவுக் கடிதத்தை சமர்ப்பித்திருந்தார். பதவியேற்பு விழா மார்ச் 7ம் தேதி நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

கான்ராட் சங்மா ஆளுநரிடம் சமர்ப்பித்த கடிதத்தில் என்பிபியைச் சேர்ந்த 26 எம்எல்ஏக்கள், பாஜகவைச் சேர்ந்த இருவர், ஹில் ஸ்டேட் பீப்பிள்ஸ் டெமாக்ரடிக் பார்ட்டி உறுப்பினர்கள் இருவர் மற்றும் இரண்டு சுயேச்சை எம்எல்ஏக்களின் கையெழுத்து இருந்தது. “எங்களுக்கு அறுதிப் பெரும்பான்மை உள்ளது. பாஜக ஏற்கெனவே தனது ஆதரவை வழங்கியுள்ளது. இன்னும் சிலரும் தங்கள் ஆதரவை வழங்கியுள்ளனர், ”என்று கடிதத்தை சமர்ப்பித்த பிறகு கான்ராட் சங்மா கூறினார்.

ஆனால் நேற்று மாலையின் புதிய திருப்பமாக, எச்எஸ்பிடிபி தலைமை ஒரு கடிதத்தை வெளியிட்டது. அதில், “ என்பிபி தலைமையிலான அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆதரவளிக்க எங்கள் கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு அங்கீகாரம் வழங்கவில்லை. இந்த விவகாரத்தில் கட்சிக்கு (HSPDP) எந்தப் பங்கும் இல்லை, எனவே உங்கள் கட்சிக்கு நாங்கள் அளித்த ஆதரவை வாபஸ் பெறுகிறோம், இது இன்று முதல் அமலுக்கு வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டது. அதன் நகல் ஆளுநருக்கும், கான்ராட் சங்மாவுக்கும் அனுப்பப்பட்டது. இதனால் புதிய அரசு அமைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

இந்த சூழலில் நேற்று ஐக்கிய ஜனநாயகக் கட்சி, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், எச்எஸ்பிடிபி, மக்கள் ஜனநாயக முன்னணி (பிடிஎஃப்) மற்றும் மக்கள் குரல் கட்சி (விபிபி) ஆகியவற்றின் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் மற்றும் தலைவர்கள் இணைந்து, என்பிபி ஆட்சிக்கு வருவதைத் தடுக்கும் வகையில் ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

எச்எஸ்பிடிபி மற்றும் யுடிபி இரண்டும் அங்கம் வகித்த முந்தைய என்பிபி தலைமையிலான அரசாங்கத்தில் உள்துறை அமைச்சராக இருந்த யுடிபி தலைவர் லக்மென் ரிம்புய்யின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. கான்ராட் முதல்வர் நாற்காலிக்கு வருவதை தடுக்கும் முயற்சி முன்னாள் முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான முகுல் சங்மாவின் தலைமையில் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய ஜனநாயகக் கட்சிக்கு 11, காங்கிரஸுக்கு 5, திரிணமூலுக்கு 5, எச்எஸ்பிடிபிக்கு 2, மக்கள் ஜனநாயக முன்னணி (பிடிஎஃப்) 2 மற்றும் மக்கள் குரல் கட்சி (விபிபி) 4 என இவர்களின் எண்ணிக்கை 29ஆக உள்ளது, இது பெரும்பான்மையை விட இரண்டு எண்ணிக்கை குறைவாகும். இந்த புதிய கூட்டணி முயற்சி காரணமாக மேகாலயா அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in