
பிக் பாஸ் நிகழ்ச்சியை முழுவதுமாக தடை செய்ய வேண்டும் என்று கூறவில்லை எனவும், ஆபாச காட்சிகள், அறுவெறுக்கத்தக்க வசனங்களைதான் தடை செய்ய வேண்டும் எனவும் கூறியதாக தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி எம்எல்ஏவுமான வேல்முருகன் கூறினார்.
ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``கடந்த 6 சீசன்களாக பிக் பாஸ் தமிழ்நாட்டில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த 6 சீசன்களிலும் இல்லாத வண்ணம் தற்போது சில நாட்களுக்கு முன்பாக, மிக மோசமான, அறுவெறுக்கத்தக்க, குடும்பத்தோடு, அமர்ந்து பார்க்கமுடியாத வண்ணம் மிக மோசமான காட்சிகளை விஜய் தொலைக்காட்சி பிக் பாஸில் நேரடியாக ஒளிபரப்புச் செய்கிறது.
முத்தமிடுகிற காட்சி, அரை குறை ஆடையுடன் ஒருவர் மடியில் ஒருவர் மீதும் கட்டிலில் புரள்கிற காட்சிகள், மிக மோசமான வார்த்தை போர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இவையெல்லாம் இந்த சமூகத்துக்கு ஆரோக்கியமானதல்ல. தொலைக்காட்சி என்பது ஒவ்வொரு குடிமகன் வீட்டில் நடு மையத்தில் இடம்பெற்றிருக்கிற தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.
அப்படிப்பட்ட அந்த தொலைக்காட்சிகளுக்கு சென்சார் இல்லை என்பதற்காக இவர்களுடைய டிஆர்பி ரேட்டை உயர்த்த வேண்டும் என்பதற்காக கார்ப்பரேட் பெரும் நிறுவனங்கள் தரும் பணத்திற்காக இப்படி தமிழ்நாட்டு இளைஞர்களின் உள் உணர்வை சீரழிக்கின்ற முயற்சியை விஜய் தொலைக்காட்சி உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். இதைத் தொகுத்து வழங்குகின்ற கமல்ஹாசன் இதை அனுமதித்திருக்க கூடாது. இனியும் அனுமதிக்க கூடாது என்ற வேண்டுகோளை அவருக்கு வைக்கிறேன்.
தொலைக்காட்சி நிர்வாகம் இதுபோன்ற நிகழ்வுகளை உடனடியாக தடைசெய்ய வேண்டும். பிக் பாஸை முழுவதுமாக தடை செய்ய வேண்டும் என நான் சொல்லவில்லை. அறுவெறுக்கத்தக்க காட்சிகள், வசனத்தை தான் தடை செய்ய வேண்டும் என சொல்கிறேன்'' என்றார்.