‘மாணவச் செல்வங்களின் மனதில் நஞ்சை விதைக்காதீர்கள்’ - தீண்டாமைக் கொடுமைக்கு டிடிவி தினகரன் கண்டனம்!

‘மாணவச் செல்வங்களின் மனதில் நஞ்சை விதைக்காதீர்கள்’ - தீண்டாமைக் கொடுமைக்கு டிடிவி தினகரன் கண்டனம்!

'நவீன யுகத்திலும் தீண்டாமை என்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அதிலும் மாணவச் செல்வங்களின் மனதில் நஞ்சை விதைக்கும் வகையிலான செயல்பாடுகள் கண்டனத்திற்குரியவை' என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ளது பாஞ்சாங்குளம் கிராமம். அப்பகுதியில் உள்ள கடை ஒன்றில் சிறுவர்கள் தின்பண்டம் கேட்டபோது கடைக்காரர் குழந்தைகளிடம், ‘இனிமேல் நீங்கள் யாரும் இங்கு வந்து தின்பண்டம் எதுவும் வாங்க வேண்டாம். ஊரில் கட்டுப்பாடு வந்திருக்கு’ எனத் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனைத் தொடர்ந்து எழுந்த புகாரின் காரணமாக பாப்பாங்குளம் நாட்டாமை மகேஷ்குமார் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார். அவருக்குச் சொந்தமான கடைக்கும் கோட்டாட்சியர் சுப்புலட்சுமி சீல் வைத்தார். இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் மீது கரிவலம்வந்தநல்லூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பள்ளிக் குழந்தைகளுக்கு நடந்த தீண்டாமை கொடுமைக்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனக் குரல் எழுப்பி வருகின்றனர்.

அந்த வகையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நவீன யுகத்திலும் தீண்டாமை என்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. அதிலும் மாணவச் செல்வங்களின் மனதில் நஞ்சை விதைக்கும் வகையிலான செயல்பாடுகள் கண்டனத்திற்குரியவை. தென்காசி பகுதியில் மட்டுமல்ல, தமிழகத்தில் எந்த இடத்திலும் இனி இத்தகைய சம்பவங்கள் நிகழக்கூடாது. தீண்டாமையைப் போலவே மத வெறுப்பும் மோசமானது. சென்னையில், தலையில் தொப்பி அணிந்த இஸ்லாமியச் சிறுவனைக் கேலி செய்யும் விதமாக நிகழ்ந்த செயலை ஏற்க முடியாது. நல்லிணக்கத்தைக் குலைக்கும் இத்தகைய செயல்களை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும்’ எனப் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in