கோவில்பட்டி டூ சிவகங்கை: அடுத்த களத்தை தயார் செய்கிறாரா டிடிவி தினகரன்?

கோவில்பட்டி டூ சிவகங்கை:
அடுத்த களத்தை தயார் செய்கிறாரா டிடிவி தினகரன்?

1999-ல் பெரியகுளம் (இப்போது தேனி) மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராகக் களமிறங்கி வாகைசூடிய டிடிவி தினகரன், மீண்டும் 2024 மக்களவைத் தேர்தலில் அமமுக வேட்பாளராகக் களமிறங்க ஆலோசனை நடத்தி வருவதாக அமமுக வட்டாரத்திலிருந்து சேதி சொல்கிறார்கள். இம்முறை அவர் தேனியைத் தவிர்த்து சிவகங்கையையும் கணக்கில் வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

அண்மையில், அமமுகவின் தேனி, சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்திய டிடிவி தினகரன், கூட்டம் முடிந்ததும் அந்த மாவட்டங்களின் நிர்வாகிகளுடன் அமர்ந்து உணவருந்தினாராம். அப்போது, மக்களவைத் தேர்தல் குறித்தும் நிர்வாகிகள் மத்தியில் சில கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட அவர், “ஜெயக்குமார் மாதிரியான நபர்கள் சொல்வதை எல்லாம் பார்த்துக் குழம்பிக் கொள்ளாதீர்கள். இந்தத் தேர்தலில் நாம் அதிமுக - பாஜக கூட்டணியில் இடம்பெறுவது நிச்சயம். இம்முறை நாம் சிவகங்கை, தேனி மக்களவைத் தொகுதிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும்” என்று சொன்னாராம்.

இத்தனை தொகுதிகள் இருக்கையில் சிவகங்கை, தேனியை மட்டும் தினகரன் குறிப்பிட்டுச் சொல்ல என்ன காரணம்? என அமமுக தலைமைக் கழக நிர்வாகிகள் மட்டத்தில் பேசினோம். அதற்கு அவர்கள், “சட்டமன்றத் தேர்தலிலேயே தேனி, மதுரை அல்லது சிவகங்கை மாவட்டத்தில் ஏதாவதொரு தொகுதியில் தினகரன் போட்டியிட வேண்டும் என்றுதான் நிர்வாகிகள் விருப்பம் தெரிவித்தனர். இந்த மூன்றுமே முக்குலத்தோர் கணிசமாக உள்ள மாவட்டங்கள் என்பதும் இதற்கு முக்கிய காரணம். ஆனால், கடைசி நேரத்தில் அவரை திசைதிருப்பிய அமமுகவின் தென் மண்டலப் பொறுப்பாளர் மாணிக்க ராஜா தான் தினகரனை கோயில்பட்டியில் போட்டியிட வைத்தார். ஆனால், அங்கே எதிர்பார்த்த வெற்றியைப் பெறமுடியவில்லை.

கடந்த மக்களவைத் தேர்தலில் அமமுக வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட தொகுதிகளில் சிவகங்கையும் ஒன்று. அந்தத் தேர்தலில் அங்கே போட்டியிட்ட அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டி சுமார் 1 லட்சத்து 22 ஆயிரம் வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்து அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்தார். இந்த நிலையில், அதிமுக - பாஜக கூட்டணியில் அமமுகவுக்கும் இடம் கிடைத்தால் சிவகங்கைத் தொகுதியில் அமமுகவுக்கு வெற்றி பிரகாசமாக இருக்கும். அதனால் தான் தினகரன் இம்முறை சிவகங்கைப் பக்கமும் பார்வையைத் திருப்பி இருக்கிறார். ஒருவேளை, கூட்டணிப் பங்கீட்டில் சிவகங்கை அமமுகவுக்கு கிடைக்காமல் போனால், அவருக்கான அடுத்த சாய்ஸ் தேனியாக இருக்கும்.

ஏற்கெனவே தேனியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தினகரனுக்கு இன்றைக்கும் அங்கே நல்ல செல்வாக்கு இருக்கிறது. தினகரன் அங்கே எம்பி-யாக இருந்த காலத்திலும், அதற்குப் பின்னால் ஆண்டிபட்டி தொகுதியில் ஜெயலலிதா வெற்றிபெற்ற காலங்களிலும் தினகரனால் ஏகப்பட்ட மக்கள் நற்பலன்களை அடைந்திருக்கிறார்கள். அவர்களெல்லாம் இன்றைக்கும் தினகரனை நினைத்துப் பார்க்கிறார்கள். எனவே, மீண்டும் தினகரன் போட்டியிட்டால் அவரை ஜெயிக்கவைக்க தேனி மக்கள் தயாராய் இருக்கிறார்கள். ஆக, இந்த இரண்டு தொகுதிகளுமே தினகரனுக்கு மிகவும் சாதகமான தொகுதிகள் தான்” என்றார்கள்.

இந்த இரண்டு தொகுதிகளில் ஒன்றில் தான் தினகரன் போட்டியிடப் போகிறாரா? அமமுக அமைப்புச் செயலாளரும் சிவகங்கை மற்றும் தேனி மக்களவைத் தொகுதிகளுக்கான பொறுப்பாளருமான உசிலம்பட்டி ஐ.மகேந்திரனிடம் கேட்டோம். ”டிடிவி இந்த இரண்டு தொகுதிகளில் ஒன்றில் தான் போட்டியிடப் போகிறார் என்று தலைமை எங்களுக்கு எந்த அறிவுத்தலும் செய்யவில்லை. அதனால் மக்களவைத் தேர்தலைக் கணக்கில் வைத்து அத்தனை தொகுதிகளிலுமே பூத் கமிட்டிகள் அமைப்பது உள்ளிட்ட தேர்தலுக்கான ஆயத்த பணிகளைச் செய்து வருகிறோம். கடந்த முறை சிவகங்கையில் அமமுக வேட்பாளர் கணிசமான வாக்குகளைப் பெறுவார் என்பது நாங்கள் எதிர்பார்த்த ஒன்றுதான். எனவே, நீங்கள் சொல்வது போல் இம்முறை டிடிவி இங்கே போட்டியிட்டால் சந்தேகமே இல்லாமல் வெற்றிபெறுவார்” என்று மட்டும் சொன்னார்.

தேர்தல் நேரத்தில் வாக்காளர்களை பரிசு மழையில் திக்குமுக்காட வைப்பவர் தினகரன். இம்முறை அவரது விஜயம் கிடைக்கப்போவது சிவகங்கை மக்களுக்கா தேனி மக்களுக்கா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in