போலி திராவிட மாடல் அரசு இதைத்தான் செய்ய விரும்புகிறதா? - டிடிவி.தினகரன் கேள்வி

டி டி வி தினகரன்
டி டி வி தினகரன்

தமிழ்நாட்டு இளைஞர்களின் அரசு வேலை கனவைக் குழி தோண்டி புதைக்கும் தி.மு.க அரசின் அரசாணை எண் 115-ஐ உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கோரிக்கை வைத்துள்ளார்

இது தொடர்பாக டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசுப் பணிகளில் உள்ள லட்சக்கணக்கான காலியிடங்களை நிரப்பும் வேலையை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்துடன் தி.மு.க அரசு அரசாணை வெளியிட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

அரசு வேலைக்காக முயற்சித்துவரும் இளைஞர்களின் கனவில் மண் அள்ளிப்போடும் விதமாக தி.மு.க அரசு செயல்படுவதை ஏற்க முடியாது. அரசு காலிப்பணியிடங்களை நிரப்புவது மட்டுமின்றி, பணியிலுள்ள அரசு அலுவலர்களின் செயல்பாடுகளை மதிப்பிடுவதையும் தனியார்மயமாக்க தி.மு.க அரசு, திட்டமிட்டிருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

அரசு எந்திரத்தின் மூளையாக செயல்படும் அரசு ஊழியர்களை புதிதாக நியமிப்பதையும் ஏற்கனவே இருப்பவர்களை கட்டுப்படுத்துவதையும் தனியாரிடம் ஒப்படைத்துவிட்டால், ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் தனியார் வசம் போய்விடாதா?

சற்றேறக்குறைய இது தமிழ்நாட்டையே தனியாருக்கு விற்பதற்குச் சமமாகும். தி.மு.க.வின் போலி திராவிட மாடல் அதைத்தான் செய்ய விரும்புகிறதா?

தமிழ்நாட்டு இளைஞர்களின் அரசு வேலை கனவைக் குழி தோண்டி புதைக்கும் தி.மு.க அரசின் அரசாணை எண் 115-ஐ உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். அப்படி செய்யாவிட்டால், அரசு ஊழியர்கள்,

இளைஞர் சக்தி மற்றும் பொதுமக்களோடு இணைந்து அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்” என தெரிவித்துள்ளார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in