
திமுக மீது திட்டமிட்டு களங்கம் கற்பிக்க வேண்டுமென்பதற்காக முடித்து வைக்கப்பட்ட வழக்குகளை மீண்டும் நீதிபதி விசாரிக்கத் தொடங்கியுள்ளார் என அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘’நீதிமன்றங்களின் மீது நம்பிக்கை கொண்ட இயக்கம் திமுக. தலைவர் கலைஞர் அவர்கள் மறைந்த நேரத்தில் அவரை அண்ணா சமாதிக்கு அருகே அடக்கம் செய்ய மறுத்த நேரத்தில் அந்த உரிமையை நீதிமன்றத்தின் வாயிலாகத்தான் பெற்றோம்.
கடந்த ஒரு வார காலமாக ஏற்கெனவே முடிக்கப்பட்ட வழக்குகளை தாமாக முன் வந்து விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்புகளை பார்த்தோம். அந்த வழக்குகளை சந்திக்க திமுக தயாராக உள்ளது.
ஏற்கெனவே முடித்து வைக்கப்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்கும் என்று நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அதிமுக ஆட்சிக்காலத்தில், சத்தியதேவ் என்ற நீதிபதி அரசுக்கு எதிர்ப்பான சில தீர்ப்புகள் வழங்கினார் என்பதற்காக அவரது வீட்டின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த ஏ.ஆர்.லட்சுமணனின் மருமகன் மீது கஞ்சா வழக்கு போடப்பட்டது.
அதேபோல், நான் தொடர்ந்த டான்சி வழக்கை விசாரித்த நீதிபதி சிவப்பா, ஜெயலலிதாவின் மனுவை ஏற்காமல் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டதால், 2001-ல் அதிமுக ஆட்சிக்கு வந்தபின்னர், அவர் பந்தாடப்பட்டார். அவர் பதவியையே ராஜினாமா செய்துவிட்டு போனார் என்பதெல்லாம் வரலாறு.
ஆனால், திமுக அப்போதே இந்த சம்பவங்களை எல்லாம் கண்டித்திருந்தது. இதுபோன்ற நடவடிக்கைகளில் அறவே நம்பிக்கை இல்லாத இயக்கம் திமுக. எனவே, நீதிமன்றத்தின் மீது மிகுந்த நம்பிக்கையோடு இருக்கின்ற நாங்கள், கேட்டுக் கொள்வது, ஏற்கெனவே முடித்து வைக்கப்பட்ட வழக்குகளை தாமாக முன்வந்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
திமுக சார்பில் நான் தொடர்ந்த வழக்கு எடப்பாடி பழனிசாமி டெண்டரில் ரூ.3600 கோடிக்கு ஊழலும், முறைகேடுகளும் நடந்துள்ளன என்று 2018-ல் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். உடனடியாக எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றம் சென்று தடை ஆணை பெற்றார்.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த வழக்கு மீண்டும் இதே நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு வந்தபோது, நீதிமன்ற நேரத்தை வீணடிக்கக்கூடாது என்று சொல்லி தீர்ப்பளித்திருந்தார். கடந்த 18.07.2023 அன்று இதே நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ரூ.3600 கோடி அளவுக்கு ஊழல் நடந்த வழக்கில் சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற உத்தரவிடப்பட்ட ஒன்றில், நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்கிற வேலை. நீதிமன்றத்தை அரசியலுக்கான விளையாட்டு மைதானமாக மாற்றாதீர்கள் என்று கூறியிருந்தார்.
ஆனால், இரண்டு வாரங்கள் கழித்து அதே நீதிபதி, வெறும் 44 லட்சம் ரூபாய் சொத்துக்குவிப்பு வழக்கில், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீது வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தை செலவிடுவேன் என்று கூறியிருக்கிறார். அதேபோல பொன்முடி வழக்கில், அவர் மீது எந்த குற்றமும் இல்லை. நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டது.
ஓரிரு நாட்கள் இல்லை, பல ஆண்டுகளாக நடைபெற்றது. விழுப்புரத்தில் இருந்து வேலூருக்கு மாற்றப்பட்டது. உயர் நீதிமன்ற நீதிபதிகள்தான் அதற்கான உத்தரவை பிறப்பித்தனர். அதையெல்லாம் கேலி செய்யும் வகையில், கிண்டல் செய்யும் வகையில், இந்த தீர்ப்பு அமைந்திருக்கிறது.
இந்த வழக்குகளில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் வழங்கிய தீர்ப்புகளை எல்லாம் மனதில் கொள்ளாமல், வழக்கு விசாரணை நடத்தி, விடுவிக்கப்பட்ட ஒருவரை, தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ள நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியிருக்கிறார். அதேபோல தங்கம் தென்னரசு ஏறத்தாழ 74 லட்சம் ரூபாய் என்றால், நங்கநல்லூரில் 600 சதுரஅடி நிலம் வாங்கலாம். கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஒரு 400 சதுரஅடி வாங்கலாம்.
ஆனால், இன்றைக்கும் ஓபிஎஸ் மற்றும் நத்தம் விஸ்வநாதன் எம்எல்ஏவாகத்தான் உள்ளனர். எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் பெற்ற நீதிபதியான அவர், குறிப்பிட்டு தேர்ந்தெடுத்து திமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் குறித்த வழக்குகளை மட்டும் எடுத்து உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்கிறது என்றால், இதுபோல விசாரித்த நீதிமன்றத்துக்கும், நீதிபதிக்கும் இருக்கிறது.
ஆனால், பாகுபாடு பார்த்து விசாரணைக்கு எடுக்கக்கூடாது என்பதுதான் விதி. எனவே, இதை உச்ச நீதிமன்றத்தில் இதையெல்லாம் ஒரு கோரிக்கையாக வைத்து வாதிடுவோம். நீதிமன்றத்தின் மீது திமுகவுக்கு நம்பிக்கை உள்ளது. சட்ட ரீதியாக வழக்குகளை எதிர்கொள்வோம்" என்றார்.