புறக்கணிக்கும் கேஜ்ரிவால், சந்திரசேகர ராவ்: மம்தாவின் முயற்சி வெற்றி பெறுமா?

புறக்கணிக்கும் கேஜ்ரிவால், சந்திரசேகர ராவ்: மம்தாவின் முயற்சி வெற்றி பெறுமா?

குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ள எதிர்கட்சிகள் கூட்டத்தை புறக்கணிக்க தெலங்கானா ராஷ்டிர சமிதி மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஆகியவை முடிவு செய்துள்ளன.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான கூட்டு வியூகத்தை வகுப்பதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 22 எதிர்கட்சிகளுக்கு கடிதம் எழுதியிருந்தார். இது தொடர்பாக ஆலோசனை நடத்த இன்று டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் எதிர்கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

தெலங்கானா ராஷ்டிர சமிதி மற்றும் ஆம் ஆத்மி கட்சி ஆகியவை குடியரசுத் தலைவர் தேர்தல் விவகாரம் தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ள எதிர்கட்சிகளின் கூட்டத்தை புறக்கணிக்க உள்ளன. "வரவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் அறிவிக்கப்பட்ட பின்னரே இந்த விவகாரம் குறித்து பரிசீலிக்கப்படும்" என ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்கிழமையன்று மம்தா பானர்ஜி டெல்லியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, ​​குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்கட்சி வேட்பாளராக சரத் பவாரை முன்னிறுத்த வேண்டுமென மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டார். இருப்பினும் சரத் பவார் இந்த வாய்ப்பை நிராகரித்து, தான் தீவிர அரசியலில் இருக்க விரும்புவதாகக் கூறினார்.

மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ள எதிர்கட்சிகள் கூட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கிறது. இந்த கூட்டத்தில் ராஜ்யசபா எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ஜெய்ராம் ரமேஷ், ரந்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். திமுக, சிவசேனா, மதசார்பற்ற ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரிய லோக் தளம் உள்ளிட்ட பல கட்சிகளும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளன.

மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ள இந்தக் கூட்டத்தில் பல்வேறு எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்து பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்த விவாதத்தை முன்னெடுத்துச் செல்ல வாய்ப்புள்ளது. இந்தச்சூழலில், ஏற்கெனவே இது தொடர்பான முன்னெடுப்புகளை செய்துவரும் சந்திரசேகர ராவ் மற்றும் அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோர் பங்கேற்காதது பரபரப்பை உருவாக்கியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in