டி.ஆர்.பி.ராஜாவை அமைச்சராக்கியது இதற்காகத்தான்: காரணங்களை அடுக்கிய அண்ணாமலை!

அண்ணாமலை
அண்ணாமலைடி.ஆர்.பி.ராஜாவை அமைச்சராக்கியது இதற்காகத்தான்: காரணங்களை அடுக்கிய அண்ணாமலை!

``தமிழக முதல்வர் எந்த அடிப்படையில் டி.ஆர்.பி.ராஜாவுக்கு தொழில்துறை அமைச்சர் பொறுப்பைக் கொடுத்தார் என்பது தெரியவில்லை. அதிக தொழில் நிறுவனங்களை வைத்திருக்கும் குடும்பம் என்ற அடிப்படையில் பார்த்தால் கொடுத்தது நியாயமான ஒன்று தான்'' என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கிண்டல் செய்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய போது அவர், ‘’ஆவடி நாசரை அமைச்சரவையில் இருந்து நீக்கியதை நான் மனதாரப் பாராட்டக் கடமைப்பட்டுள்ளேன். அதேவேளையில், டி.ஆர்.பி.ராஜாவுக்கு எந்த அடிப்படையில் தொழில்துறை அமைச்சர் பொறுப்பை முதல்வர் வழங்கினார் என்பது தெரியவில்லை. ஒருவேளை அதிக தொழில் நிறுவனங்களை வைத்திருக்கும் குடும்பம் என்ற அடிப்படையில் கொடுத்திருந்தால் அது நியாயமான ஒன்று தான்.

தொழில்துறை அமைச்சரால் திறம்பட செயல்பட முடியுமா? என்பது தெரியவில்லை. என்ன காரணம் என்றால் தொழில்துறை அமைச்சரின் குடும்பம் சாராய ஆலையை நடத்தி வருகிறது . நாள்தோறும் மதுவால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. சாராயம் தயாரிப்பில் தொடங்கி விற்பது வரை அனைத்துமே தங்களது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதற்காகதான் டி.ஆர்.பி.ராஜாவை முதல்வர் நியமித்துள்ளார்.

ஓஎன்ஜிசி நிறுவனத்திடம் இருந்து குறைந்த விலைக்கு எரிவாயு கேட்டது குறித்து டி.ஆர்.பாலு விளக்கம் அளிக்கவேண்டும். அமைச்சராக இருக்கும் போதே தனது பதவியை தவறாக பயப்படுத்திய ஒருவர் என் மீது அவதூறு வழக்குப் போடுவது நகைப்புக்குரியதாக உள்ளது. மன்மோகன்சிங் தனது அமைச்சரவையில் டி.ஆர்.பாலுவை சேர்க்க மாட்டேன் என தெரிவித்தார். டி.ஆர்.பாலு மீது நான் வைக்கும் குற்றச்சாட்டுகள் அதிகரிக்குமே தவிர குறையாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனை பலமுறை பாராட்டிய முதல்வர் தற்போது என்ன காரணத்திற்காக அவரை மாற்றினார். ஆடியோ வெளியாகிவிட்டது என்பதற்காக நிதித்துறையில் இருந்து ஐடி துறைக்கு அவரை மாற்றி இருப்பது எந்தவகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. பிடிஆர் எந்த தவறும் செய்யவில்லை, தவறு செய்தது முதல்வரின் குடும்பம்.

ஆடியோ விவகாரத்திலும் முதல்வரின் பெயருக்கு களங்கம் விளைவித்துள்ளேன் அதற்கும் சேர்த்து முதல்வர் என்மீது அவதூறு வழக்குப் போடட்டும். பிடிஆர் பேசிய ஆடியோவை நீதிபதியும் கேட்கட்டும். திமுகவை நேருக்கு நேர் கேள்வி கேட்கும் வகையில் தமிழகத்தில் பாஜக வளர்ந்துள்ளது. ஜுலை முதல் வாரத்தில் திமுக ஊழல் மற்றும் சொத்து பட்டியல் அடங்கிய இரண்டாவது தொகுப்பு வெளியிடப்படும்.

ஆர்.எஸ்.பாரதிக்கு 3-வது முறையாக சவால் விடுக்கிறேன், முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள். ஆருத்ராவில் இருந்து எந்த அமைச்சருக்கு பணம் சென்றிருக்கிறது என்பதை ஜூலை முதல் வாரத்தில் சொல்கிறேன்.

அமைச்சர் சேகர்பாபு மகள் தனது பிரச்சினைக்காக என்னிடம் தான் முதலில் வந்தார். ஆனால் குடும்ப பிரச்சினை என்பதால் நீதிமன்றம் செல்ல சொன்னேன். இங்கு இல்லை என்றால் , கர்நாடக காவல்துறையை அணுக சொன்னேன். குடும்ப பிரச்சினையில் பாஜக தலையிட விரும்புவதில்லை. 

ஆனால் அரசு எந்திரம் , தமிழக காவல்துறையை பயன்படுத்தி அந்த சகோதரிக்கு மனச்சுமையை ஏற்படுத்தி உள்ளனர். சாமானிய மனிதன் மீது தொடர்ந்து வழக்கு போடுவது தவறு. முதலமைச்சர் டிஜிபிக்கு இது குறித்து உத்தரவிட வேண்டும். அரசு தவறு செய்யவில்லை என்றால் வழக்கு ஏன் தொடரப்பட்டது என முதல்வர் வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும்’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in