ஸ்டாலின் கையிலெடுக்கும்  ‘அம்மா அரசியல்’!

ஸ்டாலின் கையிலெடுக்கும் ‘அம்மா அரசியல்’!

ஆணைய அறிக்கையை வைத்து ஆட்டம்காட்டப்போகும் திமுக!

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை மீதான மேல் நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சூசகமாகச் சொல்லி இருக்கும் சில விஷயங்கள் அதிமுகவுக்குள் சிலருக்கு கிலியை உண்டாக்கி இருக்கிறது.

ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு தரப்பினர் எழுப்பிய சந்தேகம் குறித்து விசாரிக்க கடந்த 2017-ல், ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. பல்வேறு தடங்கல்களைக் கடந்து தனது விசாரணையின் இறுதி அறிக்கையை ஆறுமுகசாமி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அண்மையில் தாக்கல் செய்தார். இதையடுத்து, முதல்வர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் விரிவான விவாதமும் நடைபெற்றது.

இது தொடர்பாக அரசு சார்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பில், சசிகலா, ஜெயலலிதாவின் குடும்ப மருத்துவர் சிவக்குமார், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அப்போதைய தலைமைச் செயலாளர் ராமமோகனராவ் உள்ளிட்டோர் மீது அரசு விசாரணைக்கு உத்தரவிட ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அண்மையில் கோவை சென்றிருந்த முதல்வர் ஸ்டாலின், “ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் பல பிரச்சினைகள் இருக்கிறது. அதைச் சட்டமன்றத்தில் வெளிப்படையாக வைத்து, அதற்கு உரிய நடவடிக்கையைச் சட்டமன்றத்தின் மூலமாகவே நிறைவேற்றிக் காட்டுவோம்” என்றார். இதுதான் அதிமுக கூடாரத்தில் உள்ள சிலருக்கு பிபீயை எகிறவைத்திருக்கிறது.

விசாரணை அமைப்புகளுக்குச் சம்மன் அனுப்ப முடியுமே தவிர ஆணையத்தின் முன்பு ஆஜராகாதவர்கள் மீது வாரண்ட்கூட பிறப்பிக்க முடியாது. அதனால் தான் சசிகலா உள்ளிட்டவர்கள் நேரில் ஆஜராக மறுத்து ஆறுமுகசாமி ஆணையத்திற்குக் கடிதம் மூலமாக வாக்குமூலம் அளித்தனர். ஆணையத்திற்கு அதிகாரம் இல்லை என்றாலும் ஆணையம் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் தொடர்புடையவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து அரசு மேல் விசாரணையைத் தொடர முடியும். குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த ஆணை பிறப்பிக்க தமிழக அரசுக்கு எல்லாவிதமான அதிகாரமும் உள்ளது.

ஆணையத்தின் அறிக்கையை சட்டமன்றத்தில் வைத்து விவாதம் நடத்தும் போது, எடப்பாடி பழனிசாமியோ, அவரது ஆதரவாளர்களோ சசிகலாவுக்கு ஆதரவாகச் செயல்பட வாய்ப்பு மிகக் குறைவு. சசிகலாவை ஆதரிக்கும் மனநிலையில் தற்போது ஓபிஎஸ் இருக்கிறார். ஆனால், அவரது வற்புறுத்தலின் பெயரிலேயே விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது என்பதால், அவர் இதற்கு எப்படி எதிர்வினையாற்றுவார் என்பது அப்போதுதான் தெரியும்.

மேல் நடவடிக்கை தொடரும் பட்சத்தில் சசிகலா, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன்ராவ் உள்ளிட்டவர்கள் மட்டுமே விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்படுவார்கள் எனச் சொல்ல முடியாது. டாக்டர் சிவக்குமார், டாக்டர் வெங்டேஷ், இளவரசி என இன்னும் சிலரது வாக்குமூலங்களும் பெறப்பட்டுள்ளதால் அவர்களுக்கும் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இது தொடர்பாக அரசு தலைமை வழக்கறிஞர் மற்றும் சட்ட வல்லுநர்களிடம் தமிழக அரசு ஆலோசனை நடத்த இருக்கிறது. இதைவைத்துப் பார்த்தால், சிபிசிஐடி, சிபிஐ, சிறப்புப் புலனாய்வுக் குழு என ஏதாவது ஒரு விசாரணை அமைப்பு மூலம் மேல் விசாரணை நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் நிறையவே தெரிகின்றன.

‘அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பாக ஜெயலலிதாவுக்கு உயர் ரத்த அழுத்தம், தைராய்டு, ரத்தத்தில் மிகையான சர்க்கரை உள்பட பல்வேறு பிரச்சினைகள் இருந்துள்ளது. மேலும், ஜெயலலிதா மருத்துவமனை யிலிருந்தபோது திராட்சை, கேக், இனிப்புகளையும் சாப்பிட்டுள்ளார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எவ்விதமான தவறுகளும் இல்லை. கட்டுப்படுத்த முடியாத அளவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்தத்தில் பாக்டீரியா பரவி இருந்தது’ என எய்ம்ஸ் அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதைவைத்தே சந்தேகத்தைக் கிளப்ப முடியும். ஆனால், இதையெல்லாம் சட்டப்பேரவையில் அழுத்தமாகப் பேசுவது யார் என்பதுதான் தற்போதைய சிக்கல். எய்ம்ஸ் அறிக்கையின்படி, ஜெயலலிதாவை உடனிருந்து பார்த்துக்கொண்டவர்கள் கவனக் குறைவாகச் செயல்பட்டார்கள் அல்லது உள்நோக்கத்தோடு செயல்பட்டார்கள் என யார் வேண்டுமானாலும் சந்தேகம் கிளப்ப முடியும். அப்படி கிளப்பினால் அதை தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பும் இப்போதுள்ள அரசுக்கு இருக்கிறது.

இந்தத் தருணத்தைத்தான் திமுக அரசு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால், அதிமுகவுக்குள் இப்போது நிலவும் ஒற்றைத் தலைமை விவகாரத்தால் அம்மா மரணம் குறித்து யாரும் வாய்திறக்க மாட்டார்கள். அப்படி யாராவது வாய் திறந்தால் அதையே ட்ரம் கார்டாக வைத்து மேல் விசாரணையின் அடுத்தகட்டத்துக்கு எளிதாக நகர்ந்துவிடும் திமுக அரசு. ஆனால், அதற்கான வாய்ப்பு குறைவு என்பதால் தனது கூட்டணிக் கட்சி தரப்பிலிருந்தே யாராவது ஒரு உறுப்பினரை சட்டப் பேரவையில் இதுகுறித்து திமுகவே கேள்வி எழுப்பவைக்கும். அந்த உறுப்பினருக்கு பொறுப்பாக பதிலளிக்கும் அரசு, ஜெயலலிதா மரணத்தில் யார் யாரெல்லாம் விசாரிக்கப்படுவார்கள் என்பது குறித்து வெளிப்படையாகவே அறிவிக்கும். அப்போதும் அதிமுக தரப்பில் யாரும் வாய்திறக்க முடியாது.

இதையே வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு அடுத்தகட்ட விசாரணைக்கு ஆணையிடும் அரசு, அந்த விசாரணையை வைத்து அடுத்து வரும் மாதங்களில் அதிமுகவில் சிலரது தலைகளை உருட்டப் பார்க்கும். இதன் மூலம், அம்மா தான் எல்லாமே என்று சொல்லி அரசியல் செய்பவர்கள் எப்படியெல்லாம் அந்த அம்மாவுக்கே துரோகம் செய்திருக் கிறார்கள் என்று பொதுவெளியில் பேசவைக்கும். அதன் மூலம் அதிமுகவுக்கு இருக்கும் மிச்சம் சொச்சம் செல்வாக்கையும் சரிக்கும் அரசியல் நடக்கும். இதையெல்லாம் ஓபிஎஸ், ஈபிஎஸ், சசிகலா உள்ளிட்டவர்கள் எப்படிச் சமாளித்து தாக்குப்பிடிக்கப் போகிறார்கள் என்பதற்கான பதிலை காலம் தான் தீர்மானிக்கும்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in