திரிபுரா மகளிர் ஆணையத் தலைவி மீது கடும் தாக்குதல்: பாஜகவினர் மீது குற்றச்சாட்டு

திரிபுரா மகளிர் ஆணையத் தலைவி மீது கடும் தாக்குதல்: பாஜகவினர் மீது குற்றச்சாட்டு

திரிபுரா மகளிர் ஆணையத் தலைவி பர்னாலி கோஸ்வாமி, தாம்நகரில் பாரதிய ஜனதா கட்சியினரால் நேற்று தாக்கப்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பாஜக கவுன்சிலர்கள் சிலரும் இந்த தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது.

பாஜக மூத்த தலைவரும், திரிபுரா மகளிர் ஆணையத் தலைவியுமான பர்னாலி கோஸ்வாமி, பக்கத்து வீட்டுக்காரரைச் சந்திக்கச் சென்றபோது சுமார் 200 பெண்களும் , ஆண்களும் அவரை தாக்கியதாகக் குற்றம்சாட்டியுள்ளார். அவர், "தாக்குதலில் நான் காயமடைந்தேன். தாக்குதல் நடத்தியவர்கள் எனது சேலை மற்றும் பிற ஆடைகளை கிழித்துவிட்டனர். பலமுறை தொலைபேசியில் அழைத்தும் காவல்துறை எனக்கு உதவவில்லை” என்று கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், திரிபுரா முதல்வர் மாணிக் சாஹாவுக்கும் இது குறித்து பர்ணாலி கோஸ்வாமி புகார் அளித்துள்ளார். இத்தாக்குதலில் மேலும் இருவரும் காயமடைந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் பர்ணாலி கோஸ்வாமிக்கு பாஜக சார்பில் டிக்கெட் மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் தாம்நகர் எம்எல்ஏவான பாஜகவின் பிஸ்வா பந்து சென்னுக்கு எதிராக செயல்படத் தொடங்கினார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக இந்த தாக்குதல் நடந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

60 இடங்களைக் கொண்ட திரிபுரா சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 16ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெறும். இந்த தேர்தலில் பாஜக 55 இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணி (ஐபிஎஃப்டி) 5 இடங்களிலும் போட்டியிடுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in