திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா தேர்தல்: பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
வாக்கு எண்ணிக்கை தொடங்கியதுதிரிபுரா, நாகாலாந்து, மேகாலயா தேர்தல்: பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது.

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ள சட்டப்பேரவைகளுக்கு கடந்த ஜன.18-ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. திரிபுராவில் உள்ள 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 16-ம் தேதி தேர்தல் நடைபெற்றது அங்கு 90 சதவீத வாக்குகள் பதிவாகின.

அதே போன்று தலா 60 இடங்களைக் கொண்ட மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே கட்டமாக 27-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருந்தது. ஆனால் மேகாலயாவில், சோஹியாங் தொகுதியில் ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் டான்குபார் ராய் லிங்டோ மறைவால் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது. இதனால் எஞ்சிய 59 தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

நாகாலாந்தில், அகுலுட்டோ தொகுதியில், தற்போதைய எம்எல்ஏ காஜெட்டோ கினிமி, போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனவே 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. திரிபுராவில் 90 சதவீதமும், மேகாலயாவில் 85 சதவீதமும், நாகாலாந்தில் 84 சதவீதமும் வாக்குகள் பதிவாகின.

இதேபோன்று மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டசபை தேர்தல்களுடன் ஒரு எம்.பி. மற்றும் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மூன்று மாநிலங்களிலும், இடைத்தேர்தல் நடந்த 5 மாநிலங்களின் 6 சட்டப்பேரவைத்தொகுதிகளிலும் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் மூன்று மாநில சட்டசபை தேர்தலிலும், இடைத்தேர்தலைச் சந்தித்த 5 மாநிலங்களின் 6 சட்டப்பேரவைத் தொகுதிகளின் தேர்தல்களிலும் முடிவுகள் அறிவிக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மூன்று மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்று எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in