‘பெங்கால் மாடல் ஆட்சியமைப்போம்’ - புது முழக்கத்துடன் களமிறங்கும் மம்தா பானர்ஜி!

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தை தாண்டி தேசிய அளவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை விரிவுபடுத்த முயன்று வருகிறார். இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள திரிபுரா தேர்தலில் "பெங்கால் மாடல்" ஆட்சியமைப்போம் என்ற முழக்கத்துடன் மம்தா பானர்ஜி தீவிரமாக களம் இறங்கியுள்ளார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 132 பேர் கொண்ட மாநிலக் குழுவை இரண்டரை மாதங்களுக்கு முன்னர் அறிவித்த நிலையில், நேற்று திரிபுரா மாநில தலைநகர் அகர்தலாவில் தனது கட்சியின் மாநிலத் தலைமையகத்தை அமைத்தது. ஏற்கனவே திரிணாமுல் காங்கிரஸ் வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம் மற்றும் மேகாலயாவில் தலைமை அலுவலகங்களை அமைத்து கட்சியை வலுப்படுத்திவருகிறது.

2011-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி திரிபுரா மக்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானோர் வங்க மொழி பேசுகின்றனர். அதைத் தொடர்ந்து 25 சதவீதம் பேர் கோக்போரோக் மற்றும் திரிபுரி மொழி பேசுகின்றனர். வங்கமொழி பேசும் மக்கள் அதிகம் உள்ள காரணத்தால் திரிபுராவில் ‘பெங்கால் மாடல்’ ஆட்சியை அமைப்போம் என்ற முழக்கத்துடன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரும் தேர்தலை சந்திக்கவுள்ளது. இதற்காக மாற்றுக்கட்சிகளில் இருந்தும் பல்வேறு முக்கிய பிரமுகர்களை தங்கள் கட்சிக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இழுத்து வருகிறது.

இது தொடர்பாக பேசிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநில பொறுப்பாளர் ராஜீப் பானர்ஜி, "திரிபுராதான் எங்கள் அடுத்த இலக்கு, அந்த மாநிலத்தில் பெங்கால் மாதிரி ஆட்சியை அமல்படுத்துவோம். பாஜகவை ஆட்சியில் இருந்து வெளியேற்றுவோம். மேற்கு வங்க அரசால் தொடங்கப்பட்ட அனைத்து சமூக நல திட்டங்களும் திரிபுராவில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் செயல்படுத்தப்படும்” என்று அவர் கூறினார்.

திரிணாமுல் காங்கிரஸின் திரிபுரா பிரிவு தலைவர் சுபால் பௌமிக் பேசுகையில், “எங்கள் கட்சி அலுவலக திறப்பு விழாவுக்கே ஆளுங்கட்சியினர் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்த முயன்றனர். ஆனால் திரிபுரா மக்கள் எங்களுடன் இருக்கிறார்கள், திரிபுராவை ஒடுக்கும் பாஜக ஆட்சியில் இருந்து விடுவிக்க மம்தா பானர்ஜியின் தலைமையை அவர்கள் விரும்புகிறார்கள்” என தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in