பிஹார் மக்களால் நோய் பரவுவதாகச் சொல்வதா? - திரிணமூல் எம்எல்ஏ பேச்சால் சர்ச்சை

மனோரஞ்சன் வியாபாரி
மனோரஞ்சன் வியாபாரி

கொல்கத்தாவில் நடந்துவரும் புத்தகக் காட்சியில் பிஹார் மாநிலத்தவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ மனோரஞ்சன் வியாபாரிக்குக் கண்டனங்கள் குவிந்துவருகின்றன.

“உங்கள் நரம்புகளில் வங்காளி ரத்தம் ஒடுகிறது எனில், குதிராம் போஸ் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் ரத்தம் உங்கள் நரம்புகளில் ஓடுகிறது எனில், உங்கள் தாய்மொழியையும் தாய் மண்ணையும் நேசிக்கிறீர்கள் எனில் - ‘ஏக் பிஹாரி செள பீமாரி’ (ஒரு பிஹாரி, நூறு நோய்கள்) எனச் சத்தமாகச் சொல்லுங்கள். நமக்கு நோய்கள் வேண்டாம். வங்கத்தை நோயற்ற ஒன்றாக ஆக்குங்கள்” என்று பேசிய அவர், முத்தாய்ப்பாக வங்காளம் வாழ்க. தீதி மம்தா வாழ்க என்றும் கூறியிருந்தார்.

இந்த விவகாரத்தை மேற்கு வங்க பாஜகவினர் கையிலெடுத்திருக்கிறார்கள். இந்தக் காணொலியை ட்விட்டரில் பகிர்ந்திருக்கும் பாஜக எம்எல்ஏ சுவெந்து அதிகாரி, திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியையும் கடுமையாகச் சாடியிருக்கிறார். “முதலில் பிஹாரிகளையும், உத்தர பிரதேசத்தவர்களையும் வெளியாட்கள் என்றார். இப்போது வங்கத்தை பிஹாரிகளிடமிருந்து விடுவியுங்கள் என்று தெளிவாக அழைப்பு வந்திருக்கிறது” என்று தனது பதிவில் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

பாஜகவிலிருந்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த நடிகர் சத்ருகன் சின்ஹா பிஹாரைச் சேர்ந்தவர். தற்போது மேற்கு வங்க இடைத்தேர்தலில் அவர் வேட்பாளராக நிறுத்தப்படுகிறார்.

சத்ருகன் சின்ஹா
சத்ருகன் சின்ஹா

இந்நிலையில், “சத்ருகன் சின்ஹாவுக்கு எனது பணிவான கேள்வி இதுதான். திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ மனோரஞ்சன் வியாபாரியின் அவமானகரமான கூச்சலைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் சேர்ந்திருக்கும் கட்சியில் உள்ள அவர், பிஹாரிகள் குறித்த தனது எண்ணத்தை மிகத் தெளிவாக உணர்த்திவிட்டார்” என்று அவரையும் சீண்டியிருக்கிறார் சுவெந்து அதிகாரி.

2021 மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் ஹூக்ளி தொகுதியில் போட்டியிட்டு வென்ற மனோரஞ்சன் வியாபாரி பற்றி ஒரு விசேஷத் தகவல் உண்டு. 24 வயதில் சிறைக்குச் சென்ற அவர், சிறையிலேயே வாசிப்பில் ஈடுபாடு கொண்டு நிறைய புத்தகங்கள் வாசித்தவர். நிறைய புத்தகங்களும் எழுதியிருக்கிறாராம். முற்போக்கான கருத்துகள் கொண்டவராகவே கருதப்படுகிறார். ரிக்‌ஷா ஓட்டுவது உட்பட பல்வேறு பணிகளைச் செய்த அனுபவம் கொண்ட அவர், அரசுப் பள்ளியில் சமையல்காரராகப் பணிபுரிந்துவந்தார். பின்னர், அரசு நூலகத்தில் அவருக்குப் பணி கிடைத்தது. எளிய மக்களின் வலி அறிந்த எழுத்தாளராக அறியப்படும் அவர், கடும் உழைப்பாளிகளான பிஹார் மக்களைப் பற்றி அப்படிப் பேசியதுதான் முரண்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in