திருச்சி சிவாவின் மகனுக்கு முக்கிய பொறுப்பு வழங்கிய பாஜக!

சூர்யா சிவா பாஜகவில் இணைந்த போது
சூர்யா சிவா பாஜகவில் இணைந்த போது

அண்மையில் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவின் மகன் சூர்யாவுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பை வழங்கியிருக்கிறது தமிழக பாஜக.

திமுகவில் அதிருப்தியில் இருந்த திருச்சி சிவாவின் மகன் சூர்யா சிவாவை கடந்த மாதம் தங்கள் கட்சிக்கு கொண்டு வந்து சேர்த்தது பாஜக. அப்போது அவருக்கு மாநில அளவிலான முக்கிய பொறுப்பு வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப் பட்டிருந்தது. சொன்னது போலவே தற்போது பாஜக ஓபிசி பிரிவின் மாநில பொதுச் செயலாளராக அவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

சூர்யாவை திமுகவுக்கு கொண்டுவந்தபோது, ``பாருங்கள் எவ்வளவு பெரிய தலைவரின் மகனை பாஜகவுக்கு கொண்டு வந்து விட்டோம்'' என்று பாஜகவினர் மார்தட்டிக் கொண்டார்கள். அவர்களுக்கு ஏற்றார்போல தனது தந்தை உள்ளிட்ட திமுகவினரையும், திமுக தலைமையையும் மிக கடுமையாக விமர்சித்து வந்தார் சூர்யா.

சூர்யா சிவா
சூர்யா சிவா

அதை ஊக்கப்படுத்தும் விதமாக பாஜக தலைமை, தற்போது ஓபிசி பிரிவு பொதுச்செயலாளர் பொறுப்பை வழங்கியிருக்கிறது. சூர்யாவுக்கு இப்பொறுப்பு வழங்கப்பட்டதற்கு முக்கியமான காரணமும் இருக்கிறது. கடந்த தேர்தலில் அதிமுகவுக்கு முக்குலத்தோர் சமுதாய வாக்குகள் அதிகம் கிடைக்கவில்லை என்பதை சரியாக புரிந்து கொண்டுள்ள பாஜக, அந்த வாக்குகளை தங்கள் பக்கம் கொண்டுவர தீவிர திட்டமிட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாகவே, முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த சூர்யாவிற்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. முற்பட்ட வகுப்பினர் மற்றும் பட்டியலினத்தவர் தவிர மீதமுள்ள அனைத்துப் பிரிவினரையும் ஒருங்கிணைக்கும் பொதுவான பதவி இது என்றாலும், அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் முக்கிய பணி என்பது முக்குலத்தோர் சமுதாய வாக்குகளை பாஜகவுக்கு ஆதரவாக திரட்டுவதுதான் என்கிறார்கள்.

திராவிடக் கட்சிகளில் அதிருப்தியில் இருக்கும் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் செல்வாக்கு மிக்க பிரமுகர்களை பாஜகவுக்கு கொண்டு வருவது, அல்லது பாஜகவுக்கு ஆதரவாக திரட்டுவது என்பதுதான் சூர்யாவுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய பணியாக இருக்கும் என்கிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in