‘உள்ளடி வேலை செய்தவர்களுக்கு நன்றி!’ பெரும் கசப்பில் திருநாவுக்கரசர் அறிக்கை

சு.திருநாவுக்கரசர்
சு.திருநாவுக்கரசர்

'தேர்தலில் போட்டியிட தனக்கு சீட் கிடைக்கவிடாமல் தடுத்தவர்களுக்கு நன்றி' என திருச்சி தொகுதியின் தற்போதைய எம்பி-யும், காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவருமான சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர் கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் திருச்சி மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் தற்போது திருச்சி மக்களவைத் தொகுதி கூட்டணியில் உள்ள மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டு அக்கட்சியின் முதன்மை செயலாளரும், வைகோவின் மகனுமாகிய துரை வைகோ போட்டியிடுகிறார்.

முன்னதாக திருச்சி தொகுதியை திருநாவுக்கரசருக்கு ஒதுக்கக் கூடாது என அவரது அரசியல் எதிரிகள் காங்கிரஸ் கட்சிக்குள்ளும், திமுக தலைமைக்கும் தூபம் போட்டதாக தகவல்கள் கசிந்தன.

துரை வைகோ
துரை வைகோ

குறிப்பாக திருச்சி தொகுதியில் வெற்றி பெற்ற பின்னர், திருநாவுக்கரசர் தொகுதி பக்கமே தலைகாட்டவில்லை என தேர்தல் நேரத்தில் செய்திகள் பரவத் தொடங்கியதால் இந்த முறை அவருக்கு மீண்டும் சீட் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகவே இருந்து வந்தது.

சமீபத்தில் திருச்சி வந்த திருநாவுக்கரசரிடம் நீங்கள் தொகுதி பக்கமே வரவில்லை என குற்றச்சாட்டு உள்ளதே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு ஆத்திரமடைந்த திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம் கடுமையாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.சுதா
மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் ஆர்.சுதா

இந்நிலையில் திருச்சி தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் திருநாவுக்கரசருக்கு மயிலாடுதுறை தொகுதி ஒதுக்கப்படும் என பேச்சுகள் அடிபட்டன. அந்த தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் பிரமுகர்கள் கடும் போட்டியில் ஈடுபட்டதால் வேட்பாளர் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டது.

கடைசியில் மயிலாடுதுறைக்கு ஆர்.சுதா காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் இந்த மக்களவைத் தேர்தலில் திருநாவுக்கரசருக்கு எந்தத் தொகுதியிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்நிலையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள சு.திருநாவுக்கரசர், கடந்த 5 ஆண்டுகளில் திருச்சி மக்களவைத் தொகுதியில் தான் மேற்கொண்ட பணிகளை பட்டியலிட்டு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

திருநாவுக்கரசர் நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள கடிதம்
திருநாவுக்கரசர் நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள கடிதம்

ஆனால் அந்த அறிக்கையின் கடைசிப் பகுதியில், “நாடாளுமன்ற உறுப்பினராக நான் தொடரக் கூடாதென இத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிட்டாமல் போக முயன்றவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி" என தெரிவித்துள்ளார்.

உள்ளடி வேலை செய்து தனக்கு சீட் கிடைக்காமல் செய்தவர்களுக்கு சு.திருநாவுக்கரசர் நன்றி தெரிவித்த கடிதம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in