மேயருக்கே தெரியாமல் ஆலோசனைக் கூட்டம் நடத்திய திருச்சி துணை மேயர்!

திருச்சி திமுகவில் சலசலப்பு
துணை மேயர் திவ்யாவை வாழ்த்தும் அன்பழகன்
துணை மேயர் திவ்யாவை வாழ்த்தும் அன்பழகன்

திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகனுக்கு தெரியாமல் துணை மேயர் திவ்யா மாமன்ற உறுப்பினர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியது திருச்சி திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருச்சி மேயராக அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளரான அன்பழகன் இருக்கிறார். துணை மேயராக தனது ஆதரவாளரான மதிவாணனைக் கொண்டுவர அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மெனக்கிட்டார். ஆனால், அன்பழகனும் மதிவாணனும் ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் மதிவாணனை துணை மேயராக்க நேரு ஆதரவாளர்கள் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் தனது பிடியை விட்டுக்கொடுக்காத மகேஷ் பொய்யாமொழி, தனது ஆதரவாளரான ஜி.திவ்யாவை துணை மேயர் பதவிக்கு சிபாரிசு செய்து அவரை அந்தப் பதவியில் அமரவைத்தார்.

இந்த நிலையில், பதவியேற்பு நிகழ்வுகளைத் தவிர முறைப்படியான முதல் மாமன்ற கூட்டமே இன்னும் நடக்காத போது, கடந்த வாரம் மாமன்ற உறுப்பினர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி இருக்கிறார் துணை மேயர் திவ்யா. இந்தக் கூட்டத்தில் உதவி ஆணையர் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் சிலரும் கலந்து கொண்டிருப்பது திருச்சி திமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இது தொடர்பாக திருச்சி திமுக நிர்வாகிகள் சிலர் நம்மிடம் பேசுகையில், “துணை மேயர் பதவி மதிவாணனுக்குக் கிடைக்காமல் போனாலும் அவர் தான் திவ்யாவை இயக்குவதாக கட்சிக்குள் ஒரு பேச்சு இருக்கிறது. கோட்டத் தலைவர்கள் உள்ளிட்ட பதவிகளுக்கு இம்மாத இறுதியில் தேர்தல் நடக்கவிருக்கிறது. அதில் தங்களது ஆதரவாளர்களைக் கோட்ட தலைவர்களாக கொண்டுவர அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தரப்பில் காய் நகர்த்துகிறார்கள். இப்போதுள்ள சூழலில் மகேஷ் தரப்புக்கும் நேரு தரப்புக்கும் தலா 2 கோட்டத் தலைவர்கள் பதவி கிடைக்க வாய்ப்பிருக்கிறது.

இதற்கு நடுவில், மாமன்ற உறுப்பினர்கள் மத்தியில் தனக்கான செல்வாக்கைக் காட்டுவதற்காக கவுன்சிலர்களை அழைத்து கூட்டம் போட்டிருக்கிறார் திவ்யா. ‘உங்களில் வார்டுகளில் என்னென்ன பிரச்சினைகள் உள்ளன. அதுபற்றி லிஸ்ட் கொண்டு வாருங்கள். அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கலாம்’ என்று சொல்லித்தான் கவுன்சிலர்களை கூட்டத்துக்கு அழைத்திருக்கிறார் திவ்யா. ஒரு சிலருக்கு இந்தக் கூட்டம் எதற்காகக் கூட்டப்படுகிறது என்ற விஷயம் தெரிந்திருந்தாலும் இன்னும் சிலர் உண்மையான காரணம் தெரியாமலேயே கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள். மகேஷ் பொய்யாமொழியின் திருவெறும்பூர் கோட்டத்துக்கு உபட்ட 16 கவுன்சிலர்களும், அரியமங்கலம் கோட்டத்துக்கு உட்பட்ட 6 கவுன்சிலர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.

திவ்யா
திவ்யா

கூட்டத்தில் பேசிய துணை மேயர் திவ்யா, ‘நியாயமா பார்த்தா மதி அண்ணன் தான் துணை மேயரா வந்திருக்கணும். ஒருசில சூழ்நிலைகள் காரணமாகவே நான் இந்தப் பதவிக்கு வரவேண்டியதா போச்சு. இருந்தாலும் நீங்கள் அனைவரும் மதி அண்ணன் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும்’ என்று சொன்னதாகத் தெரிகிறது. அவர் இப்படிப் பேசிய பிறகுதான் சிலருக்கு கூட்டத்துகான உண்மையான காரணம் தெரியவந்திருக்கிறது.

இந்தக் கூட்டம் நடந்த விஷயம் உடனடியாக மேயருக்கு தெரிவிக்கப்பட்டு அவரும் இந்த விஷயத்தை அப்போதே அமைச்சர் நேருவின் கவனத்துக்குக் கொண்டுபோய் விட்டார். ஆனால், தம்பி மகன் திருமண ஏற்பாடுகளில் இருந்ததால் நேருவுக்கு இந்த விஷயத்தை கவனிக்க நேரமில்லை. இந்த நிலையில், இப்போது இந்த விவகாரம் நேரு மூலமாக தலைமையின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுவிட்டது. மேயரின் அனுமதி இல்லாமல் அதிகாரிகள் யாரும் இனிமேல் இதுபோன்ற கூட்டங்களில் கலந்துகொள்ளக்கூடாது என மாநகராட்சி அதிகாரிகளுக்கு மேயர் தரப்பில் இருந்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது” என்றனர்.

மதுரை திமுக மேயர் இந்திராணிக்கு சொந்தக் கட்சியினரே ஒத்துழையாமை இயக்கம் நடத்தி குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதுபோல, திருச்சியில் திமுக துணை மேயர் திவ்யாவை வைத்து திமுக மேயருக்கே திகில் கொடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள். இது எங்கு போய் முட்டும் என்று தெரியவில்லை.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in