திருச்சி என் இரண்டாம் தாய்வீடு!

திருச்சியில் தங்கியிருந்த நாட்கள் குறித்து ஜெயக்குமார் நெகிழ்ச்சி
திருச்சி என் இரண்டாம் தாய்வீடு!
திருச்சியில் இருந்து புறப்பட்டபோது

நிபந்தனை ஜாமீனில் வந்து திருச்சியில் தங்கியிருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நிபந்தனை ஜாமீன் முடிந்து சென்னை திரும்பிவிட்டார். ஆனாலும் அவரது மனதிற்குள் திருச்சி மக்கள் காட்டிய அன்பும், திருச்சி அதிமுகவினரின் உபசரிப்பும் நிரந்தரமாகத் தங்கிவிட்டது. அதை வெளிக்காட்டும் வகையில், 'என் நெஞ்சுக்கு நெருக்கமான மலைக்கோட்டை மாநகர மக்களே' என்று தலைப்பில் அறிக்கை வெளியிட்டு திருச்சி மக்களுக்கு நன்றி தெரிவித்திருக்கிறார்.

அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

“மணலிலே கோட்டை கட்டி விளையாடும் வடசென்னையிலே பிறந்த நான், மலைகோட்டை மாநகரில் தங்கியிருந்தேன். நான் ஏன் அங்கு வந்தேன்? என்ன கிடைத்தது? நடந்ததை நாடறியும். ஆனாலும் நினைவூட்டுகிறேன்.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வட சென்னையில் ஒரு வாக்குச் சாவடியைக் கைப்பற்றி கள்ள ஓட்டு போட முயன்ற திமுகவைச் சேர்ந்த, பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஒருவரைக் கையும் களவுமாகப் பிடித்து கொடுத்தத்தற்கு திமுக அரசு தந்த பரிசு சிறைவாசம். இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம் என்றார்கள். ஆனாலும் அஞ்சவில்லை. புழல் எனக்கு நிழலாகத்தான் பட்டது.

சட்டப் போராட்டங்கள் நடத்திய பிறகு நீதிமன்றம் தந்த பரிசு திருச்சியில் தங்கி இருந்து கையெழுத்து போட வேண்டும் என்பது. ஆகா, இது எப்பேர்பட்ட பரிசு என்று அங்கு வந்த பிறகுதான் நான் உணர்ந்துகொண்டேன். மலைகோட்டை மாநகரில் நான் வந்து இறங்கிய நாள் முதல் நீங்கள் காட்டிய அன்பும், வாஞ்சையும் அளவிட முடியாதது. விருந்து உபசரிப்பாலும், அன்பு அரவணைப்பாலும் என்னைத் திக்குமுக்காடச் செய்துவிட்டீர்கள். வெயிலுக்குக் குடையாகவும், தாகத்துக்கு நீராகவும், நோய்க்கு மருந்தாகவும் இருந்தது உங்கள் பாசப் பிணைப்பு.

ஒட்டுமொத்த திருச்சி மாவட்டமும் வந்து கவனித்துக்கொண்டது என்னை. அறுசுவையைத் தாண்டியது உங்கள் அன்புச் சுவை. போதாக்குறைக்குத் தென் மாவட்டங்களில் இருந்தும் கிளம்பிவந்து திருச்சி மாவட்டத்தைத் திருவிழாவாக ஆக்கிவிட்டீர்கள். அங்கு தங்கியிருந்த இரண்டு வாரங்களும் வரம் பெற்ற வாரங்கள். என் நினைவில் பொன்னெழுத்துக்களால் நிரம்பிவிட்டது திருச்சி மாநகர்.

நிபந்தனையாகத்தான் திருச்சியில் தங்க வேண்டி இருந்தது. ஆனால் புறப்படவே மனம் இல்லை. என் இரண்டாம் தாய்வீடாக மாறிவிட்ட திருச்சி மண்ணையும், உங்கள் அன்பையும் நினைத்து மனம் விம்முகிறது.”

இவ்வாறு அந்த அறிக்கையில், திருச்சி மக்களுக்கும் அதிமுகவினருக்கும் ஜெயக்குமார் மனமார நன்றி தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.