‘நிதியமைச்சருக்கு உடல்நிலை சரியில்லையென்றால் அரசாங்கமே நடக்காதா?’ - டி.ஆர்.பாலு கொந்தளிப்புக்குக் காரணம் இதுதான்!

‘நிதியமைச்சருக்கு உடல்நிலை சரியில்லையென்றால் அரசாங்கமே நடக்காதா?’ - டி.ஆர்.பாலு கொந்தளிப்புக்குக் காரணம் இதுதான்!

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உட்பட நான்கு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் விலைவாசி உயர்வைக் கண்டித்துத் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதனால் அவை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் மதியம் 3 மணிக்குத் தொடங்கியது. அப்போதும் காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், ரம்யா ஹரிதாஸ், டி.என் பிரதாப் உள்ளிட்ட நான்கு காங்கிரஸ் உறுப்பினர்களும் அவை கூட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக நடப்பு கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர். பாலு, “நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் குறித்து சபாநாயகர் தன்னிச்சையாக முடிவெடுத்திருந்தால் ஏற்றுக் கொள்ளலாம். மத்திய அரசு முன்மொழிவதைச் சபாநாயகர் அப்படியே ஏற்றுக் கொள்கிறார். ஒரு சபாநாயகர் தனது ஆளுகைக்கு உட்பட்டு நாடாளுமன்றம் நடத்த வேண்டுமானால் முன்கூட்டியே வெளிப்படையான விவாதக் கூட்டம் நடத்த வேண்டும். அவர்கள் நடத்திய அந்த கூட்டத்தில் இரண்டே பொருள் குறித்துப் பேசுவதற்காக மட்டும் கூட்டம் போட்டார்கள். ஆனால் அதைப் பற்றியும் அவையில் பேசவில்லை. நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி தலைவர்களை கொண்டு முன்கூட்டியே கூட்டம் கூட்டி நாடாளுமன்றத்தை நடத்தச் சபாநாயகரிடமும், ஆளுங்கட்சி தலைவர்களிடம் தெரிவித்தோம். ஆனால் அவர்கள் அதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. அரசாங்கம் என்ன சொல்கிறதோ அதை செய்யக் கூடிய நிலையில்தான் சபாநாயகர் இருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் பேசும் போது விலைவாசி பிரச்சினை குறித்து அடுத்த வாரம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்வோம் என்று சொன்னார்கள். அதைச் செய்திருந்தால் பிரச்சினையே ஏற்பட்டிருக்காது. சமானிய மக்களைப் பாதிக்கும் மிக முக்கியமான பிரச்சினையான விலைவாசி உயர்வைப் பற்றி விவாதிக்க வேண்டுமென்றால் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மட்டும்தான் பதில் சொல்ல வேண்டுமா? நிதியமைச்சருக்கு உடல்நிலை சரியில்லையென்றால் அரசாங்கமே நடக்காதா? வேறு அமைச்சர்கள் கூட பதில் சொல்லலாம். எல்லாவற்றிற்கும் கருத்து சொல்லும் பிரதமர் பதில் சொல்ல வேண்டியதுதானே. இதே நிலைமை தொடர்ந்தால் ஜனநாயகத்திற்கு நல்லது அல்ல.” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in