`கலவரம், திருட்டு வழக்கை சிபிஐக்கு மாற்றவும்'- டிஜிபிக்கு தபாலில் புகார் அனுப்பிய சி.வி.சண்முகம்

`கலவரம், திருட்டு வழக்கை சிபிஐக்கு மாற்றவும்'- டிஜிபிக்கு தபாலில் புகார் அனுப்பிய சி.வி.சண்முகம்

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த வன்முறை மற்றும் திருட்டு வழக்கை உடனடியாக சிபிஐ அல்லது பிற ஏஜென்சிக்கு மாற்றக்கோரி உள்துறை செயலாளர், டிஜிபி, ஆணையர் ஆகியோருக்கு தபால் மூலம் புகார் அனுப்பியுள்ளார் அதிமுக எம்பி சி.வி.சண்முகம்.

ஈபிஎஸ்- ஓபிஎஸ் ஆதரவாளர்களிடையே அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்றுவது தொடர்பாக கடந்த 11-ம் தேதி ராயபுரம் தலைமை அலுவலகத்தில் மோதல் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு போலீஸார் மீது தாக்குதல் நடத்தினர். இந்த கலவர சம்பவம் தொடர்பாக ஈபிஎஸ் ஆதரவாளர்களான 15 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும் 400 பேர் மீது ராயப்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கலவரத்தின் போது அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள், பத்திரங்கள் மற்றும் இருப்புத் தொகை உள்ளிட்டவற்றை ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் திருடிச் சென்று விட்டதாக கடந்த சனிக்கிழமை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் அதிமுக எம்பி சி.வி.சண்முகம் புகார் அளித்தார். இது பொய்யான புகார் என்று ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டி பிரபாகர் நேற்று ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

இந்தப் புகாரில் காவல்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் டிஜிபி, காவல் ஆணையர், மற்றும் உள்துறை செயலாளருக்கு தபால் மூலம் புகார் ஒன்றை அனுப்பியுள்ளார் சி.வி.சண்முகம். அதில், கலவரத்தில் காயமடைந்த ஈ.பி.எஸ் ஆதரவாளர்கள் 15 பேரை போலீஸார் கைது செய்துள்ளதாகவும், கலவரத்தில் ஈடுபட்ட ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். மேலும் கலவரத்தின் போது தலைமை அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள், பத்திரங்களை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அவரது வாகனத்தில் ஏற்றிக்கொண்டு செல்லும் வீடியோ ஆதாரங்களுடன் போலீஸில் புகார் அளித்தும் இதுவரை ராயப்பேட்டை போலீஸார் எந்தவித நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

ராயப்பேட்டை போலீஸார் சம்பவம் நடந்த தலைமை அலுவலகத்திற்கு வந்து எந்தவித கைரேகை பதிவு மற்றும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு மேற்கொள்ளவில்லை என்றும், புகாரின் பேரில் போலீஸார் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தால் அதிமுக அலுவலகத்தில் நடந்த கலவரத்தை தடுத்திருக்கலாம் என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்ததாகவும், இதிலிருந்தே போலீஸாரின் அலட்சிய போக்கே கலவரத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். எனவே உடனடியாக கலவரம் மற்றும் தலைமை அலுவலக திருட்டு வழக்கை சிபிஐ அல்லது பிற ஏஜென்சிகளுக்கு மாற்ற வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in