வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவிப்பு: ஆ.ராசா மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவிப்பு: ஆ.ராசா மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா மீது சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு திமுக சார்பில் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்தவர் ஆ.ராசா. தற்போது அவர் திமுக நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களைக் குவித்ததாக அவர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. மேலும் ஆ.ராசா, அவரது மனைவி பரமேஸ்வரி, ராஜாவின் உறவினர் பரமேஷ்குமார், அவரது நெருங்கிய கூட்டாளி கிருஷ்ணமூர்த்தி ஆகியோருடன் சில தனியார் நிறுவனங்களையும் இணைத்து மொத்தம் 16 பேர் மீது இந்தக் குற்றவழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 16 பேருக்கு சொந்தமான டெல்லி,சென்னை,கோவை, திருச்சி, பெரம்பலூர் உள்பட 20 இடங்களில் உள்ள அவர்களது வீடு அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். குறிப்பாக, சென்னையில் 6 இடங்களில் நடைபெற்ற இந்த சோதனைகளில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஆ ராசா மீது தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கு, ஏழு ஆண்டுகளுக்கு பின் விசாரணை முடிந்துள்ளது. இதையடுத்து திமுக எம்.பி ஆ ராசா உள்ளிட்ட ஐந்து பேர் மீது சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், குற்றம் சாட்டப்பட்ட காலத்தில் வருமானத்தை விட 579 சதவீதம் அதிகமாக சொத்து சேர்த்ததாகவும். சுமார் 5.53 கோடி அளவிற்கு சொத்துக்களைக் குவித்துள்ளதாகவும் குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த குற்றப் பத்திரிக்கைக்கு எதிராக ஆ.ராசா தரப்பில் இருந்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ஏற்கெனவே கடந்த 2017-ம் ஆண்டு ஆ.ராசா உள்ளிட்டோர் மீது சிபிஐ தொடுத்த 2-ஜி அலைக்கற்றை வழக்கில், டெல்லி நீதிமன்றம் விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in