
ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் தென்னரசிடம் வியாபாரிகள் வாக்குவாதம் செய்யும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் 27-ம் தேதி இடைத்தேர்தலில் நடைபெறுகிறது. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் தென்னரசு களம் இறக்கப்பட்டு இருக்கிறார். அதேபோல் நாம் தமிழர் கட்சியும், தேமுதிகவும் போட்டியிடுகின்றன. தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினர் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அமைச்சர்கள் அனைவரும் வாக்குச் சேகரித்து வருகின்றனர். அதேபோல் கூட்டணி கட்சி தலைவர்களும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குச் சேகரித்து வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு ஆதரவாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாட்களாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது முதல்வர் ஸ்டாலினை பற்றி அவதூறாக பேசியது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதனிடையே அதிமுக வேட்பாளர் தென்னரசு வீதி வீதியாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஈரோடு வஉசி பூங்கா மைதானத்தில் தனது ஆதரவாளர்களுடன் சென்று தென்னரசு இன்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது வஉசி பூங்காவில் உள்ள வியாபாரிகள், தென்னரசு உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். காய்கறி மார்க்கெட் நவீனப்படுத்துவதாக கூறி அங்கிருந்த கடைகளுக்கு தற்காலிகமாக மாற்று இடம் வழங்கப்பட்டிருக்கிறது. பல ஆண்டுகள் ஆகியும் கடைகளை அமைக்க நடவடிக்கை எடுக்காததால் வியாபாரிகள், அதிமுக வேட்பாளர் தென்னரசுவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. வாக்குச் சேகரிக்க சென்ற இடத்தில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவிடம் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.