நட்சத்திர ஓட்டலில் அரசியல் நடத்தும் எடப்பாடி பழனிசாமி: டி.ஆர்.பாலு பாய்ச்சல்

நட்சத்திர ஓட்டலில் அரசியல் நடத்தும் எடப்பாடி பழனிசாமி: டி.ஆர்.பாலு பாய்ச்சல்

“தனக்குத் தெரியாத சமூகநீதி பற்றி எடப்பாடி பழனிசாமி திமுகவிற்குப் பாடம் எடுக்க வேண்டாம். தனது நாற்காலியே ஆடிக்கொண்டிருக்கும் போது இத்தகைய அதிகப்பிரசங்கி வேலைகளை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என டிஆர் பாலு கடுமையாக விமர்சித்துள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக குடியரசுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் திரௌபதி முர்மு நேற்று தமிழக கூட்டணிக் கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கோரினார். சென்னை நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பேசிய எடப்பாடி பழனிசாமி, “சமூக நீதி பேசும் முதல்வர் ஸ்டாலின் பழங்குடி வேட்பாளர் திரௌபதி முர்முவை ஏன் ஆதரிக்கவில்லை? அவரை ஆதரிக்காமல் சமூக நீதி, திராவிட மாடல் எனப் பேசி ஸ்டாலின் மக்களை ஏமாற்றி வருகிறார். வாய் அளவிலும் ஏட்டு அளவிலும்தான் திமுகவினர் சமூக நீதி பேசுகிறார்கள் " என்று பேசினார்.

திரௌபதி முர்மு
திரௌபதி முர்மு

எடப்பாடியின் இந்த பேச்சுக்கு திமுக மூத்த தலைவர் டி.ஆர். பாலு பதிலடி கொடுக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ள அதிமுக முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, தனக்கே தெரியாத சமூகநீதி பற்றி திமுகவிற்குப் பாடம் எடுத்திருக்கிறார். தனக்குத் தெரியாத விஷயங்கள் பற்றி வாய் கிழிய பேசுவதில் பழனிசாமிக்கு நிகர் அவரேதான். பட்டியலினச் சமூகத்திலிருந்து அறிவுசார்ந்த மாபெரும் தலைவரான கே.ஆர்.நாராயணனை இந்த நாட்டின் குடியரசு தலைவராக ஆக்கியது திமுகதான். இந்திய நாடாளுமன்றத்தின் பேரவைத் தலைவராக, பாபு ஜெகஜீவன்ராமின் மகள் மீராகுமாரைத் தேர்வு செய்யப்படுவதற்குத் திமுக உறுதுணையாக இருந்தது. பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீட்டை உயர்த்தியது மட்டுமல்ல, உள்இடஒதுக்கீடு அளித்து உண்மையான சமூகநீதியை அளித்தது திமுக அரசு என்ற பாலபாடமெல்லாம் பழனிசாமிக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

எடப்பாடி பழனிசாமி.
எடப்பாடி பழனிசாமி.

ஜெயலலிதா அமர்ந்த பொதுச் செயலாளர் பதவியில், தான் எப்படிக் குறுக்குச் சால் ஓட்டி அமருவது, அதற்குக் கோடி கோடியாகக் கரன்சி நோட்டுகளை எப்படி அள்ளி விடுவது, ஒவ்வொரு நாளும் பொதுக்குழு உறுப்பினர்களை எப்படி விலைக்கு வாங்குவது என்ற ஆலோசனையில் அவர் மூழ்கியிருக்கிறார். கட்சி யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பதே தெரியாமல் தவிக்கிறார். திக்குத் தெரியாத காட்டில் தவித்துக் கொண்டிருக்கும் அவர் பாஜக நிறுத்தியுள்ள குடியரசுத் தலைவர் வேட்பாளரை ஆதரிக்க புலி வேடம் போட்டுத் திமுக மீது பாய்கிறார். தலைமை கழக அலுவலகத்தைத் தவிர்த்துவிட்டு, நட்சத்திர ஹோட்டலில் அரசியல் நடத்தும் பழனிசாமி போன்றோர் திமுகவின் சமூகநீதி வரலாற்றைச் சற்று படித்துப் பார்க்க வேண்டும். திமுகவை வீண் வம்புக்கு இழுத்து, தன் கட்சிக்குள் நடக்கும் ஸ்ரீ வாரி மண்டப கூத்துக்களை மறைக்க பழனிசாமி முயற்சி செய்கிறார். அது நடக்காது. இன்னும் சில நாட்களில் இந்த கூத்து மிக மோசமான குழாயடிச் சண்டையாக மாறப் போகிறது என்பதில் சந்தேகமில்லை. தனது நாற்காலியே ஆடிக்கொண்டிருக்கும் போது, இத்தகைய அதிகப்பிரசங்கி வேலையை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும் ” என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in