அறியாமையை போக்கி அறிவு வெளிச்சத்தை கொடுத்த மகாவீரர் மறைந்த தினத்தில் வரிசையாக விளக்குகளை வைக்க சொல்லி கொண்டாடப்பட்ட சமண பண்டிகை, மடை மாற்றப்பட்டு தீபாவளியாக கொண்டாடப்படுவதாக தமிழாசிரியர் புலவர் செந்தலை கௌதமன் தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படும் அதே வேளையில், தமிழ்நாட்டில் பெரியாரிய அமைப்பினரும், உணர்வாளர்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நரகாசுரனை கிருஷ்ணன் கொன்றொழித்த தினம் என தீபாவளி கொண்டாடப்படும் நிலையில், திராவிட நிலப்பரப்பின் அடையாளங்களின் மீதான ஆரிய தாக்குதலின் நீட்சியே இந்த கருத்து என, இந்நாளை பெரியாரிய உணர்வாளர்கள் எதிர்க்கின்றனர்.
இதையொட்டி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி அன்று, நரகாசுரன் வீரவணக்க நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில், நேற்று மாவீரன் நரகாசுரன் வீரவணக்க நிகழ்வு தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
இதில் தமிழாசிரியர் புலவர் செந்தலை கௌதமன் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் ஏராளமான தந்தை பெரியார் திராவிடர் இயக்கத்தினர் கலந்து கொண்டனர். நிகழ்வுக்கு பின்னர் பேட்டியளித்த செந்தலை கௌதமன், ”தீபாவளி என்பதன் வரலாற்று பின்னணிப்படி, இந்த நாளில் மறைந்தவர் மகாவீரர். இருளை போக்கி அறிவு வெளிச்சத்தை கொடுத்தவர் என்பதால் மகாவீரரின் மறைந்த தினத்தில் விளக்குகளை வைக்குமாறு சொல்லி கொண்டாடப்பட்ட சமண பண்டிகை இது.
நல்லவராகிய மகாவீரரை இழிவுப்படுத்த கொடியவன் மறைந்தார் என்ற கதையை கட்டிவிட்டு, பண்பாட்டை மடை மாற்றினர். நரகாசுரன் என்பது வேத மறுப்பின் அடையாளம். புராணத்தின்படி வேதங்களை தடுத்தான் என்பதால் நரகாசுரன் கொலை செய்யப்பட்டான். வேத மறுப்பு, வைதீக மறுப்பு ஆகிவைதான் திராவிடத்தின் அடையாளம். அதன் குறியீடாகவே நரகாசுரன் என்கின்றோம். வரலாற்று அடிப்படையில் இன்று மறைந்தவர் மகாவீரர்” என தெரிவித்தார்.
பின்னர் பேசிய கு.ராமகிருஷ்ணன், ”தமிழ்நாட்டில் தீபாவளி, கேரளாவில் ஓணம் ஆகியவை ஆரிய திராவிடத்தின் போராட்டத்தை குறிப்பது. நரகாசுரன் இருந்தான் என்ற காரணத்திற்காக இதை நிகழ்வை நடத்தவில்லை. கதையில் கூட திராவிடர்கள் ஆரியர்களுக்கு அடிமையல்ல என்பதை காட்டவும், திராவிடர்கள் அசுரர்கள் என காட்டும் அந்த தன்மையை மக்களுக்கு விளக்குவதற்காகவும் இந்த நகராசுரன் வீரவணக்க நிகழ்வு நடத்தபடுகிறது” என்றார்.
இந்த விழாவில் திராவிட உணவு நிகழ்வு நடத்தப்பட்டது. உணவில் கூட மதத்தை நுழைக்கும் நிகழ்வுகள் நடப்பதால், மாட்டிறைச்சி பிரியாணி மற்றும் பன்றி இறைச்சி உள்ளிட்ட உணவு வகைகளுடன் நரகாசுரன் வீரவணக்க நிகழ்வு நடத்தப்படுவதாக விழா ஏற்பட்டாளர்கள் தெரிவித்தனர்.
இதையும் வாசிக்கலாமே...
இன்று உலக கருணை தினம்... வெறுப்பு கரையட்டும்; கருணை பொங்கட்டும்!
ஈரோட்டில் அதிர்ச்சி! அதிகாலையில் கோர விபத்து... 3 பேர் உயிரிழப்பு!
பெரும் சோகம்... பட்டாசு வெடித்து சிதறியதில் 4 வயது சிறுமி உயிரிழிப்பு!
திருச்செந்தூரில் சஷ்டி விழா தொடங்கியது... 18ம் தேதி சூரசம்ஹாரம்!
300 டன் பட்டாசு குப்பை சேகரிப்பு... விடிய விடிய பணியாற்றிய 19,600 தூய்மைப் பணியாளர்கள்!