மாம்பழமா, மைத்துனரா?: கடலூரில் கரையேறப் போவது யார்?

காங்கிரஸ் வேட்பாளர் அறிமுகக் கூட்டம்
காங்கிரஸ் வேட்பாளர் அறிமுகக் கூட்டம்

கடலூர் மக்களவைத் தொகுதியில் நான்கு முனை போட்டி நிலவினாலும் பிரதான போட்டி என்பது காங்கிரஸ் மற்றும் பாமக இடையேதான் இருக்கிறது. 

தங்கர்பச்சானுக்கு ஆதரவாக அண்ணாமலை பிரச்சாரம்
தங்கர்பச்சானுக்கு ஆதரவாக அண்ணாமலை பிரச்சாரம்

திமுக கூட்டணியில்  இந்த தொகுதி காங்கிரஸுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.  காங்கிரஸ் கட்சியில் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமியின் மகன் விஷ்ணுபிரசாத் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். பாஜக கூட்டணியில் தொகுதி பாமகவுக்கு வழங்கப்பட்டு  திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டு அக்கட்சியின் சார்பில் பண்ருட்டி முன்னாள் எம்எல்ஏ சிவக்கொழுந்து போட்டியிடுகிறார்.  நாம் தமிழர் கட்சி சார்பில் வே.மணிவாசகம்  நிறுத்தப்பட்டுள்ளார்.

நான்கு பேரும் தொகுதிக்குள் பம்பரமாக சுற்றி வந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த வேட்பாளர்களின் கட்சித் தலைவர்களும்  கடலூர் வந்து பிரச்சாரம் செய்து விட்டு போயிருக்கிறார்கள். இந்த நிலையில் தொகுதியில் தற்போது காங்கிரஸ் மற்றும் பாமக இடையே   இருமுனை போட்டி தான் நிலவுகிறது. கூட்டணி அளவில் காங்கிரஸ் கட்சி மிக வலுவாக இருக்கிறது.  ஆனால், தொகுதிக்குள் இருக்கும் பாமகவுக்கான தனிப்பட்ட வாக்கு வங்கி அதற்கு பலமாக இருக்கிறது. 

விஷ்ணுபிரசாத் வேட்புமனு
விஷ்ணுபிரசாத் வேட்புமனு

பாமக  வேட்பாளர் தங்கப்பச்சான் பாமக ஆதரவாளராக அறியப்பட்டவரே தவிர அக்கட்சிக்காரர் இல்லை. திடீரென அவரை வேட்பாளராக அறிவித்துள்ளனர். அதை பாமகவின் மூத்த தலைவர்கள், இந்த தொகுதியில் இருக்கும் முக்கிய பிரமுகர்கள் ஏற்கவில்லை. இருந்தாலும் கட்சித் தலைமைக்கு கட்டுப்பட்டு வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு புறம் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத்,  பாமக தலைவரின் அன்புமணி ராமதாஸின் சொந்த மைத்துனர்.  அதனால் புதிதாக வந்த தங்கர்பச்சானுக்கு வாக்களிப்பதா  அல்லது தங்கள் தலைவரின் மைத்துனருக்கு வாக்களிப்பதா என்ற குழப்பம் பாமகவினரிடையே இன்னமும் உள்ளது. 

இந்த மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளுமே  திமுக கூட்டணியின் வசம் தான் உள்ளது. அத்துடன் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், வெ.கணேசன் என இரண்டு அமைச்சர்கள் இருக்கிறார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் பலம். ஒருவேளை  திமுக வேட்பாளர் நிறுத்தப்பட்டிருந்தால் அது எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு சாதகமாக முடிந்திருக்கும்.  ஏனென்றால் கட்சிக்குள் உட்கட்சி பூசல் அதிகமாக காணப்படுகிறது.  ஒருவருக்கு சீட் கொடுத்தால் இன்னொருவர் எதிராக வேலை செய்து காலி செய்து விடுவார்கள் என்பதால் தான் கடலூரை காங்கிரஸ் கட்சிக்கு திமுக தலைமை ஒதுக்கியதாக கூறப்படுகிறது 

ராமதாஸுடன் தங்கர்பச்சான்
ராமதாஸுடன் தங்கர்பச்சான்

காங்கிரஸ் வேட்பாளர் என்பதால் திமுகவினர் தங்களுக்குள் பூசல் இல்லாமல் காங்கிரஸ் வெற்றிக்கு களமாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த தொகுதிக்குள் விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவற்றிற்கு குறிப்பிடத்தக்க அளவுக்கு வாக்குகள் உள்ளன. 

ஆனால் பாமக தன் சொந்த பலத்தை நம்பியே இருக்க வேண்டியுள்ளது.  பாஜக இந்த பகுதியில் குறிப்பிடத்தக்க அளவுக்கு வாக்கு வங்கியைக் கொண்டிருக்கவில்லை. அதனால் கூட்டணி பலம் காரணமாக இங்கு  பாமக தலைவரின் மைத்துனரே மாம்பழத்தை வீழ்த்தி கடலூரின் கதாநாயகனாக வாய்ப்பிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in