நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய கரூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் நட்சத்திர வேட்பாளர் ஜோதிமணி உட்பட மொத்தம் 54 பேர் களத்தில் உள்ளார்கள்.
தமிழ்நாட்டிலேயே அதிகபட்ச வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதியாக உள்ள கரூர் மக்களவைத் தொகுதியில் தற்போதைய கள நிலவரம் இருமுனைப் போட்டி கடுமையாக உள்ளது. இங்கு முக்கிய வேட்பாளர்களாக காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணியுடன், அதிமுகவின் தங்கவேலும், பாஜகவின் செந்தில்நாதனும், நாம் தமிழர் கட்சியின் கருப்பையாவும் களத்தில் உள்ளனர்.
இவர்களில் அதிமுக வேட்பாளரைத் தவிர மற்றவர்கள் தேர்தல் அரசியலுக்கு பழையவர்கள் தான். ஜோதிமணி இந்த மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவது இது மூன்றாவது முறை. முதல் முறை தோல்வியுற்றவர், கடந்த 2019 ம் ஆண்டு நடந்த தேர்தலில் இரண்டாவது முறை போட்டியிட்டதில் வெற்றி பெற்று மக்களவைக்கு சென்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுகவைச் சேர்ந்த மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரையை சுமார் 4,20,000 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தார்.
அதுவரை பல முறை அந்த தொகுதியில் நின்று வெற்றியும் பெற்றிருந்த தம்பிதுரை, அதோடு தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கி மாநிலங்களவை உறுப்பினராக சென்று விட்டார். இந்த தேர்தலிலும் அவர் போட்டியிட விரும்பவில்லை. அதனால் ஜவுளி தொழிலில் ஈடுபட்டுள்ள தங்கவேல் அதிமுக வேட்பாளராக ஆகியிருக்கிறார். தொழில்துறையில் நல்ல அனுபவம் பெற்ற அவர் கரூரைத் தாண்டி மற்ற மாவட்டங்களில் உள்ள கரூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் எந்த அறிமுகமும் இல்லாதவர்.
அதனால் அவரை அந்தந்த மாவட்ட செயலாளர்கள், கட்சிக்காரர்களுக்கு முதலில் அறிமுகம் செய்துவிட்டு தற்போது வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். கடந்த தேர்தலில் வாங்கிய 2.75 லட்சம் இந்தமுறையும் தங்களுக்கு கிடைக்கும். அதோடு சேர்த்து திமுக அரசுக்கு எதிரான அதிருப்தி வாக்குகள் தங்களுக்கு கிடைக்கும் என்று அதிமுக நம்புகிறது.
பாஜகவை விட்டு வெளியேறி விட்டதால் இஸ்லாமியர்கள் வாக்குகளும், ஜவுளி தொழிலில் உள்ளவர்கள் வாக்குகள் தங்கவேலுக்கு கிடைக்கும் என்பதாலும் தங்களுக்கு கூடுதலாக 2 லட்சம் வாக்குகள் கிடைக்கும். அதன்மூலம் சுமார் 4,75,000 வாக்குகள் பெற்று விட்டால் தாராளமாக வெற்றி வெற்றி பெறலாம் என்கிற நம்பிக்கையில் அதிமுக சுறுசுறுப்பாக களப்பணியாற்றி வருகிறது. பெரும்பாலும் இந்த தொகுதியில் இதுவரை அதிமுகவும் பலமுறை வெற்றி பெற்றுள்ளதால் இவர்களுக்கு கூடுதல் பலம்.
காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியைப் பொறுத்தவரை மேலிடத்து செல்வாக்கு அதிகம் என்றாலும் தொகுதிக்குள் அவர் அதிகம் தலைகாட்டியதில்லை. பெரிதாக எதையும் செய்து தரவில்லை என்ற கெட்ட பெயர் உள்ளது. அதனால் அவர் செல்லும் இடங்களில் பல நேரத்தில் எதிர்ப்புகளை சந்திக்க வேண்டியுள்ளது. அவருக்கு சீட் வழங்கக் கூடாது என்று அவரது கட்சியினரே தீர்மானம் போட்டு தலைமைக்கு அனுப்பி வைத்திருந்தனர். திமுகவினரும் செந்தில் பாலாஜிக்கு எதிர்ப்பு மற்றும் ஆட்சியருக்கு எதிராக போராட்டம் என்ற பல காரணங்களால் தொகுதியை ஜோதிமணிக்கு ஒதுக்கக்கூடாது என்று தங்கள் தலைமையிடம் விண்ணப்பித்திருந்தனர்.
இப்படி தன் கட்சி மட்டுமல்லாது கூட்டணிக் கட்சியிடமும் வெறுப்பை சம்பாதித்த அவருக்கு பலத்த சிபாரிசின் பேரில் சீட்டு கிடைத்துள்ளது. கடந்த தேர்தலில் இவரை வெற்றிபெற வைத்த செந்தில்பாலாஜி தற்போது சிறையில் இருப்பதால் இவருக்கு அது பெரிய மைனஸ் என்று சொல்லப்படுகிறது.
இருந்தாலும் தொகுதிக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் செல்லபாண்டியன் உள்ளிட்டவர்களின் களப்பணியால் கடந்த முறை தான் பெற்ற வாக்குகளில் இரண்டு லட்சம் குறைந்தாலும் கூட 4 லட்சத்துக்கும் மேல் வாக்குகளை பெற்று வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் ஜோதிமணி இருக்கின்றார்.
ஜோதிமணி மற்றும் அதிமுக வேட்பாளர் தங்கவேல் ஆகிய இருவருக்கும் இடையே கடுமையான போட்டியே தற்போது வரை நிலவுகிறது. கடந்த ஆண்டு அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு மாறிய செந்தில்நாதன், பாஜக வேட்பாளராக களமிறங்கி, மோடி அரசின் சாதனைகளை எடுத்துரைத்து வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெற கடுமையாக உழைத்து வருகிறார். அதிமுகவிலிருந்து கரூர் தொகுதிக்குள் பணியாற்றிய அனுபவமும், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனுபவமும் இவருக்கு இருப்பதால் சுறுசுறுப்பாக தேர்தல் பணியாற்றி வருகிறார்.
பாஜக தலைவர்களின் பலமான பிரச்சாரம் இவருக்கு கூடுதல் பலமாக இருக்கிறது. கணிசமான அளவிற்கு வாக்குகளை பெறுவார் என்றாலும் வெற்றி பெறுவதற்கு தேவையான வாக்குகளை இவர்களால் பெற முடியாது. அதேபோல நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக களத்தில் இருக்கும் மருத்துவர் கருப்பையா கடந்த 2019 தேர்தலிலும் இந்த தொகுதியில் போட்டியிட்டுள்ளார். 2021 சட்டமன்றத் தேர்தலிலும் கரூர் தொகுதியில் போட்டியிட்டுள்ளார். கடந்த தேர்தல்களில் வாங்கிய அளவிற்கு வாக்குகளை தற்போதும் பெறுவார்.
இந்த நிலையில் வெற்றிக்கோட்டை நோக்கி ஜோதிமணியும், தங்கவேலும் தான் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். இருவரில் யார் முந்தினாலும் அது நூலிழையில் தான் இருக்கும் என்பது தான் தற்போதைய களநிலவரமாக இருக்கிறது.