தொடங்கியது முழு அடைப்பு... முடங்கியது டெல்டா... காவிரி விவகாரத்தால் இன்று போராட்டம்!

கடை அடைப்பு
கடை அடைப்பு

காவிரி விவகாரத்தை மையமாக வைத்து கர்நாடக மற்றும் மத்திய அரசைக் கண்டித்து டெல்டா மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறக்க வலியுறுத்தியும், கர்நாடகாவில் தொடர் போராட்டத்தை நடத்தி வரும் பாஜக மற்றும் கன்னட அமைப்புகளைக் கண்டித்தும்,  டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்புப் போராட்டமும், மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக மறியல் போராட்டமும் நடத்துவது  என்று பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில்  முடிவு செய்யப்பட்டது.

காவிரி நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி கொடுக்க வேண்டிய தண்ணீரை கொடுக்காததால், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியில் நேரடி விதைப்பு மற்றும் நடவு பயிர்கள் சுமார் 2 லட்சம் ஏக்கர் வரை காய்ந்து கருகிவிட்டன.

தற்போது கர்நாடக அணைகளில் 80 சதவீதத்துக்கும் அதிகமான தண்ணீர் உள்ள நிலையில், தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கக் கூடாது என கர்நாடகத்தில் இரண்டு முறை முழு அடைப்பு போராட்டத்தை பாஜக மற்றும் கன்னட அமைப்புகள் நடத்தின.

காவிரி டெல்டா மாவட்டங்களில் எஞ்சியுள்ள குறுவைப் பயிரை பாதுகாக்கவும், சம்பா சாகுபடி தொடங்கவும் உடனடியாக காவிரியில் மாத வாரியாக கொடுக்க வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு வழங்க வலியுறுத்தி காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டை, கடலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

காவிரிப் படுகை கூட்டு இயக்கம் ஆலோசனை
காவிரிப் படுகை கூட்டு இயக்கம் ஆலோசனை

இதற்கு வணிகர்கள் சங்கங்கள் உட்பட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளதால் பெரும்பாலான ஊர்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 30,000 கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. நாகை மாவட்டத்தில் வேதாரண்யம், நாகப்பட்டினம் உள்ளிட்ட பெரும்பாலான ஊர்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதுடன் ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களும் இயக்கப்படவில்லை. மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி, கொள்ளிடம், மயிலாடுதுறை, குத்தாலம் உள்ளிட்ட ஊர்களில் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்படுகின்றன. இந்த போராட்டம் காரணமாக ஒட்டுமொத்த டெல்டாவும் முடங்கியுள்ளது. 

மத்திய அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்பதால் உங்களிடம் மாவட்டங்களில் அதிக அளவில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in