
தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் ரேவந்த் ரெட்டி மீது பூபாலப்பள்ளி மாவட்டத்தில் நேற்று மர்ம நபர்கள் முட்டை மற்றும் தக்காளியை வீசித் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராகுல் காந்தி மேற்கொண்ட பாரத் ஜோடோ யாத்திரையின் நீட்சியாக தெலங்கானாவில் 'ஹாத் சே ஹாத் ஜோடோ' பாதயாத்திரை நடத்தப்படுகிறது. நேற்று பூபாலப்பள்ளி மாவட்டத்தில் ரேவந்த் ரெட்டி உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு கும்பல் முட்டை மற்றும் தக்காளியை அவர் மீது வீசத் தொடங்கியது. இந்த பரபரப்பு முழுவதும் கேமராவில் பதிவாகியுள்ளது.
இச்சம்பவத்தை அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டு, "பூபாலப்பள்ளியில் எங்கள் தெரு முனை கூட்டத்தின் மீது பிஆர்எஸ் குண்டர்கள் கற்களை எறிந்து, அதை சீர்குலைக்க முயன்றனர். ஆனால் நாங்கள் காங்கிரஸ் வீரர்கள், யாருக்கும் பயப்பட மாட்டோம். மாற்றத்திற்கான யாத்திரை 16 நாட்கள் மட்டுமே. பிஆர்எஸ் கட்சியில் உள்ள பயத்தை நீங்கள் பார்க்கிறீர்கள்" என தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலை தடுக்க போலீஸார் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று தெலங்கானா காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மாநிலத்துக்கு என்னவெல்லாம் செய்யத் தவறிவிட்டார் என்பது குறித்த செய்தியை மக்களிடம் கொண்டு செல்வதற்காகவே இந்த யாத்திரை தொடங்கப்பட்டதாக ரேவந்த் ரெட்டி கூறினார்.