வேட்புமனுத் தாக்கல்செய்ய இன்றே கடைசி !

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கட்சிகள் விறுவிறுப்பு
வேட்புமனுத் தாக்கல்செய்ய இன்றே கடைசி !
வேட்புமனுத் தாக்கல்hindu கோப்பு படம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு இன்று கடைசி நாள் என்பதால், இதுவரை மனுத் தாக்கல் செய்த அரசியல் கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகள் தங்கள் மனுக்களை தாக்கல் செய்ய ஆர்வம்காட்டி வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12 ஆயிரத்து 838 பதவியிடங்களுக்கு வருகிற 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கியது. வேட்புமனுத் தாக்கலுக்கு கடைசிநாள் பிப்ரவரி 4-ம் தேதி என அறிவிக்கப்பட்டது. குறுகிய காலத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், இடப்பங்கீட்டில் கூட்டணி கட்சிகள் இடையே இழுபறி நீடித்ததால் இடப்பங்கீட்டை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டது. நேற்றுவரை பிரதான கட்சிகள் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டன.

அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக இடஒதுக்கீடு பிரச்சினையால் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. பா.ம.க., தே.மு.தி.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், அ.ம.மு.க., சமத்துவ மக்கள் கட்சி ஆகியவையும் தனித்து போட்டியிடுகின்றன. இதனால், இந்தத் தேர்தலில் பலமுனை போட்டி நிலவுகிறது. ஆனாலும், தி.மு.க., அ.தி.மு.க. இடையேதான் நேரடி போட்டி உள்ளது. தேர்தலில் களம் காணும் பிரதான கட்சிகள் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட ஏற்பட்ட தாமதம் காரணமாக, வேட்புமனுத் தாக்கல் ஆரம்பத்தில் மந்தமாக இருந்தது.

வேட்பு மனுத் தாக்கல்
வேட்பு மனுத் தாக்கல்hindu கோப்பு படம்

அனைத்துக் கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதை தொடர்ந்து, நேற்றுமுன்தினம் முதல் வேட்புமனுத் தாக்கல் விறுவிறுப்படைந்தது. கடந்த 2-ம் தேதி வரை 2,563 பேர் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த நிலையில், கடந்த 2-ம் தேதி மட்டும் 7,590 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். நேற்று முன்தினம் வரை மொத்தம் 10,153 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்ய இன்று கடைசிநாள் ஆகும். இதனால் வேட்பாளர்கள், சுயேச்சைகள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்ய விறுவிறுப்பு காட்டி வருகின்றனர். மாலை 5 மணியுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெறுவதால், நேற்றுவரை வேட்புமனுத் தாக்கல் செய்யாதவர்கள் குவிந்து விடுவார்கள் என்பதால், டோக்கன் வழங்கி வேட்புமனுக்களைப் பெறுவதற்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

நாளை வேட்புமனுக்களின் மீதான பரிசீலனை நடக்கிறது. வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கு பிப்.7-ம் தேதி கடைசி நாளாகும். அன்றைய தினமே, தேர்தல் களத்தில் நிற்கும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படுகிறது.

Related Stories

No stories found.