சொல்வதற்கு ஏராளமான விஷயங்கள் உள்ளன: முதல்வர் ஸ்டாலினுக்கு கே.எஸ். ராதாகிருஷ்ணனின் அடுத்த மடல்!

கே. எஸ்.ராதாகிருஷ்ணன்
கே. எஸ்.ராதாகிருஷ்ணன்

அண்மையில்  திமுகவிலிருந்து நீக்கப்பட்ட அந்த  கட்சியின்  செய்தித் தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், அவர் திமுகவில் ஆற்றிய பணிகள் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலினின் பார்வைக்கு அடுத்த திறந்த மடலை எழுதியுள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதி மடலில், " மாண்புமிகு முதலமைச்சர் பார்வைக்கு, சென்னை அண்ணா நகர் ரமேஷ், குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டபோது  திமுக முன்னணி தலைவர்களை இந்த வழக்கில் எப்படியாவது சேர்த்துவிட துடித்தது அப்போதைய  அதிமுக அரசு. ரமேஷின் நெருங்கிய உறவினர்களிடம், இதற்கேற்றாற்போல வாக்குமூலம்  வாங்கிவிட ஜெயலலிதா அரசின் காவல்துறையினர் வீட்டிலேயே காத்திருந்தனர்.

அண்ணா நகர் ரமேஷ் குடும்பத்தார் என் உறவினர். தவிர ரமேஷின் மனைவி காஞ்சனாவின் தந்தை தந்தை அய்யலுசாமி 1989-ல் கோவில்பட்டி சட்டமன்ற தேர்தலில் எனக்காக தேர்தல் பணி பார்த்தவர். பி.ஏ.பி.டி. உயர்நிலைப்பள்ளி ஆசிரியர். மேலும், கோவில்பட்டி, மேட்டில் காந்தி மைதானம் அருகில் அச்சகம் வைத்து பள்ளி பாடப்புத்தக துணை நூல்களை அச்சடிக்கும் பணியும் மேற்கொண்டிருந்தார்.

கலைஞரும், முரசொலி மாறனும்  என்னிடம், ‘உங்களைச் சார்ந்த ஆட்கள் தானே அவர்கள், அவர்களைப் பார்த்து ஆறுதல் சொல்லி வாருங்கள்’ என்றனர்.

இதைத் தொடர்ந்து தினமும் அண்ணா நகர் ரமேஷ் வீட்டுக்குச் சென்று ஆறுதலும் தைரியமும் சொன்னேன். ஒரு முறை திமுக வடசென்னை  மாவட்ட  அன்றைய செயலார் பலராமனும் என்னுடன் வந்தார். ரமேஷ் குடும்பத்தாரிடம், ‘எது வந்தாலும் சட்டப்படி பார்த்துக் கொள்ளலாம். தைரியமாக இருங்கள்’ என துணை நின்றேன். இப்படி, யாரும் முன் வராத பணிகளை அடியேன் செய்தது உண்டு.

பிறகு கலைஞரும் ,முரசொலி மாறனும், ‘ரமேஷ் பிரச்சினை குறித்து ஆற்காடு வீராசாமியிடம் ஒரு மனுவில்  கையெழுத்து பெற்று மாநில மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடுங்கள்’ என்றார்கள்.

அந்த நேரத்தில் மும்பை சென்ற ஆற்காட்டார், அங்கு கால் முறிந்து சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இரு வாரத்துக்கு மேல் சிகிச்சை பெற்று வந்தார். நான்  அங்கு சென்று  கையெழுத்து பெற்று, மனித உரிமை ஆணையத்தில் வழக்குத் தொடுக்கும் ஏற்பாட்டை செய்தேன். இதைச் சொல்வதற்கு இன்று கலைஞரோ, மாறனோ இல்லை, பலராமனும் இல்லை

ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி எங்கள் ஊருக்கு பக்கத்து ஊரைச் சேர்ந்த சித்தண்ணனுக்கு ஓரளவுக்கு இந்த விவரங்கள் தெரியும்.

தலைவர் கலைஞர் நள்ளிரவில் சட்டத்துக்குப் புறம்பாக  ஜெயலலிதா ஆட்சியில் கைது செய்யப்பட்ட போது, உலகமே கண்ணீர் வடித்தது. (அந்த துயர நிகழ்வின் போது, கி.வீரமணி,, வைகோ ஆகியோர் என்ன கருத்துக்கள் சொன்னார்கள் என்று திரும்பிப் பார்த்தால் நல்லது) இந்த சம்பவத்துக்குப் பிறகு நடந்த சில நிகழ்வுகள்.

ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சி காலத்தில், முதன் முதலாக பொன்முடியின் சைதை வீடு, அடுத்தடுத்து துரைமுருகன், ரகுபதியின் அசோக் நகர் வீடு  என அவர்களது வீடுகள் மற்றும் அவர்கள் தொடர்பான  இடங்களில் மாநில லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது. அப்போது  அங்கெல்லாம் சென்று காத்திருந்து, காவல்துறையினர் கேட்கும் கேள்விகளுக்கு வழக்கறிஞர் என்கிற முறையில் உரிய பதில் அளித்து  இரவு வரை உடன் இருந்து சிக்கல்களைத் தீர்த்துவைத்தவன் அடியேன்.

2002-ல் நடந்த ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், ஆளுங்கட்சியான அதிமுக சார்பில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா போட்டியிட்டனர். திமுக சார்பில் வைகை சேகர் நேர் நின்றார்.

அந்த தேர்தல் பணியில் பொன்.முத்துராமலிங்கம், மு.க. அழகிரி,  ஐ. பெரியசாமி, அடியேன் மற்றும் போடி முத்துமனோகரன் ஆகியோர்   தேர்தல் பணிக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டோம். அந்த நிலையில் பலரும்  ஒப்புக்கு பணியாற்றிய நிலையில்,  அடியேன், தொகுதி முழுவதும் தைரியமாக தனியாக காலை முதல் மாலை வரை  ஊர் ஊராகச் சென்று தேர்தல்  பணியாற்றியதை மறக்க முடியுமா?

அதே போலவே,2002-ல்  நடந்த சைதை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல். ஆளும் அதிமுக சார்பாக ராதாரவி, திமுக சார்பாக மா.சுப்ரமணியன் களம் கண்டார்கள். அமைச்சர் பொன்முடியும், நானும் களத்தில் பணியாற்றினோம். அதிமுகவினர் கடுமையாக நடந்து கொண்டார்கள். தேர்தல் நாள் அன்று காலை 11  மணி அளவில் அதிமுகவினரால், பொன்முடி கடுமையாகத் தாக்கப்பட்டார். அதற்கு மேல் அவருக்கு பணியாற்ற சிரமமாக இருந்ததால் அவர் சென்று விட்டார். நான் மட்டும் தான் இருந்தேன்.

இன்றைக்கு திமுக அமைச்சரவையில் இடம் பெற்று இருக்கும் சேகர் பாபு, அப்போது அதிமுகவின் முக்கிய பிரமுகர். அவர், சைதை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் அதிமுக பொறுப்பாளராக இருந்தார்.

திமுக தேர்தல் பொறுப்பாளராக இருந்த  அப்போதைய சட்டமன்ற உறுப்பினர்  நாகை அசோகன்.  அவர் இளைஞரணி பொறுப்பிலும் இருந்தார். அவரை கடுமையாக தாக்கினார் சேகர்பாபு.  அதைத் தடுக்க அடியேன் போராடியதை மறக்க முடியுமா? 

 அப்போதைய இன்னொரு அதிமுக பிரமுகரான அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் என்னையும் தாக்க வந்தார். அவர் என்னை தாக்க வந்ததை அடுத்து அப்போதைய தமிழ்நாடு தேர்தல் ஆணையர் சாரங்கிக்கு  தகவல் தெரிவித்தேன். அவர் நேரடியாக வந்து என்னை  சந்தித்து ஆறுதலும், தைரியமும் தெரிவித்தார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி கூறினார்.

கோட்டூர்புரம்  துரைமுருகன் வீடு அருகில் உள்ள வாக்குச்சாவடியில் பரிதி இளம்வழுதி வேட்டியை அவிழ்த்து விட்டார்கள். இன்று போக்குவரத்துத் துறை அமைச்சராக இருக்கும் சிவசங்கரை சைதை  காவல் நிலையத்தில் மிகவும் அவமரியாதையாக நடத்தினார்கள்.இந்த இடைத்தேர்தலில்  திமுக பகுதி பொறுப்பாளராக இருந்த கருப்பசாமி பாண்டியன்  மற்றும் இன்றைய அமைச்சர் ரகுபதி  உள்ளிட்ட சிலர் மீது வழக்கும் தொடுத்தார் அப்போது சென்னை மாநகர காவல்துறை ஆணையராக இருந்த விஜயகுமார்.  

கைது  நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.  இது தொடர்பான வழக்கு, சைதை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. அப்போதும் அடியேன் என்னால் இயன்ற அத்தனை பணிகளையும் கழகத்துக்காக செய்தேன்.

எனது இந்த தேர்தல் பணிகளைப் பாராட்டி,   முரசொலியில், உடன் பிறப்பு கடிதத்தில் எழுதி பாராட்டினார் கலைஞர்.  ஜூவி, கல்கி ஆகிய ஏடுகள், அடியேன் ஆற்றிய பணிகளை முழுமையாக எழுதி செய்திக் கட்டுரைகள் வெளியிட்டன.

சென்னை கடற்கரை கண்ணகி சிலை இடித்துத் தள்ளப்பட்ட  விவகாரத்தில், கலைஞரின்  அறிவுறுத்தலின்படி  அடியேன் களம் இறங்கினேன். சைதை மறைமலையடிகள் பாலத்தின் தென்புறம் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம்,   அண்ணா மேம்பாலத்துக்குக்கு அருகில் உள்ள பொ.ப.துறை அலுவலகம் என பத்து இருபது தடவைக்கும்மேல்  இங்கும் அங்குமாக அலைந்தது நினைவில் ஆடுகின்றன.  

செங்கை சிவம்,  இரு சட்டமன்ற தொகுதிகளில் தலைவர் கலைஞர் சொல்லி போட்டியிட மனுக்கள் தாக்கல் செய்த போது காவல் துறையினரின் கடும் நெருக்கடி. அப்போது அச்சரவாக்கம், பெரம்பூர் தொகுதியில் உடன் இருந்து மனுக்களை தாக்கல் செய்தது என இப்படி, சொல்வதற்கு ஏராளமான விஷயங்கள் உள்ளன. இவற்றை சொல்லக் காரணம் மன அழுத்தமோ,  வேதனையோ இல்லை. யாரையும் குற்றம் சாட்டுவதோ, குற்றப்பத்திரிகை வாசிப்பதோ என் நோக்கமல்ல.

எங்கிருந்தாலும் அடியேன் திடமாக செயல்படக் கூடியவன். வரலாற்றை பலர் மறந்துவிடுவர். சிலர் மறைத்து விடுவர். செய்ததைச் சொல்கிறேன். அப்படி நடந்துவிடக் கூடாது என்பதாலேயே இந்த ஞாபகப் பகிர்வுகள். மெளனமாக கடந்து செல்ல முடியா நிலை. எவரையும் குறை கூற அல்ல  இந்த பதிவு. மற்றபடி, குறையொன்றும் இல்லை" என மடலை முடித்துள்ளார் கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in