திமுகவில் உள்ள சாதியவாதிகளுக்கு மு.க.ஸ்டாலின் உரிய பயிற்சி அளிப்பாரா?

கேட்கிறது விடுதலைச்சிறுத்தைகள் !
மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வெற்றிபெற்ற திமுகவினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் உத்தரவு எந்த அளவு அமலாகும் என்ற சந்தேகம் கூட்டணி கட்சியினருக்கு ஏற்பட்டுள்ளது.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பல இடங்களில் திமுகவினர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். சில இடங்களில் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்தும் அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இது கூட்டணி கட்சியினரிடையே மறியல், கண்டனம், கல்வீச்சு, கண்டன அறிக்கை என்ற பதற்ற நிலையை உருவாக்கியுள்ளது.

மறைமுகத் தேர்தல் என்ற பெயரில் நேற்று பெரும் கூத்து நடைபெற்றதாக திமுக கூட்டணி கட்சியினர் புகார் கூறுகின்றனர். அதற்கு அவர்கள் நீண்ட பட்டியலையே வாசிக்கின்றனர். ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அங்கு திமுக வேட்பாளர் சாந்தி வெற்றி பெற்றுள்ளார். தேனி அல்லிநகரம் நகராட்சி காங்கிரஸ் வேட்பாளர் சற்குணத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்தது. திமுக சார்பில் ரேணு பிரியா அங்கு வெற்றி பெற்றுள்ளார். கோவை கருமத்தம்பட்டி நகராட்சி காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இதே போல கடலூர் மாவட்டம், மங்கலம் பேட்டை பேரூராட்சியில் காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து திமுக வெற்றி பெற்றுள்ளது என்று கூறும் திமுக கூட்டணி கட்சியினர், 'இச்சம்பவங்கள் திமுக மாவட்ட செயலாளர்களுக்குத் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பே இல்லை. பிறகெப்படி அவர்கள், வெற்றி பெற்றவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள்?' என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர்.

தொடர்ந்து அவர்கள் கூறுகையில், 'கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் நகராட்சி விடுதலைச்சிறுத்தைகளுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால், திமுக வேட்பாளர் ஜெயந்தி அங்கு வெற்றி பெற்றுள்ளார். இதே போல விடுதலைச்சிறுத்தைகளுக்கு ஒதுக்கப்பட்ட தருமபுரி மாவட்டம், பொ.மல்லபுரம் பேரூராட்சி தலைவர் பதவியையும் திமுகவே கைப்பற்றியுள்ளது. நெல்லை மாவட்டம், வீரவநல்லூர் பேரூராட்சி தலைவர் பதவியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து திமுக பறித்துள்ளது. கோவை பெரியநாயக்கன் பாளையம் பேரூராட்சி தலைவர் பதவி மார்க்சிஸ்ட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், திமுகவை சேர்ந்த விஷ்வபிரகாஷ் பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது தலைவர் பதவிக்கு போட்டியிட வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் மற்றும் தலைவர்களை ஒரு அறையில் 2 மணி நேரம் திமுகவினர் பூட்டி வைத்துள்ளனர். இப்படி குறுக்கு வழியில் வெற்றி பெற திமுகவினர் சட்டவிரோதமாக நடக்கலாமா? அவர்கள் மீது காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?' என்ற கேள்வியையும் எழுப்புகின்றனர்.

திருமாவளவன்
திருமாவளவன்

'இப்படி எங்க கட்சியினரின் வெற்றி வாய்ப்பைப் பறித்த திமுகவினர், சொந்தக்கட்சிக்காரங்களுக்கும் சூனியத்தை வைச்சுட்டாங்க' என்று கூறுகின்றனர். அதாவது திமுக தலைமை அறிவித்த வேட்பாளர்களின் வெற்றிக்கும் பல இடங்களில் திமுகவினரே ஆப்பு வைத்துள்ளனர். மதுரை உசிலம்பட்டி நகராட்சியில் திமுக தலைமை அறிவித்த வேட்பாளர் செல்வியை போட்டி திமுக கவுன்சிலர் சகுந்தலா தோற்கடித்துள்ளார். கூடலூர் நகராட்சி தலைவர் வேட்பாளராக திமுக தலைமை அறிவித்த வெண்ணிலா, தன் சொந்த கட்சியைச் சேர்ந்த பரிமளாவால் தோற்கடிக்கப்பட்டுள்ளார். மதுரை திருமங்கலம் நகராட்சி தேர்தல், திமுக போட்டி வேட்பாளரால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குழித்துறை நகராட்சி தலைவர் பதவிக்கு திமுக தலைமை சார்பில் மெர்லின் தீபா அறிவிக்கப்பட்டிருந்தார். ஆனால், குழித்துறை திமுக நகர செயலாளர் பொன் ஆசைத்தம்பி, பாஜக ஆதரவுடன் வெற்றி பெற்ற அதிசயமும் நடந்தது. குளச்சல் நகராட்சியில் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளரான ஜான்சன் சார்லஸை அதே கட்சியைச் சேர்ந்த நசீர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகராட்சியிலும் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையம் நகராட்சி தலைவருக்குப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அமுதாவை, அதே கட்சி செல்வராஜ் தோற்கடித்துள்ளார். இது போன்ற பல சம்பவங்கள் தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றுள்ளது.

'கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக சார்பில் போட்டி வேட்பாளர்களாக நின்று வெற்றிப் பெற்றவர்களை ராஜினாமா செய்ய வைத்து கூட்டணி அறத்தை காக்க வேண்டுமென' விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் வேண்டுகோள் விடுத்தனர். இதற்கு, 'தலைமை அறிவித்ததை மீறி தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக தங்கள் பொறுப்பை விட்டு விலக வேண்டும். விலகாவிட்டால் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று கழகத் தலைவர் என்ற முறையில் எச்சரிக்கிறேன்' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக ரியாக்ட் செய்தார்.

ஆனால், விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒதுக்கப்பட்ட நெல்லிக்குப்பம் நகராட்சியில் எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் ஜெயந்தியின் கணவர் ராதாகிருஷ்ணன், பதவியை ராஜினாமா செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக மூத்த நிர்வாகி ஒருவரிடம் பேசிய போது, 'இன்று நாடு இருக்கும் சூழலில் கூட்டணி கட்சிகளை அரவணைத்துச் செல்வதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மிகச்சிறப்பாகவே செயல்படுகிறார். மற்ற மாநிலங்களில் இந்த நிலை இல்லை. உள்ளாட்சி நகர்ப்புற தேர்தல் கூட்டணி கட்சியினரும் பொறுப்புகளுக்கு வர வேண்டும் என்றும் முதல்வர் ஆசைப்பட்டார். ஆனால், சில இடங்களில் அது நடைபெறவில்லை. இந்த மோசமான அரசியல், திமுகவில் பல ஆண்டுகளாக தொடர்கிறது. இதற்கு முதல்வர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கட்சி நிர்வாகிகள் ஒன்றுக்கு மேற்பட்ட பதவிகளில் இருக்கக்கூடாது என்று கடந்த 2018-ஆம் ஆண்டே ஸ்டாலின் வலியுறுத்தினார். ஆனால், அது இன்னும் செயலாக்கம் பெறவில்லை. எனவே, திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு கோரிக்கை வைப்பதற்குப் பதில், கட்சி நடவடிக்கைக்கு எதிராக செயல்பட்டவர்களை உடனடியாக அவர் கட்டம் கட்ட வேண்டும்' என்றார்.

எம்.சங்கத்தமிழன்
எம்.சங்கத்தமிழன்

இது தொடர்பாக விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் எம்.சங்கத்தமிழனிடம் கேட்ட போது, ‘தமிழகத்தில் கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான பதவிகளை திமுக பல இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது கண்டனத்திற்குரியது. விடுதலைச்சிறுத்தைகளுக்கு ஒதுக்கப்பட் 16 இடங்களில் 8 இடங்களை கைப்பற்றியுள்ளது. கட்சிக் கட்டுப்பாட்டை மீறி சாதிய வன்மத்துடன் பல இடங்களில் இது போன்ற செயல்களில் திமுகவினர் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய பயிற்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அளிக்க வேண்டும். இன்று இந்தியாவின் எதிர்கால அரசியலின் வழிகாட்டியாக உள்ள முதல்வர் ஸ்டாலின், கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுகவினரை உடனடியாக கட்சி பதவிகளில் இருந்து நீக்க வேண்டும்’ என்று கூறினார். செய்வாரா முதல்வர் மு.க.ஸ்டாலின்?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in