`அன்று எதிர்க்கட்சியாக இருந்தபோது நீங்கள் என்ன சொன்னீர்கள்?'- முதல்வர் ஸ்டாலினுக்கு சீமான் கேள்வி

`அன்று எதிர்க்கட்சியாக இருந்தபோது நீங்கள் என்ன சொன்னீர்கள்?'- முதல்வர் ஸ்டாலினுக்கு சீமான் கேள்வி

"மக்களுக்கு சேவை செய்பவர்களை வீதியில் சென்று போராட தள்ளுவது மிகவும் கொடுமை. இதனை முதல்வர் கவனத்தில் எடுத்துக் கொண்டு ஒப்பந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்" என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தினார்.

கரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட 2422 ஒப்பந்த செவிலியர்களை தமிழக அரசு புத்தாண்டு அன்று திடீரென பணியிட நீக்கம் செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்ய கோரியும் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரியும் செவிலியர்கள் மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் 5-வது நாளாக நடைபெற்று வரும் ஒப்பந்த செவிலியர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று ஆதரவு தெரிவித்தார். இதன் பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், "கரோனா பரவிய காலத்தில் அரசு மருத்துவர்களும் செவிலியர்களும் தெய்வங்கள் போலவும் தேவதைகள் போலவும் இந்த மக்களுக்கும் ஆட்சியாளர்களுக்கு தெரிந்தார்கள். இன்று இந்த கரோனா நோய் முழுவதுமாக ஒழியவில்லை, குறைந்திருக்கிறது. அவ்வளவுதான்.

அந்த நேரத்தில் கூடுதலாக பணியில் அமர்த்தப்பட்ட செவிலியர்கள் எவ்வளவு அர்ப்பணிப்போடு பணி செய்தார்கள் என்பது நமக்கு தெரியும். கரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்து போன மருத்துவர்கள், செவிலியர்களின் எண்ணிக்கை அதிகம். செவிலியர்கள் என்றால் நர்ஸ் தானே என்று நீங்கள் நினைக்கலாம். அப்படி எல்லாம் இல்லை. என்னுடைய தனிப்பட்ட கருத்து, அன்னை தெரசா விட்டுச்சென்ற பணியை அன்றாடம் செய்து கொண்டிருக்கின்ற பெருமக்களாகத்தான் செவிலியர்களை நான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இந்தப் போராட்டம் ஒன்றும் புதிதல்ல. ஏற்கெனவே பல்லாயிரக்கணக்கான செவிலியர்கள் கூடி போராடினார்கள். அந்தப் போராட்டத்திலும் நான் பங்கேற்றேன். அன்றைக்கு எதிர்க்கட்சியாக இருக்கின்ற தற்போது நம்முடைய முதல்வர் இந்த செவிலியர்கள் நிரந்தரமாக பணியமறுத்தப்படுவார்கள் என்று கொடுத்த வாக்குறுதி இருக்கிறது. அதைத்தான் நிறைவேற்ற சொல்கிறார்கள்.

அப்படி நிரந்தரமாக பணி அமர்த்தாமல் 2,422 செவிலியர்களை புத்தாண்டு அன்று பணி நீக்கம் செய்த உத்தரவு தான் போராட்டத்துக்கான காரணமாக இருக்கிறது. தொடர்ச்சியாக 5-வது நாளாக பட்டினியாக இருந்து சேலத்தில் போராடினார்கள். இன்று தலைநகரில் அனுமதி பெற்று போராடக் காரணம், அரசு கவனத்தை ஈர்த்து இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாத என்ற நம்பிக்கையில் தான். இவர்கள் நிரந்தர பணி கேட்கிறார்கள். பயிற்சி எடுத்தவர்கள். கல்லூரிக்கு போகும் பெண்கள், எங்களுக்கு மாதம் 1000 ரூபாய் கொடுங்கள் என்று கேட்கவில்லையே. அவர்களுக்கு 916 கோடி ஒதுக்கி மாதம் 1000 ரூபாய் கொடுக்க எப்படி திட்டம் தீட்டினார்கள். அவர்கள் கேட்டார்களா? கேட்டு போராடியவர்களுக்கு பிரச்சினையை தீர்த்து வைக்காமல், நீங்கள் கேட்காத இவர்களுக்கு எப்படி கொடுத்தீர்கள்?

இந்த நாட்டில் கேட்கப்படாமல் கொடுப்பது ஒன்றே ஒன்று. ஓட்டுக்கு காசு கொடுப்பதுதான். மற்றபடி எல்லாம் போராடி கேட்டு அப்பமும் பெற முடியாத நிறைவேற்றப்படாத சூழ்நிலை தான் இங்கே இருக்கிறது. அதிகாரிகள் தவறாக தகவல் கொடுக்கிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறார்கள். அப்படி அதிகாரிகள் சொல்வதைக் கேட்டு நீங்கள் வேலை செய்வீர்களானால் எதற்கு அந்த பதவி, பொறுப்பு உங்களுக்கு. உங்களுக்கு தெரியாதா இவர்களின் கோரிக்கை நியாயம் என்று. இரண்டு நாட்களுக்கு முன்பு ஆசிரியர் போராடினார்கள். இன்று செவிலியர்கள் போராடுகிறார்கள். இதற்கு முன்பு மருத்துவர்கள் போராடினார்கள். சேவை செய்பவர்கள் எல்லோரும் வீட்டில் வந்து போராடினால் சேவை ஒன்று எதற்கு. எங்களுக்கு நிதி இல்லை. மத்திய அரசு உதவவில்லை. மத்திய அரசுக்கு நிதியை யார் கொடுத்தது. மத்திய அரசுக்கு என்று நிதி வலிமை கிடையாது. மாநில அரசுகள் கொடுக்கிறது. முதல் மாநிலம் மகாராஷ்டிரா. 2-வது மாநிலம் தமிழ்நாடு. இந்த நாட்டின் பொருளாதாரத்தை வலிமையடைய செய்வதில் அதிகப்படியான நிதியை கொடுப்பதில் தமிழ்நாடு 2-வது இடத்தில் இருக்கிறது. என் மக்களுக்கு ஊதியத்தை வழங்க முடியவில்லை.

அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய முடியவில்லை. பின்னர் எதற்கு அந்த வருமானத்தை மத்திய அரசுக்கு கொடுக்க வேண்டும். நாங்கள் தான் இந்தியாவின் நம்பர் ஒன் என்று அவர்கள் பெருமையாக பேசுகிறார்கள். இதையெல்லாம் சரி பண்ணுங்கள். நாங்களே செல்வோம் நீங்க எல்லாம் நம்பர் ஒன் என்று. மக்களுக்கு சேவை செய்பவர்களை வீதியில் சென்று போராட தள்ளுவது மிகவும் கொடுமை. இதனை முதல்வர் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆங்கில புத்தாண்டில் செய்த தவறை தமிழ் புத்தாண்டில் சரி செய்யுங்கள். பணிநீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் அனைவருக்கும் பணியை உறுதி செய்ய வேண்டும். ஒப்பந்த பணியாளர்களாக நியமிக்கப்பட்ட அவர்களை நிரந்தர பணியாளராக அமர்த்த வேண்டும். போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து அரசு இதை நிறைவேற்றும் என்று நான் நம்புகிறேன்" என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in