`இந்தப் பதிவாளரை வைத்து மருத்துவ கவுன்சில் தேர்தல் நடத்தினால் நேர்மையாக நடைபெறாது'- அண்ணாமலை

`இந்தப் பதிவாளரை வைத்து மருத்துவ கவுன்சில் தேர்தல் நடத்தினால் நேர்மையாக நடைபெறாது'- அண்ணாமலை

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தல் ஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையில் நேர்மையாக  நடக்கட்டும், மருத்துவர்களுக்கு நம்பிக்கை பிறக்கட்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், `தமிழ்நாட்டில் உள்ள மருத்துவர்களின் படிப்பு, பயிற்சி, பணி, பாதுகாப்பு, நெறிமுறைகளை உருவாக்கிச் செயல்படுத்தும் அதிகாரம் பெற்ற அமைப்பு தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் ஆகும். அந்த  கவுன்சில், தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவர்களால், தங்களைத் தாங்களே, நிர்வாகம் செய்து கொள்ளும், அதிகாரம் பெற்ற சுயசார்பு அமைப்பாகும். அதில் ஆளும் கட்சியோ, அல்லது வேறு எந்த  அமைப்புக்களும் தலையிட அதிகாரம் இல்லை.

ஆனால் ஆளும் கட்சியின் ஆதரவு பெற்ற அரசு மருத்துவர்களே இதில் பெரும்பாலும் போட்டியிட்டு வெற்றி பெறுகின்றனர். தமிழக மருத்துவ கவுன்சிலுக்கு கடந்த 19.10. 2022.  அன்று தேர்தல் அறிவிப்பு வெளியானது.  தபால் வாக்குச்சீட்டு மூலம் டிச.19  லிருந்து 2023  ஜன.19 வரை தேர்தல் நடைபெற உள்ளது. சுமார் ஒன்றரை லட்சம் மருத்துவர்கள் உறுப்பினர்களாக உள்ள நிலையில்  ஜனநாயகமுறையில் தேர்தல் நடைபெற்று  தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவர்கள் ஏழு பேர் அங்கத்தினர்களாக பதவியேற்க உள்ளனர். 

ஆனால் தேர்தல் அறிவிப்புக்கு முன்பு வெளியிடப்படவேண்டிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவில்லை. மிகுந்த வற்புறுத்தலுக்கு பின்பு கிடைத்த வாக்காளர் பட்டியலில் ஏகப்பட்ட குளறுபடிகள்.  மறைந்த தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தலைவராக இருந்த டாக்டர் ஜெயசீலன் மத்தியாஸ்,  டாக்டர் டி.கே. கணேசன்,  டாக்டர் கருணாநிதி உள்ளிட்ட  இறந்த மருத்துவர்கள் 117 பேரின்  பெயர்கள் இப்பட்டியலில் உள்ளன.

சரியான வாக்காளர் பட்டியல் இல்லாமல் தமிழக மருத்துவ கவுன்சில் தேர்தல் நடத்தப்படுவது முற்றிலும் ஜனநாயகத்துக்கு விரோதமானது. மருத்துவர்கள் தங்களுக்கு வாக்கு உரிமையை, உறுதி செய்து கொள்ள ஏதுவாக வாக்காளர் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படவில்லை. இப்படிப்பட்ட பல ஐயப்பாடுகளைக் கொண்ட இந்த தேர்தல் முறையாக, சரியாக நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது

தபால் வாக்கு சீட்டு முறையில்  நடத்தப்படும் தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. ஆகையால் இதை  ஆன்லைன் முறையில் நடத்தப்பட வேண்டும் என்பது பெரும்பாலான மருத்துவர்களின் கருத்தாக உள்ளது. இதுகுறித்து மதுரையைச் சேர்ந்த மருத்துவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு ஒன்றையும் தாக்கல் செய்துள்ளார்.  மேலும் இந்த தேர்தலை நடத்தக்கூடிய பதிவாளர் நியமனமும் முறைப்படி நடைபெறவில்லை என்று தெரிய வருகிறது. அவர் 63 வயதாகியும் இந்த பணியில் தொடர்கிறார். அதற்குரிய உத்தரவை முறையானபடி அரசிடம் பெற்றதாக தகவல் இல்லை. ஆகவே இப்படிப்பட்ட ஒரு பதிவாளரை வைத்துக் கொண்டு தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் இல்லை. எனவே தேர்தல் நேர்மையாக நடைபெற  ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் தேர்தலை நடத்த வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். இதுவே பெரும்பாலான மருத்துவர்களின் விருப்பமும் ஆகும்' என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in