`சட்டையை கிழித்துக்கொண்டு ஸ்டாலின் முதலில் ஓடிவந்தது ஆளுநரை பார்க்கத்தான்'- கனிமொழிக்கு அண்ணாமலை பதில்

`சட்டையை கிழித்துக்கொண்டு ஸ்டாலின் முதலில் ஓடிவந்தது ஆளுநரை பார்க்கத்தான்'- கனிமொழிக்கு அண்ணாமலை பதில்

"எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் இருக்கும் போது சட்டசபையில் ஒரு பிரச்சினையானபோது சட்டை எல்லாம் கிழித்து அவர் அங்கிருந்து முதலில் ஓடி வந்தது ஆளுநர் மாளிகை தான்" என்று திமுக எம்பி கனிமொழிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.

தமிழக ஆளுநர் ரவியை ராஜ்பவனில் இன்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "தமிழக காவல்துறை ஒரு அரசியல் கட்சியைச் சார்ந்து அவர்களுக்கு வேலை செய்கிறது. குறிப்பாக உளவுத்துறை அதிகாரிகள் எல்லோருமே முதல்வரின் இமேஜ் மேனேஜ்மென்டிலே மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். சாதாரண மக்களை பாதுகாப்பதற்கு அவர்களுக்கு நேரம் இல்லை. அவர்களின் மெத்தன போக்கால்தான் ஒவ்வொரு விஷயமாக வெளிப்பட்டு வருகிறது. வேறு மாநிலத்தில் கோவை போன்று ஒரு குண்டு வெடிப்பு நடக்கிறது. உடனடியாக அந்த மாநிலத்தின் காவல்துறை இரண்டு மணி நேரத்தில் சொல்கிறார்கள், இது பயங்கரவாத தாக்குதல் என்று. அடுத்த கட்ட வேலை ஆரம்பித்து விட்டோம் என்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் இன்று வரை பயங்கரவாத தாக்குதல் என்று சொல்வதற்கு கூச்சப்படுகிறார்கள். காரணம் சொல்லிவிட்டால் திமுக அரசு தங்களை பதவியில் இருந்து தூக்கி விடுவார்கள் என்று பயந்து ஏன் சொல்லணும் என்று நினைக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு அச்சமான சூழ்நிலையில் எப்படி காவல்துறை சுதந்திரமாக செயல்பட முடியும்" என்றார்.

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை பொறுத்தவரை ஆளுநர் கேட்ட விளக்கத்தை அரசு அளித்துள்ளது. இது தொடர்பாக ஆளுநரை சந்தித்து பேச மாநில சட்டத்துறை அமைச்சர் தயாராக இருந்த நிலையில், இதுவரைக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. நீங்கள் சொல்கிற மாதிரி மத்திய அரசு சம்பந்தப்பட்டது என்று ஆளுநர் முதலிலே சொல்லி இருக்கலாமே என்ற கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, "இரண்டு விஷயங்கள். அதாவது ஆளுநர், சட்டத்துறை அமைச்சர், மாநில அரசுகளின் சட்ட விவகாரம் இது. அனைவருமே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். ஆளுநரை பொறுத்தவரை குடியரசு தலைவர் நியமனம் செய்து இங்கு வந்திருக்கிறார். அவர்களுடனான தொடர்புக்குள் நாம் போவது சரியாக இருக்காது. நான் ஒரு அரசியல் கட்சியில் இருக்கிற ஒரு தொண்டன். நான் உங்களுக்கு சொல்வது என்னவென்றால், மாநில அரசு எல்லா பழியையும் ஆளுநர் மீது போட்டுவிட்டு தப்பித்து கொள்ள இயலாது. காரணம் ஆளுநர் சட்ட மசோதாவுக்கு கையெழுத்து போட்டும்கூட அதையே மாநில அரசு நிறைவேற்றவில்லை. இது முதல் கேள்வி.

இரண்டாவது கேள்வி, பிரிவு 32 படி ஆளுநர், எழுத்துப்பூர்வமாக இந்த பிரச்சினை இருக்கிறது என்று கொடுத்திருக்கலாம் என்று நமக்கு தெரிகிறது. அப்படி இருந்தும் கூட மாநில அரசு அரசாணை வெளியிடுவதற்கு ஏன் பயப்படுகிறார்கள். ஒருவேளை ஆளுநர் கையெழுத்து போட்டு மறுபடியும் உயர் நீதிமன்றத்தில் தடை வாங்கினால் திரும்ப மாநில அரசு எங்கே போகும். அதனால் ஆக்கபூர்வமான முறையில் ஆளுநருடைய கேள்விகளுக்கு சரி செய்து அந்த சட்டத்தில் இருக்கக்கூடிய சிறு ஓட்டைகள் எல்லாம் அடைக்கப்பட வேண்டும்.

இந்தியாவிலேயே எல்லா மாநிலத்திலுமே ஆன்லைன் ரம்மி விளையாட்டு தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரம்மி விளையாட்டை தடை செய்ய பல சட்ட பிரச்சினைகள் இருக்கிறது. இதனால் தான் ஆளுநர் நேரம் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று தெரிகிறது. இதை புரியாமல் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக திமுகவினர் தொடர்ந்து ஆளுநரை பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார்.

ஆளுநர் பதவியே காலாவதியான பதவி என்று திமுக எம்பி கனிமொழி கூறி இருக்கிறாரே என்ற கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, "அக்கா கனிமொழி அவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். அவருடைய சகோதரர் எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் இருக்கும் போது சட்டசபையில் ஒரு பிரச்சினையானபோது சட்டை எல்லாம் கிழித்து அவர் அங்கிருந்து முதலில் ஓடி வந்தது ஆளுநர் மாளிகை தான். இந்த விமர்சனத்தை அப்போது கனிமொழி வைத்திருக்க வேண்டும். அவருடைய தந்தையார் தமிழ்நாட்டில் இதற்கு முன்பு இருந்த ஆளுநர் பற்றி பேசினார், பஞ்சாப் சிங்கம். இது போன்ற ஒரு ஆளுநர் இந்தியாவுக்கு வேண்டும் என்று சொன்னார். கனிமொழி பழைய சரித்திரத்தை பார்த்து பேச வேண்டும்.

இப்போது ஆட்சியில் இருக்கோம், ஆளுநர் என்பது ஒரு நியமன உறுப்பினர், எங்களிடம் யாரும் கேள்வி கேட்கக்கூடாது, எந்தவிதமான அடாவடியும் செய்வோம், கேட்பதற்கு காரணம் இருக்கக் கூடாது என்பதற்காக வாயை மாத்தி பேசி, பேசக்கூடிய வார்த்தைகளையும் மாற்றி பேசினால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? கனிமொழி ஒரு நல்ல அரசியல்வாதி. அவர் அரசியல் நிர்பந்தத்துக்காக பேசாமல் உண்மையை பேச வேண்டும். கலைஞர் கருணாநிதி, ஆளுநரை பற்றி என்ன சொன்னார். இவர்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது எத்தனை முறை ஆளுநரை வந்து பார்த்தார்கள். பெட்டி பெட்டியாக பண்டல் பண்டலாக ஊழல் புகாருடன் ஆளுநர் அலுவலகத்தில் தான் திமுக தலைவர் ஸ்டாலின் குடியிருந்தார். ஆளுநர் மாளிகை பக்கத்தில் டென்ட் போட்டு தான் உட்கார்ந்திருந்தார். ஆனால் இன்றைக்கு அவர்கள் மாற்றி பேசுவது வேதனையாகவும் அதிர்ச்சி அளிப்பதாகவும் இருக்கிறது" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in