நீட் விவகாரம்; பேரவையிலிருந்து அதிமுக வெளிநடப்பு

முதல்வர் தாக்கல் செய்த தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றம்
நீட் விவகாரம்; பேரவையிலிருந்து அதிமுக வெளிநடப்பு

நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்குக் கோரும் தீர்மானத்தை பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார். இது தொடர்பாக நடந்த விவாதத்தை அடுத்து, அதிமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

இன்று சட்டப்பேரவைக்கு அதிமுக எம்எல்ஏ-க்கள் அனைவரும் கருப்புப் பட்டை அணிந்து வந்திருந்தனர். நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட தனுஷ் மறைவுக்காகவும், வாணியம்பாடியில் சமூக ஆர்வலர் வெட்டிக் கொல்லப்பட்டதைக் கண்டித்தும் கருப்புப் பட்டை அணிந்து வந்ததாக அவர்கள் தரப்பில் சொல்லப்பட்டது.

இந்த நிலையில் பேரவை நிகழ்வுகள் தொடங்கியதுமே எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, வாணியம்பாடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினோ, நீட் தேர்வு தொடர்பாக பேரவையில் மசோதா கொண்டு வருகிறோம்; இதை எதிர்க்கட்சியும் இணைந்து நிறைவேற்றித்தர வேண்டும் என கேட்டுக் கொண்டார். ஆனால், ‘நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று அளித்த தேர்தல் வாக்குறுதி என்ன ஆனது’ என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

இதைத் தொடந்து ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் அதிமுக உறுப்பினர்களுக்கும் இடையே நீட் விவகாரம் தொடர்பாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. முடிவில் அதிமுக எம்எல்ஏ-க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதைத் தொடர்ந்து நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்குப் பெறும் தீர்மானத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் தாக்கல் செய்தார். குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானம், மேல் நடவடிக்கைக்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

Related Stories

No stories found.